தமிழகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க, 12 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுடன், சென்னை, தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர், இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினார். பின், அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், 19 மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முக கவசங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளன.
அரசு மருத்துவமனைகளில், 22 ஆயிரத்து, 19 படுக்கைகள்; தனியார் மருத்துவமனைகளில், 10 ஆயிரத்து, 322 படுக்கைகள் தயாராக உள்ளன.துரித பரிசோதனை உபகரணங்கள், நான்கு லட்சம் வாங்க, 'ஆர்டர்' கொடுக்கப்பட்டுள்ளது; இன்று, 50 ஆயிரம் வந்து விடும். மத்திய அரசு, இன்று காலை, 20 ஆயிரம் உபகரணங்களை வழங்க உள்ளது.
வீடுகளுக்கு சென்று, காய்கறிகள் விற்பனை செய்ய, நடமாடும் காய்கறி விற்பனை நிலையங்கள் துவக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும், 9,500 நடமாடும் காய்கறி கடைகள் துவக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான, சி.எம்.டி.ஏ., சார்பில், 1௦௦ நடமாடும் காய்கறி கடைகள் செயல்படுகின்றன.
மளிகை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு உள்ள பொருட்கள், கூட்டுறவுத் துறை சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து மளிகை பொருட்களை, தடையின்றி கொண்டு வர, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதியோர், மாற்றுத் திறனாளிகள், 73 ஆயிரத்து, 834 பேருக்கு, திருமண மண்டபம் மற்றும் சமுதாய கூடங்களில், மூன்று வேளை உணவு வழங்கப்படுகிறது.
தடையுத்தரவை நீட்டிப்பது குறித்து, நோயின் நிலைமையை பார்த்து, முடிவு செய்யப்படும். தொற்று பரவல் அதிகமாக உள்ளது. தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நோயை கட்டுப்படுத்த, மருத்துவ குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு ஆலோசனை பெற்று, அரசு முடிவு செய்யும்.
தமிழகம், கொரோனா நோய் பரவலில், மூன்றாம் நிலைக்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இரண்டாவது நிலையிலேயே கட்டுப்படுத்த, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உடனடி நோய் பரிசோதனை உபகரணம் வந்ததும், நோய் தொற்று உள்ளவர்களின், குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு, முதலில் பரிசோதனை செய்யப்படும்.
கோரிக்கை:
அடுத்து, அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கும், தொடர்பில் இருந்தவர்களுக்கும், பரிசோதனை செய்யப்படும். பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும், நிதி வழங்கக் கோரி, கடிதம் எழுதியுள்ளோம்; பதிலை எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில், சட்டத்திற்கு புறம்பாக வந்த வெளிநாட்டினர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். வீணாக சுற்றி திரிவோர் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசுக்கு, மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; வீணாக வெளியில் செல்ல வேண்டாம். ஒரு வாரத்திற்கு தேவையான பொருட்களை, வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்; தினமும் வெளியில் செல்லாதீர்கள். ஒரு உயிர் கூட பறிபோகக் கூடாது என்பது, எங்கள் எண்ணம். நோயை ஒழிக்க, அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
பணியில் இறந்தால் ரூ.10 லட்சம்!
முதல்வர் கூறியதாவது: சென்னை, மயிலாப்பூர் போக்குவரத்து காவலர், அருண்காந்தி, 33, கொரோனா நோய் தடுப்பு பணியில் இருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். அவரது குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கவும், குடும்பத்தில், ஒருவருக்கு தகுதி அடிப்படையில், அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள், காவலர்கள், துாய்மை பணியாளர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், பணியின் போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு, அரசு பணி வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.
முதல்வர் நிவாரண நிதிக்கு, 101 கோடி ரூபாய் வந்துள்ளது. தமிழக மக்கள் தாராளமாக, கொரோனா தடுப்பு பணிக்கு, நிதி வழங்க வேண்டும். சிறு தொகையை அனுப்ப, அச்சப்பட வேண்டியதில்லை. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயையும், உயிரை காப்பாற்ற, அரசு பயன்படுத்தும். தமிழக மக்கள் கருணை உள்ளத்தோடு, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க, தங்களால் முடிந்த நிதியை வழங்க வேண்டும் என, முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.