தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள், தமிழில் இடம்பெற வேண்டும். உத்தரவு தேவையானால், தமிழின் எழுத்து அளவை விட சிறிதாக, ஆங்கிலத்தில் பெயர் இடம்பெறலாம் என, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து, பல ஆண்டுகள் ஆகி விட்டன. ஆனால் அதை, தனியார் நிறுவனங்கள் மீறி வந்த நிலையில், தற்போது தமிழக அரசு செயல்படும் தலைமைச் செயலகத்திலேயே, தமிழ் புறக்கணிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதை, அறிய முடிகிறது.
தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் மக்களுக்காக மக்களால் நடத்தப்படுவதுதான் மக்களாட்சி. மக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில்- ஒரு மாநிலத்தில் அல்லது நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழி ஆட்சி மொழியாக அமைதல் வேண்டும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் மொழியாகத் தமிழ்மொழி விளங்குகின்றது. எனவே தமிழ் நாட்டில் தமிழ்மொழி தான் ஆட்சி மொழி என்று 27.12.1956 இல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் 1957 ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் தமிழ்மொழிதான் ஆட்சிமொழி என்று உறுதிபடுத்தப்பட்டது.
ஆட்சிமொழிக் குழு தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை அரசு அலுவலகங்களில் நடைமுறைப்படுத்துவதற்குத் தமிழக அரசு ஆட்சிமொழிக் குழு ஒன்றை 1957 ஆம் ஆண்டில் அமைத்தது. இக்குழு ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அலுவலகங்களில் விதிகள், விதித்தொகுப்புகள், நடைமுறை நூல்கள், படிவங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கிலத்தில் இருந்தன. இந்த நடைமுறைகளை உடனடியாகத் தமிழுக்கு மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. எனவே இக்குழுவின் பணிகள் அனைத்தையும் தமிழ் வளர்ச்சித் துறை என்றத் தனித் துறையை உருவாக்கி ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தை நிறைவேற்றிட அரசு முடிவு செய்தது.
தமிழ் ஆட்சிமொழித் திட்டத்தை தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் பரவலாகவும் முழுமையாகவும் செயல்படுத்தும் நோக்கில் அரசு தமிழ் வளர்ச்சி இயக்ககம் எனும் தனித்துறைத் தலைமை அலுவலகத்தை 1971 ஆம் ஆண்டில் தோற்றுவித்தது. அரசு அலுவலகங்களில் ஆட்சி மொழித் திட்டத்தைச் செயல்படுத்துதல் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தமிழ்வளர்ச்சி இயக்ககம் மேற்கொண்டு வருகிறது.
பணி அமைப்பு தமிழ் வளர்ச்சி இயக்குநரை துறைத் தலைமை அலுவலராகக் கொண்டு செயல்படும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் சென்னையில் அமைந்துள்ளது. மாநகராட்சியாக உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகங்களும் பிற மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் அமைந்துள்ள இடங்களில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகங்களும் அமைந்துள்ளன.
தமிழ் வளர்ச்சித் துறையின் பணி தமிழ் வளர்ச்சித் துறையின் தலையாய பணி ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் ஆகும். இதன்படி அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சித் துறையின் அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
துறைத் தலைமை அலுவலகங்களின் ஆய்வு துறைத்தலைமை அலுவலங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சிகள் ஆகியவற்றைத் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆய்வு செய்கிறார். தன்னாட்சி நிறுவனங்கள், வாரியங்கள், கழகங்கள், இணையங்கள், ஆகியவற்றின் துறைத் தலைமை அலுவலகங்களையும் தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும்.
மண்டல நிலை/மாவட்ட நிலை/சார்நிலை அலுவலகங்களில் ஆய்வு
தமிழ் வளர்ச்சி இயக்குநரால் ஆய்வு செய்யப்பெறும் துறைத் தலைமை அலுவலகங்கள் நீங்கலாகத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் துறைகளின் மண்டல, மாவட்ட, சார்நிலை அலுவலகங்களைத் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர்களும், மாவட்டங்களில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்களும் ஆய்வு செய்கின்றனர்.
ஆட்சிமொழி ஆய்வு ஆட்சிமொழித் திட்ட ஆய்வுத் தொடர்பாக இயக்குநர், துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், முன்பயணத் திட்டம் ஒன்றைத் தயார் செய்கின்றனர். தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரின் பயண நிரல் தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளர், அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பப்படுகிறது. தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்களின் பயணநிரல் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநருக்கு ஏற்புக்காக அனுப்பப்பெறுகின்றன.
ஆட்சி மொழித் திட்டச் செயற்பாட்டில் அலுவலர்களுக்கும் பணியாளர்களுக்கும் ஏற்படும் ஐயப்பாடுகள் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்களால் ஆய்வின் போது களையப் பெறுகின்றன. பின்னர் ஆய்வுக் குறிப்புகளின் அடிப்படையில் அலுவலகத்திற்கு ஆய்வறிக்கை அனுப்பிவைக்கப்படுகிறது. ஆய்வின்போது காணப்பட்ட முன்னேற்ற நிலை அறிக்கையில் பாராட்டப்படுகிறது. குறைபாடுகள் இருப்பின் அவை அனைத்தும் ஆய்வறிக்கையில் சுட்டிக் காட்டப் பெறுகின்றன. சுட்டிக் காட்டப்பட்ட குறைபாடுகள் முற்றிலும் களைவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ளுமாறும் குறைகளைக் களைந்து பத்திவாரியான குறைகளைவு அறிக்கையை விரைந்து அனுப்புமாறும் ஆய்வு செய்யப்பட்ட அலுவலகத் தலைவருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
அவரால் அனுப்பப்பெறும் குறைகளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுக்கேற்பத் தேவைப்படும் நோ்வுகளில் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பெற்று அவ்வலுவலகத்தில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கம் முழுமையாக அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பெறுகின்றன.
ஆட்சிமொழிப் பயிலரங்கமும்-கருத்தரங்கமும் ஆட்சிமொழித் திட்டம் தொடர்பாக அரசு அலுவலர்களும் பணியாளர்களும் நன்கு அறிந்துகொண்டு செயல்பட வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கமும் நடத்தப் பெறுகின்றன. ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடத்துவதற்கு ரூ.30,000 மும் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடத்துவதற்கு ரூ.20,000 மும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது.
சிறப்புச் சொல்லகராதி அரசின் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் சொற்களைத் தொகுத்து அந்தந்தத் துறைகளுக்குரியனவாக 75 சிறப்புச் சொல்லகராதிகள் வெளியிடப்பட்டிருந்தன. தற்போது இவை ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாக வெளியிடப்பட உள்ளது.
மாதிரி வரைவுகள் அரசுத்துறை அலுவலகங்கள், நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள், இணையங்கள் ஆகியவற்றில் தமிழில் குறிப்புகள், வரைவுகள் நன்கு எழுதப்படுவதற்குத் துணை புரியும் வகையில் மாதிரி வரைவுகள் என்ற நூல் அச்சிடப்பட்டு அதன்படிகள் விலையேதுமின்றி வழங்கப்பட வேண்டும்.
சொல்வங்கி புதிதாகப் பயன்பாட்டிற்கு வரும் ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பொதுமக்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஊடகங்களின் பயன்பாட்டிற்கு அளிக்கும் வகையில் சொல்வங்கி ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஆட்சிமொழித் திட்ட அரசாணைகள் ஆட்சி மொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல ஆணைகளைப் பிறப்பித்துள்ளது. இன்றியமையாத சில ஆணைகள் மட்டும் இப்பகுதியில் சுட்டிக்காட்டப் பெறுகிறது.
அரசு அலுவலர்களும் பணியாளர்களும் தமிழில் மட்டுமே ஒப்பமிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண். 1134, நாள்.26.01.1978.
அலுவலகப் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பதிவேடுகளும் தமிழில் மட்டுமே பேணப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு ஆணை எண்.2618, நாள்.30.01.1981.
பணிப்பதிவேடுகளில் அனைத்துப் பதிவுகளும் தமிழில் இருத்தல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பொதுத்துறை நிலையாணை எண்.1993, நாள்.28.06.1971
உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், மைய, மற்றும் பிற மாநில அரசுகள், தூதரகங்கள், ஆங்கிலத்தில் மட்டுமே தொடர்புகள் கொண்டுள்ள நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே ஆட்சிமொழித் திட்டத்தில் விலக்களிக்கப்பட்டுள்ளன. விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த இனங்கள் தவிர பிற அனைத்திலும் கடிதப் போக்குவரத்துகள் தமிழிலேயே அமைதல் வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. அரசு கல்வித்துறை நிலையாணை எண்.432, நாள்.31.10.1986.
அலுவலக நடைமுறையில் திருவள்ளுவர் ஆண்டினைக் குறிப்பிட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. பணியாளர் நிருவாகச் சீர்திருத்தத்துறை அரசாணை நிலை எண்.91, நாள்.03.02.1981.
அலுவலக வரைவுகள், கோப்புகள், செயல்முறை ஆணைகள் அனைத்திலும் சீர்திருத்த எழுத்துக்களையே பயன்படுத்த வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது. கல்வித்துறை நிலையாணை எண். 1875, நாள்.19.10.1978.
அலுவலகப் பெயர்ப்பலகைகளில் தமிழ் எழுத்துக்களின் அளவு இடம் பெற வேண்டுவது தொடர்பாகவும் ஆணையிட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி மற்றம் பண்பாட்டுத்துறை அரசாணை நிலை எண். 349, நாள்,14.10.1987.
ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இவை போன்று பல அரசாணைகளை அரசு பிறப்பித்துள்ளது.
ஆட்சிமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இத்துடன் தமிழ் வளர்ச்சிக்கான சில திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது.
அரசு இணையத்தளங்கள் மக்களுக்கு மிக அத்தியாவசியமான டெண்டர் தளம், நெடுஞ்சாலைத் துறை இணயத் தளம் https://www.tnhighways.gov.in/index.php/en காவல்துறை, நகர் ஊரமைப்பு இயக்ககம், உணவு பாதுகாப்பு துறை, போன்ற இணையத் தளங்களில் மருந்துக்கும் தமிழ் பார்க்க முடியாது.
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் மானியம், ஆனால் அரசுத் துறை மற்றும் இணையத் தளங்கள் கார்பொரேட் கம்பெனிகளுக்காகவும், வெளிமாநிலத்தவர்களுக்குமாகத் தான் இருக்கிறது. தமிழக அரசு இணையத்தளமே தமிழுக்கு தட்டுப்பாடு தான். தமிழ் வாழ்க என்ற வாசகம் மட்டுமே அரசுத் துறைகளில் இருக்கும், ஆனால், அரசாணைகள் , சட்டங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே கிடைக்கும். தமிழ் வளர்ச்சித் துறையோ, தமிழ் ஆர்வலர்களோ இதைக் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. மொத்தத்தில் தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.