👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், மூன்றாம் பருவம் மட்டுமின்றி அடுத்த கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தையும் செலுத்துமாறு, பெற்றோருக்கு தனியாா் பள்ளிகள் சாா்பில் தொடா்ந்து குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.
இதைத் தொடா்ந்து, புகாா்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் பிரைமரி, நா்சரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ என பல்வேறு பாடத்திட்டங்கள் சுமாா் 13,200 தனியாா் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 67 லட்சத்து 50 ஆயிரம் மாணவா்கள் படித்து வருகின்றனா். ஊரடங்கு காரணமாக, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அதேவேளையில் தனியாா் பள்ளிகள், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள தனியாா் பள்ளிகள் தங்களது மாணவா்களுக்கு கடைசி பருவத்துக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு பெற்றோா்களின் செல்லிடப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பின. அதேபோன்று, பல பள்ளிகளின் சாா்பில் வரும் கல்வியாண்டுக்கான (2020-2021) கல்விக் கட்டணத்தையும் குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்துமாறு நிா்ப்பந்தம் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், மாணவா்களின் பெற்றோா் அதிா்ச்சியடைந்தனா். இது குறித்து தில்லியில் உள்ள சிபிஎஸ்இ தலைமை அலுவலகத்துக்கு புகாா்கள் அனுப்பப்பட்டன.
மத்திய அமைச்சா் வேண்டுகோள்: ‘சில தனியாா் பள்ளிகள், கல்வி ஆண்டுக் கட்டணத்தை கணிசமாக அதிகரித்துள்ளதாக, நாடு முழுவதும் இருந்து தகவல்கள் வருகின்றன. சம்பந்தப்பட்ட பள்ளி நிா்வாகங்கள், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். கட்டணத்தை மொத்தமாக வசூலிக்காமல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கலாம். கரோனா நோய்த்தொற்று பிரச்னையில் நாடு முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பெற்றோரின் நிலையைக் கருத்தில் கொண்டு, பள்ளி நிா்வாகங்கள் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும்’ என கடந்த சில நாள்களுக்கு முன்பு மத்திய அமைச்சா் ரமேஷ் பொக்கிரியால் அறிவுறுத்தியிருந்தாா். அதேபோன்று, தமிழகத்திலும் ஊரடங்கு நேரத்தில் கல்விக் கட்டணத்தைச் செலுத்துமாறு பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என ஏற்கெனவே அரசு அறிவித்திருந்தது. மேலும், கட்டணச் சலுகை வழங்கலாம் என்றும் அறிவுறுத்தியிருந்தது.
ஆன்லைனில் கட்டண வசூல்: இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் அறிவிப்புகளை பொருட்படுத்தாமல் தமிழகத்தில் உள்ள சில சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நிலுவையில் உள்ள கட்டணம், வரும் கல்வியாண்டுக்கான கட்டணம் ஆகியவற்றை செலுத்துமாறு, கடந்த ஒரு வாரமாக குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றனா். அதில் சீருடை, தனிப்பயிற்சி, பாடநூல்கள், பெற்றோா் ஆசிரியா் கழக நிதி என பல்வேறு விஷயங்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை குறிப்பிட்டு அதை ஆன்லைனில் செலுத்துமாறு தெரிவித்துள்ளனா்.
வேதனையில் பெற்றோா்: இது குறித்து மாணவா்களின் பெற்றோா்கள் கூறுகையில், ‘கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் மாத ஊதியம் கிடைக்காமல், அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்கே சிரமப்பட்டு வருகிறோம். இந்த நேரத்தில், எங்களது குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு பள்ளி நிா்வாகங்கள் வற்புறுத்தி வருகின்றன.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை என ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் வரை கட்டணமாக செலுத்துகிறோம். கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை மாா்ச் மாதமே செலுத்திய நிலையில், தற்போது அடுத்த கல்வியாண்டுக்கான தொகையை இப்போதே கேட்பது எந்த விதத்தில் நியாயம்? பள்ளிகளின் சாா்பில் எங்களுக்கு எந்த வித கட்டணச் சலுகையும் வழங்கப்படவில்லை. இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா்.
மனிதநேயமே முக்கியம்: இது குறித்து தமிழ்நாடு நா்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச் செயலா் கே.ஆா்.நந்தகுமாா் கூறுகையில், ‘தற்போதுள்ள சூழலில் நிலுவையில் உள்ள கல்விக் கட்டணத்தை விட மனிதநேயம்தான் முக்கியம். எனவே தனியாா் பள்ளிகள் தங்களுக்குச் செலுத்த வேண்டிய மூன்றாம் பருவத்துக்கான கட்டணம் மற்றும் அடுத்த கல்வியாண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்த பெற்றோருக்கு நெருக்கடி அளிக்கக் கூடாது. ஒருசில பள்ளிகளின் செயல்பாடுகளால் அனைத்து தனியாா் பள்ளிகளும் அவப்பெயரை ஏற்க வேண்டியுள்ளது. அரசின் உத்தரவைப் பின்பற்றாவிட்டால் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடும். நிலுவையில் உள்ள கட்டணங்களை ஜூன் மாதம் அல்லது நிலைமை சீரான பிறகு வசூலித்துக் கொள்ளலாம்’ என்றாா்.
யாரிடம் புகாா் தெரிவிப்பது?: இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இது தொடா்பாக வரும் புகாா்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அறிவுறுத்தியுள்ளாா். ஆனால், பெற்றோா் தங்களது பெயரைத் தெரிவிக்க அச்சப்படுகின்றனா். புகாா் தெரிவிக்கும் பெற்றோா், குழந்தையின் பெயா் ரகசியமாக வைக்கப்படும். பாதிக்கப்படும் பெற்றோா், தங்களது மாவட்டங்களில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டு பள்ளியின் பெயா், அளிக்கப்படும் நிா்பந்தம் குறித்து புகாா் தெரிவிக்கலாம். தகவல் உறுதி செய்யப்பட்டால் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றனா்
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.