முயற்சியால் வென்றவர்கள்..! அன்று… நிலத் தரகர் இன்று… தொழிலதிபர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 27, 2019

முயற்சியால் வென்றவர்கள்..! அன்று… நிலத் தரகர் இன்று… தொழிலதிபர்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
இந்த உலகத்தில் பிறந்து வாழ்ந்து மறைபவர் பலகோடி பேர். ஆனால், ஒருசிலரால் மட்டுமே பெயர் சொல்லும் அளவில் வெற்றிபெற முடிகிறது. அதற்குக் காரணம் செயற்கரிய செயலைச் செய்யும் அளவுக்கு உடலைப் பெற்ற நாம் அதற்கான முற்சிகளை செய்வதில்தான் இருக்கிறது. உடுத்த உடையும், இருக்க இடமும், உண்ண உணவும் கிடைத்துவிட்டாலே வாழ்வில் வெற்றி பெற்றுவிட்டதாக வட்டமிட்டு அதற்குள் வாழ்ந்துவிடுகிறோம். வள்ளுவர் சொன்னதுபோல் உள்ளுவது உயர் வுள்ளலாக இருந்தால்தான் வெல்வது பேர் சொல்லும்படியாக அமையும். அப்படி வெற்றிபெற்ற தொழிலதிபர்கள் பகிர்ந்துகொண்ட அனுபவக் குறிப்புகளே இந்தப் பகுதியில் இடம்பெற உள்ளன. கரும்பின் ருசி அதன் இனிப்பான சாறு. அந்தச் சாறு இல்லை என்றால் அது வெறும் சக்கைதான். உடம்பினால் உழைக்க முடியும் என்ற உறுதி ஏற்படும்போது பயம் அகன்று போய்விடும். உடம்பு என்ற கரும்பிலிருந்துதான் வெற்றி என்ற சாற்றைப் பிழிய முடியும்.
வெற்றியைப் பெற தவறிவிட்டால் நாளடைவில் நம் உடம்பு சாறு வற்றிய கரும்புபோல ஆகிவிடும். உடம்பை வருத்தாமல், உழைக்காமல் உயர்ந்துவிட முடியாது. இந்த அனைத்துக்கும் ஆரம்பப் புள்ளி முயற்சி. அவ்வாறு முயற்சியாலும் உழைப்பாலும் உயர்ந்து நிற்கும் பரிமளம் பிராபர்டி டெவலப்பர்ஸ் உரிமையாளர் செந்தில்குமார் வெற்றிக் கதையை நம்மோடு பகிர்ந்துகொண்டார்…‘‘எனது சொந்த ஊர் காங்கேயம் அருகில் இருக்கும் நத்தக்காடையூர் என்னும் சிறு கிராமம். விவசாயக் குடும் பத்தில் பிறந்த நான் எம்.காம் படித்துள் ளேன். 2004ம் ஆண்டு பிழைப்புக்காக கோயம்புத்தூர் வந்தேன். ஆரம்பத்தில் அரிசி பாலிஷ் செய்யும் மெஷின் தயாரித்து விற்பனை செய்யும் வேலையைத்தான் செய்தேன். ஆனால், நாளடைவில் தொழில் போட்டியில் அந்தத் தொழில் நலிவடைந்துவிட்டது. பிறகு ரியல் எஸ்டேட் தொழிலில் தரகராக என் வாழ்க்கையைத் தொடங்கினேன். அந்த நேரம்தான் தமிழகத்தில் கோயம்புத்தூர் காளப்பட்டி பகுதியில் நிலத்தின் மதிப்பு வரலாறு காணாதவாறு நூறு மடங்கு ஏறியது!!
வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அதிகப்படியாக கோயம்புத்தூரில் நிலங்களை வாங்கிக் குவித்த நேரமது. அக்காலகட்டத்தில் நான் அவர்களுக்கு நல்ல முறையில் நிலங்களை வாங்கித் தந்து நியாயமான முறையில் கமிஷன் பெற்று சம்பாதிக்கத் தொடங்கினேன். அச்சமயத்தில் நான் மறைமுக கமிஷன் எதையும் வைத்து வியாபாரம் செய்வதில்லை என்று மருதமலைக்கு சென்று சத்தியம் செய்துவிட்டே தரகர் தொழிலை நடத்திவந்தேன். கடவுளின் கண்களைப் பார்த்து வணங்கும் நேர்மையுடன் தொழில்புரிய வேண்டும் என்னும் வைராக்கியத்தை இன்றுபோல் அன்றும் கடைப்பிடித்து வந்தேன்’’ என்று பெருமிதத்தோடு சொல்கிறார் செந்தில்குமார். படிப்படியாக தன் முன்னேற்றத்தை விவரித்த செந்தில்குமார், ‘‘2006ம் ஆண்டு முதல் வீட்டுமனைகளை சிறிய அளவில் வாங்கி அதில் அழகிய வீடுகளை நல்ல முறையில் கட்டி விற்கத் தொடங்கினேன். சிறப்பான கட்டடக்கலை நிபுணர்களை வைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து எந்தப் பகுதியில் எந்த விலை வீடுகளுக்கு தேவைப்பாடுகள் இருக்கும் என்பதையும் கணித்து, சரியான இடத்தில் சரியான அளவுகள் கொண்ட வீட்டுமனைகளாக தேர்வு செய்து வீடுகள் கட்டி விற்றுவந்தேன்.
2012ம் ஆண்டு முதல் கோவையின் சற்று முக்கியமான இடத்தில் வீட்டு மனைகளை வாங்கி அதில் கொஞ்சம் பெரிய பட்ஜெட் வீடுகளை கட்டி விற்கத் தொடங்கினேன். வீட்டை வாங்குவோருக்குத் தனியார் மற்றும் அரசு வங்கிகளில் முறையான கடன் வசதிகளை செய்துகொடுத்ததால் வாடிக்கையாளர்கள் சிரமம் இல்லாமல் வீடுகளை என்னிடம் மகிழ்ச்சியுடன் வாங்கத் தொடங்கினார்கள்.கோயம்புத்தூரின் சீதோஷ்ண நிலை, மரியாதையான மக்கள், சிறுவாணி தண்ணீர், தொழில் வளம் போன்ற நல்ல சூழ்நிலைகள் பற்பல இருப்பதால் கோவை மாநகருக்கு வந்து குடியேறும் வேறு மாவட்ட மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தகைய மக்களுக்கு குடியிருக்க வீடு என்பது ஒரு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. அவர்களுக்கு அழகிய வீடுகளைக் கட்டித் தரும் சிறு மற்றும் பெரிய ‘பில்டர்கள்’ கோவையில் சுமார் ஆயிரம் பேருக்கும் மேல் இருக்கிறார்கள். அதிலே நானும் ஒருவனாக இருந்தேன். வாய்ப்புகளைப் பயன்படுத்தி வளர்ந்தேன்’’ என்கிறார்.
‘‘அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கு விருப்பம் குறைவதை என்னால் உணர முடிந்தது. அதனால், தனி வீடுகளையே நான் கட்டி விற்கத் தொடங்கினேன். தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்றழைக்கப்படும் கோவை மாநகரம் தொழில் துறையில் மட்டுமின்றி கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் இன்று மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து நிற்கிறது. அதையுணர்ந்து நான் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சற்று அருகில் இருக்கும் இடங்களைத் தேர்ந்தெடுத்து வீடுகள் கட்டி விற்க நினைத்தேன். அதன்படி கல்லூரி பேராசிரியர்களும், மருத்துவர்களும் நான் கட்டிய வீடுகளை தேர்ந்தெடுத்து வாங்கினார்கள். பரமபதம் விளையாட்டில் பல ஏணிகளில் ஏறிய பின்னர் ஒரு பெரிய பாம்பு கடித்தால் முன்னர் இருந்த ஆரம்ப நிலைக்கே வந்துவிடுவோம். அதுபோல்தான் தொழில் வாழ்க்கையிலும் சிலர் மேலே சென்ற வேகத்தில் கீழே வந்துவிடுகிறார்கள். அவ்வாறல்லாமல் சீரான வேகத்தில் சென்று வளமான முன்னேற்றத்தை அடைய வேண்டும். ஒரு தொழில் செய்யும்போது அந்தத் தொழிலை குறைந்தபட்சம் 10 வருடங்களுக்காவது செய்யவேண்டும். அப்போதுதான் அந்தத் தொழிலின் சூட்சுமங்களை நன்கறிந்து முன்னேறமுடியும்.
வீடுகள் கட்டும்போது, வீடுகளின் கதவு, நிலவு, ஜன்னல்களுக்குப் பயன்படும் தேக்கு போன்ற மரங்களைக் குறைந்தபட்சம் ஆறேழு மாதத்திற்கு முன்னரே நான் வாங்கி வைத்துக்கொள்வேன். அப்போதுதான் மரங்கள் நன்றாகப் பதப்பட்டு விரிசல்கள் போன்ற பிரச்னைகளின்றி இருக்கும். இப்படி தரமான கதவு ஜன்னல்களைத் தயாரித்து அமைத்துக் கொடுத்ததால் வாடிக்கையாளர்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது. கோவையைப் பொறுத்தவரை வீடுகள் கட்டி விற்கும் தொழில் நாளுக்குநாள் வளர்ந்துவருகின்றது. 1990ல் 8 லட்சம் மட்டுமே மக்கள்தொகை கொண்ட கோவை மாநகரம் இன்று 21 லட்சம் மக்கள்தொகையுடன் மாபெரும் மாநகரகமாக வளர்ந்து நிற்கின்றது. இன்னும் மேன்மேலும் வளர்வதற்கான வாய்ப்புக்களே இருப்பதால் வீடுகளுக்கான தேவைகளும் அதிகரித்தவண்ணம்தான் இருக்கும். ஒரு மனிதன் தனது தொழில் வாழ்க் கையில் எத்தகைய போராட்டத்தின் நடுவே வாழ்ந்துவந்தாலும் தனது குடும்பத்தாருக்கும் நேரத்தைச் செலவிட வேண்டும். பெற்றோர்களையும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். மனைவி மற்றும் குழந்தைகளின் அன்பையும் சிறப்பாக பெற வேண்டும்.
குடும்பத்தைக் கவனிக்காமல் தொழிலை மட்டுமே கவனித்துவந்தாலும் ‘கண்களை விற்று ஓவியம் வாங்குவது’ போலாகிவிடும். நேர்மையை மட்டும் எத்தகைய சூழ்நிலையிலும் விட்டுத்தராமல் தயங்காது உழைக்கவேண்டும். என்றென்றும் சொல்லப்பட்டு வரும் ‘உழைப்பு உயர்வு தரும்’ என்னும் பழமொழி சாதாரண வார்த்தையல்ல.... ஒரு சத்திய வாக்கு. அதனை நாம் கடைப்பிடித்தால் நிச்சயம் கரை சேருவோம். சாதாரண ஒரு தரகராக இந்தத் தொழிலை ஆரம்பித்த நான் பல கோடிகளில் வர்த்தகம் செய்யும் அளவுக்கு இன்றைக்கு வளர்ந்திருக்கிறேன். அதற்கு காரணம், எந்த ஒரு செயலைச் செய்திருந்தாலும் அதில் எந்த அளவுக்கு நாம் முயற்சி செய்திருக்கிறோம், இன்னும் எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பதை சிந்தித்துப் பார்த்ததுதான். எந்தப் பணியை எவ்வளவு திருத்தமாகச் செய்திருக்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியமே அடங்கியிருக்கிறது. இந்த வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. மேலும் வெற்றி பெறுவதற்கான திட்டங்களோடு முயற்சிகளைத் தொடருவேன்’’ என்று வெற்றிப் புன்னகையோடு முடித்தார் செந்தில்குமார்.
மேலே நீங்கள் படித்த செய்திக்கு உங்களின் Reactionஐ கீழே Click செய்தபின் WhatsAppல் Share செய்யவும் - நன்றி.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews