அரசு ஊழியர்களுக்கு அவசர அறிவிப்பு: களஞ்சியம் செயலியில் 25-ம் தேதிக்குள் இதை செய்ய தவறாதீர்கள்!
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கருவூலத்துறை எச்சரிக்கை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் புதிய NHIS (New Health Insurance Scheme) அடையாள அட்டை பெறுவதற்கு, தங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்களை வரும் 25-ம் தேதிக்குள் 'களஞ்சியம்' (Kalanjiyam) செயலியில் கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என கருவூலத்துறை அறிவித்துள்ளது.
களஞ்சியம் செயலியில் விவரங்களை பதிவேற்றுவது எப்படி?
சேலம் மாவட்ட கருவூல அலுவலர் ஸ்ரீதர்மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, அரசு ஊழியர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்:
- முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து களஞ்சியம் செயலியை (Kalanjiyam App) பதிவிறக்கம் செய்ய வேண்டும். ஏற்கனவே செயலி இருந்தால் அதனைப் புதுப்பிக்க (Update) வேண்டும்.
- செயலியில் 'குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்' என்ற விருப்பத்தைத் (Option) தேர்வு செய்ய வேண்டும்.
- ஏற்கனவே பட்டியலில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களை முறைப்படி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- புதிய குடும்ப உறுப்பினர்களைச் சேர்க்க விரும்பினால், உரிய ஆதார் ஆவணங்களின் அடிப்படையில் தகவல்களைப் பூர்த்தி செய்து பதிவு செய்யலாம்.
செப்டம்பர் 1 முதல் NHIS டிஜிட்டல் கார்டு பதிவிறக்கம்!
அனைத்து விவரங்களையும் 25-ம் தேதிக்குள் சரியாகப் பதிவேற்றம் செய்பவர்கள், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தங்களுக்கான NHIS மின்னணு அடையாள அட்டையை (Digital Card) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான முக்கிய அறிவிப்பு
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மதுபாலன் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓய்வூதியர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டு அட்டை செப்டம்பர் 1-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.
இதற்காக ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட கருவூலம் அல்லது சார்நிலைக் கருவூலங்களில் முழு விவரங்களையும் வரும் 24-ம் தேதிக்குள் நேரில் அளிக்க வேண்டும் அல்லது dtonklnhis@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
நாளை கருவூல அலுவலகங்கள் இயங்கும்!
இந்தக் காப்பீட்டு அட்டைப் பணிகள் மிகவும் அவசரமானது என்பதால், இப்பணியின் காரணமாக நாளை (22-ம் தேதி) மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூல அலுவலகங்களும் வழக்கம்போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்கள் விவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.