மக்கள் உண்மையில் பயன்பெற வேண்டும் என்றால் ‘கல்வி’ மாநில பட்டியலில்தான் இருக்க வேண்டும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 04, 2019

மக்கள் உண்மையில் பயன்பெற வேண்டும் என்றால் ‘கல்வி’ மாநில பட்டியலில்தான் இருக்க வேண்டும்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உலகில் அனைத்து கூட்டாட்சி நாடுகளிலும் சட்டம் இயற்றும் அதிகாரங்கள் மத்திய அரசுக்கும் மாநில / மாகாண அரசுகளுக்கும் இடையே பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு, நிதி போன்ற துறைகள் தொடர்பான அதிகாரங்கள் மத்திய அரசுக்கு வழங்கப்பட்டுள்ளன. மற்ற துறைகளின் சட்டம் இயற்றும் அதிகாரங்களும் மாநில / மாகாண அரசுகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன. இதுதான் உலகளாவிய நடைமுறை. ஆங்கிலேயர் ஆட்சியில் 1935ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்திலும் கல்வித்துறை மாநிலங்கள் பட்டியலில் இருந்தது. ஆனால், இந்தியாவில் நெருக்கடி நிலை 1975-77 அமலில் இருந்தபோது, முக்கியமான சில துறைகள் 42வது அரசமைப்பு சட்டத்திருத்தத்தின் மூலம் 2வது (மாநில) பட்டியலில் இருந்து 3வது (பொது) பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இவ்வாறு மாற்றப்பட்டதில் கல்வி துறையும் ஒன்றாகும். இதன் பின்னர் அரசமைப்பு சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல திருத்தங்கள் காரணமாகவும், உச்ச நீதிமன்றம் அளித்த சில விளக்கங்கள் காரணமாகவும் மத்திய அரசு அதிகார மிக்கதாக மாறியது. மாநிலங்கள் மேலும் பலவீனமானவையாக மாற்றப்பட்டன. இந்த நிலை தொடர்கிறது.
கல்வி 3வது பட்டியலுக்கு மாற்றப்பட்ட பின்னர் முதுநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளில் குறைந்தது 15 சதவீத இடங்கள் மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அனைத்து இந்திய அளவில் ஒதுக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, மத்திய அரசால் நாடு முழுவதும் நடத்தப்படும் ஒரு பொது நுழைவுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் இயற்றப்படும். அத்தகைய சட்டம் இயற்றப்பட்டால், மாநிலங்களுக்கு உள்ளே இருக்கும் மருத்துவ மற்றும் இதர கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பது பற்றி தங்கள் சொந்த உரிமைகளையும் அதிகாரத்தையும் அது பறித்துவிடும் என எச்சரிக்கப்பட்டது உண்மையாகியுள்ளது.
கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகள் இடங்களுக்கும் இதுபோன்ற தேசிய அளவிலான சேர்க்கை நடைமுறை எதிர்காலத்தில் அறிமுகம் செய்தால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. இந்த அளவுக்கு கல்வி நிறுவனங்களில் மத்திய அரசின் தலையீடு இருப்பது கற்பனை செய்தும் பார்க்க இயலாத கேடான பின்விளைவுகளை ஏற்படுத்தும். மழலையர் வகுப்புகள் தொடங்கி அனைத்து கல்வி நிறுவனங்கள் தொடர்பான மாநில அரசுகளின் ஒட்டுமொத்த அதிகாரங்களும் மத்திய அரசுக்கு மாற்றி அளிப்பதில் சென்று முடியும். இத்தகைய சூழ்நிலையில் தொடக்கக் கல்வி முதல் இந்தி மொழி ஒரு கட்டாய பாடமாக இருக்கும் என்றோ அல்லது இந்திதான் பாடமொழியாக இருக்கும் என்றோ அல்லது தொடக்க கல்வி முதல் உயர் நிலைக்கல்வி வரை மத்திய இடைநிலை கல்விக்குழுவின் நடைமுறையிலான கல்விதான் நாடு முழுவதிலும் பின்பற்றப்படும் என்றோ மத்திய அரசு சட்டம் ஒன்றை இயற்றி நடைமுறைப்படுத்தினால் அதை எதிர்த்து எவரும் எதுவும் செய்ய முடியாது. மாநிலங்களின் அதிகாரத்துக்குக்கும் மாநிலத்தின் பிராந்திய வட்டார உள்ளூர் ஆட்சி மொழிகளை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயிற்றுவிக்கும் மொழியாக வைத்துக் கொள்வதற்கான மாநிலத்தின் உரிமைகளுக்கும் அடிக்கப்படும் சாவு மணியாக அது விளங்கும். அதன் பின்னர் மாநில அரசுகளால் செய்ய இயன்றது ஒன்றேதான் இருக்க முடியும். அதாவது அரசியலமைப்பு சட்டம் 29(1) மற்றும் 30(1) ஆகிய பிரிவுகளின்கீழ் சிறுபான்மை மொழி மாநிலம் என்ற நிலையை பெறுவதற்கும் போராட வேண்டிய நிலையில்தான் மாநிலம் அரசுகள் இருக்கும். மொழி சிறுபான்மையினர் என்ற சலுகையை பெறும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். கல்வி 3வது பட்டியலில் (பொது பட்டியலில்) நீடிக்கும் வரையில் இந்திய மக்களின் மனதில் மேலே கூறப்பட்ட அச்சம் இருந்து கொண்டுதான் இருக்கும். இது இந்தியாவில் உள்ள மத்திய கூட்டாட்சி அரசுக்கு நன்மை சேர்ப்பதாக இருக்காது என்று அரசியலமைப்பு சட்ட நிபுணரும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான ஏ.கே.ராஜன் 2015ல் வெளியிட்ட தனது ஆங்கில புத்தகம் ‘Spare a moment’ என்பதில் எச்சரித்துள்ளார். அவரது எச்சரிக்கை தற்போது நடைமுறைக்கு வந்து ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை. கலைத்துள்ளது.
படிப்படியாக... மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் தேர்வும் மருத்துவ முதுநிலை படிப்பில் சேர்வதற்கு நெக்ஸ்ட் தேர்வும் நடைமுறைக்கு வந்துள்ளது.கடந்த 1956ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சில் என்ற ஜனநாயக அமைப்பை கலைத்துவிட்டு அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற எதேச்சதிகார அமைப்பை உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மருத்துவர்கள், மருத்துவக் கல்வி மாணவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியபோதிலும், மருத்துவக் கல்வி துறை முழுவதையும் தன் அதிகார வரம்பிற்குள் எடுத்துக் கொண்டுள்ளது மத்திய அரசு. மற்ற நாடுகளில் உலகில் முக்கிய நாடுகளில் கல்வி துறை மாநில, மாகாண அரசுகளிடம்தான் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில: 1. அமெரிக்கா, 2. கனடா, 3. ஆஸ்திரேலியா, 4. ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் மத்திய அரசிடம் இல்லாமல் கல்வி துறை மாநில, மாகாண, நகரியங்களின் நிர்வாகத்தில் உள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews