குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 10, 2020

குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திரைப்பட வகைகளில், குழந்தைகளுக்கான திரைப்படங்களுக்கு என்று ஒரு தனிச்சிறப்பு உள்ளது. இவை குழந்தைகளுக்கான படங்களாக மட்டும் இல்லாமல், எல்லோருக்குமான திரைப்படங்களாகவே இருந்திருக்கின்றன. ஒரு பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படத்தைக் காட்டிலும், மிக சிறந்த அறிவியல் புனைவு (science fiction), மற்றும் வேறு வகை திரைப்படங்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் அனைத்து வயதினரையும் தொட்டு, மொழிகளைக் கடந்து, மதங்களைக் கடந்து அன்பையும், ஆனந்தத்தையும் பரவச்செய்து, பார்வையளனின் மனதில் குழந்தைப் பருவ கண்ணோட்டத்தையும் விதைத்து விடுகிறது. உங்கள் வீட்டுக் குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய 10 திரைப்படங்கள் இதோ:
ஹோம் அலோன் ( Home Alone)
என் பள்ளியில் படிக்கும்போது, ஹாஸ்டல் நாட்களில் நான் பார்த்து ரசித்து, வியந்த முதல் திரைப்படம், சென்ற ஆண்டு தன் 25 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 25 வருடங்களுக்கு பின் மீண்டும் திரையிடப்பட்ட ‘ஹோம் அலோன். 1990 ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி, ஹோம் அலோன் படத்தின் முதல் பாகம் வெளிவந்தது. இதன் அமெரிக்கத் திரைப்படத்தின் வசூல் சாதனை சுமார் 20 வருடங்கள் முறியடிக்கப்படவில்லை. இது பெற்ற வெற்றியைத் தொடர்ந்து ‘ஹோம் அலோன்’ வரிசையில் ஹோம் அலோன் – 2, ஹோம் அலோன் – 3, ஹோம் அலோன் – 4, ஹோம் அலோன் – 5 வெளியாகி ரசிகர்களைப் பரவசப்படுத்தின. கெவின், எட்டு வயது சிறுவன், அவரது குடும்பத்தினர் பாரிஸ்க்கு செல்லும்போது தவறுதலாக அவனை வீட்டிலேயே விட்டுவிட்டு கிளம்பிவிடுகிறார்கள். தனி சிறுவனாய் வீட்டில் இருக்கும் கெவின், வீட்டிற்கு திருட வந்த இரு திருடர்களுக்கு தன் சாமர்த்தியத்தைக் காட்டிக் திருடர்களை வீட்டினுள் வர விடாமல் அசர வைக்கும் கெவினின் சாகசம்தான் இந்தத் திரைப்படம். குழந்தைகளும் பெரியவர்களும் சேர்ந்து பார்த்து ரசிக்க நல்ல படம். குழந்தைகள் திரைப்படத்தில் இது Comdey, Adventure வகையைச் சார்ந்தது .
ஈ.டி. (ET extra terrestrial)
ஸ்டீவன் ஸ்பில்பெர்க் இயக்கிய இந்தத் திரைப்படம். பூமிக்கு வந்த ஏலியனுக்கு, சிறுவர்களுக்கும் இடையேயான நட்பையும் அன்பையும் பேசுகிறது. குழந்தைகளின் கற்பனை வளத்தை மெருகேற்றுகிற பல காட்சிகளையும் அற்புதமான கதையையும் கொண்ட இந்தப் படத்தை ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுடன் பார்க்க வேண்டும். 1982 இல் வெளியான இந்தப் படம் நான்கு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றிருக்கிறது. குழந்தைகள் திரைப்படத்தில் இது அறிவியல் புனைவு (science fiction) வகையைச் சார்ந்தது. குழந்தைகளின் மிக விருப்பமான திரைப்படம் இது.
வேர் ஸ் த பிரண்ட்ஸ் ஹோம் (Where Is the Friend's Home?)
அப்பாஸ் கியரஸ்தமி எனும் உலகப் புகழ்பெற்ற இயக்குனரின் கலை படைப்பில் உருவான குழந்தைகளுக்கான திரைப்படம்தான் வேர் இஸ் த பிரண்ட்ஸ் ஹோம். உற்சாகமும் மனிதநேயமுள்ள குழந்தைகளின் உலகை இந்தத் திரைப்படம் பிரிதிபலிப்பதாய் அமைந்துள்ளது. தன் சக பள்ளி தோழனின் வீட்டு பாட ஏட்டினைக் கொடுக்க பக்கத்து மலைக்கிராமத்துக்கு பயணிக்கும் சிறுவன் அஹ்மத் மற்றும் அவனின் நண்பன் ரிடா நமட்ஸதேவை கதையின் மையமாய் வைத்து காட்சி படைப்பில் எதார்த்த பாணியில் எடுக்கப்பட்டது இத்திரைப்படம். தன் நண்பனின் வீட்டை தேடி பல மலைக்கிராமமாக அலைந்தும் அதை கண்டுப்பிடிக்க முடியாத அஹ்மத், தானே தன் நண்பனுக்கான வீட்டு பாடத்தை எழுதி ஆசிரியரிடம் தன் நண்பனுக்கு நல்ல பெயர் வாங்கி தரும் அஹமத், குழந்தைகளின் நட்பு மற்றும் மனிதாபிமானதை பறைசாற்றும் படமாக உள்ளது.
தி ஒயிட் பலூன் (THE WHITE BALLOON)
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு, ஈரான் தயாராகி வரும் வேளையில், கடைத்தெருவிற்கு தன் அம்மாவுடன் செல்லும் ஏழு வயது ரசியா, கடையில் விற்கப்படும் தங்கமீனை வாங்கித் தரும்படி தன் அம்மாவிடம் கேட்கிறாள். பணம் காரணமாக முதலில் அதை மறுக்கும் அம்மாவை, தன் அண்ணன் அலி மூலமாக, அம்மாவிடம் பணம் பெற்று, தன் ஆசையை நிறைவேற்ற கடைத்தெருவுக்கு ஓடும் ரசியா, போகும் வழியில் பணத்தைத் தொலைக்கிறாள், பூட்டிய கடை வாசலில் சிக்கிக் கொள்கிறது பணம்! அதை எடுக்கப் போராடும் ரசியாவுக்கு, அண்ணன் அலி உதவ வருகிறான். பணதை மீட்கப் போராடும் குழந்தைகளுக்கு, ஒற்றை வெள்ளை பலூனோடு இருக்கும் குச்சியின் துணை கொண்டு, அப்பணத்தை மீட்க உதவி செய்வான், பலூன் விற்கும் சிறுவன் ஒருவன்! குழந்தைகள் அன்பை பரிமாற்றத்தை அழகாக காட்டும் திரைப்படம்.
ஸ்பிரிடட் அவே (Spirited Away)
சின்ன உயிரினங்களும் உயிர்கள்தான் அவற்றுக்கும் உணர்வுகள் உண்டு என்பதைச் சொல்லும் புதுமையான ஃபேன்டஸி அனிமேசன் திரைப்படம் ஸ்பிரிடட் அவே. மனிதன் மட்டுமே மேம்பட்டவன் அல்ல, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் மதிப்பு வாய்ந்தது, அன்பினால் மட்டுமே அத்தனை உயிர்களையும் வெல்லமுடியும் என்பதை கவிதை நயத்துடன் சொல்லும் திரைப்படம். குழந்தைகள் படம் போன்று தெரிந்தாலும், இதனை நிச்சயம் பெரியவர்கள் பார்க்கவும்.
தி ரெட் பலூன் (The Red Balloon)
ஒரு சிறுவனுக்கும், சிகப்பு வண்ண பலூனுக்கும் இடையேயான நட்பைப் பேசுகிறது இந்தப் படம். சிறுவனுக்கும் பலூனுக்கும் இடையில் நடக்கிற காட்சிகள் குழந்தைகளை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும், அதே நேரத்தில் முற்றிலும் இயந்திரமாய் மாறிப்போன இன்றைய வாழ்க்கைச் சூழலில் இப்படத்தைப் பார்க்கும்போது நாமும் இழந்துவிட்ட குழந்தைப் பருவத்தை நிச்சயம் பெறுவோம் என்று உறுதியாகச் சொல்ல முடியும். 1956 இல் வெளியான இக்குறும்படம் 34 நிமிடங்களே ஓடக்கூடியது. கேன்ஸ் ,ஆஸ்கர் உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள இக்குறும்படத்தை இயக்கியவர் ஆல்பர்ட் லாமோரைஸ்.
கலர் ஆஃப் பாரடைஸ்' (Color of Paradise)
கலர் ஆஃப் பாரடைஸ் எனும் ஈரானிய திரைப்படத்தை மஜித் மஜிதி இயக்கியிருந்தார். தன் தாயையும், கண்பார்வையும் இழந்த மொஹமத் எனும் சிறுவன் டெஹ்ரானில் உள்ள ஒரு சிறப்புப் பள்ளியில் படித்துக்கொண்டிருகிறான். விடுமுறையில் பள்ளிக்கூடத்திலிருந்து வெளியே வந்து தன் தந்தை வருகைக்காக ஒரு தோட்டத்தில் அவன் காத்திருக்கும்போது ஒரு சிட்டுக்குருவியின் குஞ்சு கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடுகிறது. இதை ஓசையால் அறிந்த மொஹமத் மெல்லமெல்ல தட்டுத்தடுமாறி சென்று அந்த குருவிக்குஞ்சை தனது சட்டைப் பாக்கெட்டுக்குள் போட்டு மரத்தில் ஏறி குருவிக்குஞ்சை எடுத்து குருவிக்கூட்டில் வைக்கும்போது அவனது விரல்களை குருவி கவ்வுவதை ரசிக்கும் கண்பார்வையற்ற மொஹமதை பார்க்கும் அனைவருக்கும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் அன்பு உள்ளம் புரிய வரும். கண்பார்வை இல்லாததால் தன் தந்தையால் நேசிக்கப்படாத ஒரு குழந்தையைப் பற்றியது இந்தத் திரைப்படம்.
சில்ரன் ஆப் ஹெவன் (Children of Heaven)
சொர்க்கத்தின் குழந்தைகள் 1997 ஆம் ஆண்டு ஈரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும். சிறந்த பிற மொழித் திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இப்படத்தினை மஜித் மஜிதி எழுதி இயக்கியிருந்தார். தன் தங்கை சாராவின் காலணிகளைத் தவறவிட்டுவிடும் அலி என்ற சிறுவன், வீடு வந்ததும், செருப்பைக் கேட்கும் தன் தங்கையிடம் அழுதுகொண்டே விவரத்தைக் கூறுகிறான். பெற்றோரின் ஏழ்மையைப் புரிந்துகொள்ளும் சாரா, அலியிடம் உள்ள காலணிகளையே தான் பள்ளிக்குச் செல்லும்போது பயன்படுத்துகிறாள், இதனால் தினமும் பள்ளிக்கு தாமதமாய் செல்கின்றான் அலி, இதற்கிடையில் தொலைந்த தன் காலணிகளை வைத்திற்க்கும் ஒரு சிறுமியை பின்தொடர்ந்து செல்லும் சாராவும், அலியும், தங்களை விட வறுமையில் வாடும் கண்பார்வை இல்லாத அந்த சிறுமியின் தந்தையை கண்டதும், இரக்கம் கொண்டு தாங்கள் தேடி வந்த காலனிகளைக் கண்டுபிடித்தும், அதை திருப்பித்தர கேட்காமல் அமைதியாய் திரும்பும் காட்சிகளில் இக்குழந்தைகள் சொர்கத்தின் குழந்தைகளாய் தோன்றுவார்கள். இறுதி காட்சிகளில் காலணிகளுக்காக போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அலியின் ஓடிப் படிந்த ரணங்களை எல்லாம் வருடி முத்தம் தர வரும் மீன்களை கொண்டு காட்சியில் கவிதை படைத்திருப்பார் இயக்குநர்.
தி வே ஹோம் ( the way home)
கிராமத்தில் வாழும் பாட்டிக்கும், நகரத்தில் வாழ்ந்த பேரனுக்கும் இடையேயான உறவையும், நிபந்தனையற்ற அன்பின் வலிமையையும் உணர்வு பூர்வமாக சித்தரிக்கிறது இந்தப் படம். எந்த திரைக்கதை யுக்திகளயும் புகுத்தாமல், எளிய நடையில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் பார்ப்பவர் நெஞ்சை உருக்க கூடிய வல்லமை பெற்றது. ஒரு வார்த்தைகூட பேசாத, வெகுவாக முகபாவங்களைக் கூட மாறாத பாட்டியின் பாசம், பார்ப்போரின் கண்களில் கண்ணீர் வரவழைத்து விடும். இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் நிச்சயம் பாட்டியின் அருமையை புரிந்துகொள்வார்கள். 2002 ல் கொரிய மொழியில் வெளியான இப்படத்தை இயக்கியவர் ஹியாங் லீ என்ற பெண்.
ஹயாத் (Hayat)
மாட்ரிட் குழந்தைகள் திரைப்பட விழா, இசுத்தான்புல் சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, அர்ஜெண்டினா குழந்தைகள் திரைப்பட விழா, உருகுவே குழந்தைகள் திரைப்பட விழா, பெலாரஸ் குழந்தைகள் மற்றும் சர்வதேச திரைப்பட விழா மற்றும் பல திரைப்பட விழாக்களில் விருதுகள்பெற்ற ஹையாத் (Hayat ) எனும் பாரசீக மொழித் திரைப்படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது. இந்தத் திரைப்படத்தினை ஈரானிய இயக்குனர் கோலாம் ரேஸா ரமீஸானி (Gholam Reza Ramezani) இயக்கியுள்ளார். ஹயாத், 12 வயது சிறுமி. ஈரானின் கிராமம் ஒன்றில் வசிக்கிறார். மிகக் கடினமாக பள்ளித் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கிறாள். தேர்வுக்கு முதல் நாள் இரவில் அவளது தந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். வீட்டில் இருக்கும் கைக்குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஹையாத்துக்கு. ஆனால் ஹையாத் தேர்வு எழுதவே விரும்புகிறார். மிகக் கடின போராட்டத்திற்குப் பிறகு சற்று தாமதமாக தேர்வு எழுதச் செல்கிறார் ஹையாத். ஹையாத் எனும் பாரசீகச் சொல்லுக்கு வாழ்க்கை என்று பொருள்.
குழந்தைகள் தினத்தில் சிறந்த பரிசாக இந்தப் படங்களின் குறுந்தகடுகளை உங்கள் குழந்தைகளுக்கு வாங்கித் தரலாம். குழந்தைகள் மட்டுமல்ல... அவர்களை நேசிக்கும் பெற்றோர்களும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படங்கள் இவை.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews