மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் உள்ளிட்ட சிறப்புகளால் அரசுப் பள்ளியைச் சீரமைத்த கோவை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 25, 2019

மாணவர்களின் வாசிப்புப் பழக்கம் உள்ளிட்ட சிறப்புகளால் அரசுப் பள்ளியைச் சீரமைத்த கோவை கல்லூரியின் முன்னாள் மாணவர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேலராதாநல்லூரில் செயல்பட்டுவரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மாணவர்களைப் படைப்பாளிகளாகவும், சிறந்த குடிமகன்களாகவும் உருவாக்கும் கற்றல் பயிற்சிகளை வழங்கி வருவது குறித்து, கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கி பல்வேறு செய்திகள் இந்து தமிழ் நாளிதழில் வெளியிடப்பட்டிருந்தன. குறிப்பாக, பள்ளி மாணவர்களின் புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறித்து, அவர்களின் குடும்பத்தாரிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, இல்லங்கள் தோறும் நூலகம் அமைத்தல், மரபுவழி விளையாட்டுகள் மூலம் கற்றல் திறனை மேம்படுத்துதல், மாணவர்களையே கதைகளை உருவாக்கச்சொல்லி படைப்பாளி களாக உருவாக்குதல் போன்றவை இப்பள்ளியில் செயல்படுத்தப் படுவது குறித்து அந்தச் செய்திகளில் விரிவாக விளக்கப் பட்டிருந்தது.
இந்தச் செய்திகளை ‘இந்து தமிழ்’ நாளிதழில் படித்து அறிந்த கோயம்புத்தூர் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் (1986- 1987) முன்னாள் மாணவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேலராதாநல்லூர் வந்து இப்பள்ளியை பார்வையிட்டனர். தொடர்ந்து, பெங்களூருவில் வசித்து வரும் முன்னாள் மாணவர் பத்மநாபன் தலைமையில் ஒருங்கிணைந்து ரூ.1.40 லட்சமும், அமெரிக்காவில் வசித்து வரும் சரவண சுதந்திரா என்பவர் இந்தியா டீம் என்ற அமைப்பின் மூலமாக ரூ.2.10 லட்சமும், சென்னை வருமான வரித் துறையினரின் கஜா புயல் மீட்புக் குழுவினர் மற்றும் வருமான வரித் துறை இணை இயக்குநர் ரங்கராஜ் ஆகியோர் சார்பில் ரூ.50 ஆயிரமும் என ரூ.4 லட்சம் நன்கொடையாக அளிக்கப்பட்டது. அந்த நிதியில், பள்ளிக் கட்டிடம் சீரமைக்கப்பட்டது மட்டுமின்றி, பள்ளியின் சுற்றுச்சுவர்களில், கண்ணைக் கவரும் வண்ண மயமான ஓவியங்கள், தேசத் தலைவர்கள், தமிழறிஞர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களான நம்மாழ்வார், சலீம் அலி, நெல் ஜெயராமன் போன்றோரின் படங்கள், இந்தியா, தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம் ஆகியவற்றின் நில வரைபடங்கள் வரையப்பட்டு, அரசுப் பள்ளி புதுப்பொலிவு பெற்றுள்ளது.
மேலும், இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் மணிமாறன், தனது சொந்த நிதியாக ரூ.1.20 லட்சம் செலவில் பள்ளி வளாகத்தில் பராமரிப்பின்றி இருந்த விளையாட்டு மைதானத்தைச் சீரமைத்து, சுற்றுச்சுவர் அமைத்துக் கொடுத்துள்ளார். பள்ளியை ரம்மியமான சூழலில் வைத்துக்கொள்வதற்காக, தற்போது பள்ளி வளாகத்தில் 100 மரக்கன்றுகளை நட்டுப் பராமரித்து வருகின்றனர். இப்பள்ளியின் தோற்றப் பொலிவு மாணவர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதை, பள்ளியின் வருகைப் பதிவேடும், பள்ளிக்கு வரும் மாணவர்களின் முகத்தில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியும் உணர்த்துகின்றன. இதுகுறித்து பள்ளி ஆசிரியர் மணிமாறன் கூறியதாவது: கடந்த 2016-ம் ஆண்டு முதல் பள்ளியின் செயல்பாடுகள் குறித்த சிறப்புக் கட்டுரைகள், ‘இந்து தமிழ்’ நாளிதழில் இடம் பெற்று வருகின்றன. மேலும், இந்து தமிழ் நாளிதழின் தலையங்கத்திலும் பள்ளி மாணவர்களிடம் உள்ள புத்தக வாசிப்புப் பழக்கம் குறித்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் படித்த பிஎஸ்ஜி கல்லூரி முன்னாள் மாணவர்கள், பள்ளியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாணவர்களின் கற்றல் ஆர்வத்தைப் பார்த்து, அதற்கேற்ற ரம்மியமான சூழலை உருவாக்கித் தருவதற்குப் பள்ளிக் கட்டிடங்களை புத்துருவாக்கம் செய்யும் யோசனை மட்டுமின்றி, நன்கொடையையும் வழங்கினர். இதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட கல்வி அதிகாரிகளின் அனுமதியும் உடனடியாகக் கிடைத்தது. இதன் பயனாகத்தான் தற்போது புதுப்பொலிவுடன் எங்கள் பள்ளி காட்சி தருகிறது. இதற்கெல்லாம் அடித்தளமாக இருப்பது மாணவர்களிடம் உள்ள கற்றல் ஆர்வம்தான். மேலும், இத்தகைய உதவியை செய்த பிஎஸ்ஜி கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் வருமான வரித் துறையினருக்கும், செய்திப் பணி மூலம் எங்கள் பள்ளியை உச்சத்தில் கொண்டு சேர்க்கும் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கும் பள்ளித் தலைமையாசிரியர் சரவண ராஜன் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews