👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் மற்ற WhatsApp Groupல் Share செய்யுங்கள். உங்கள் Groupல் செய்திகளை விரைவில் பெற Adminகள் 8807414648 இந்த எண்ணை இணைக்கவும் - நன்றி
போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும்.
வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.
இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.
பல்வேறு தெய்வீக குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
போகி அன்று விடியற்காலை பழையப்பொருட்களை எல்லாம் ஓர் இடத்தில் குவித்து எரிப்பது வழக்கம். கொட்டு எனப்படும் போகி மோளத்தை கொட்டுவிப்பார்கள்.
இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்
போகிப் பண்டிகையின் போது ஏன் பழையதை எரிக்க வேண்டும்?
போகி பண்டிகை என்பது 'மார்கழி' மாதம் முடிந்து 'தை' மாதம் ஆரம்பிக்கும் நேரம் வருகிறது. பழையன கழிந்து புதியது புகும் நாளாக இது கொண்டாடப்படுகிறது. பழையதாகி தேவையில்லாமல் ஆகிவிட்ட பொருட்களை இந்நாளில் எரித்து விடுகிறோம். ஒரு பண்டிகையாக, கொண்டாட்டமாக இதைச் செய்கிறோம்.
முக்கியமாக விவசாயக் குடும்பங்களில் பெண்கள் அணிந்த பழைய உடைகளை எரித்து விடுவது வழக்கம். அந்தக் காலத்தில் உடைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்காது. மேலும் பெண்கள் அழுக்கு படிந்த பழைய உடைகளை தொடர்ந்து அணிந்தால் குழந்தை கருவுறுவதும் தாமதமாகும். எனவே பழைய உடைகளை எரித்துவிட்டு புத்தாடை அணிவது வழக்கமாகிப் போனது.
போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை.
முன்காலத்தில் விவசாயக் குடும்பங்களில், குழந்தைகள், அதுவும் ஆண் குழந்தைகள் அதிகமாக இருப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் உழைப்பு விவசாயத்திற்கு முக்கியம். குடும்பத்தார் தவிர மற்றவர்கள் உழைப்பை கூலிக்காக அக்காலங்களில் பயன்படுத்தியதில்லை. எனவே அதிக அளவில் ஆண்கள் உள்ள குடும்பமே நிலத்தைத் தொடர்ந்து பராமரித்து வளர்ச்சி அடையும் என்ற நிலை இருந்தது. அதே நேரத்தில் அதிகக் குழந்தைகள் பிறப்பதற்கு பெண்கள் பழைய ஆடைகளைத் தவிர்ப்பதும் அவசியமாக இருந்தது. இதுதான் போகி பண்டிகைக்கு அடிப்படை. எனவே பழையன கழிக்கும் போகிப் பண்டிகைக்கு நமது கலாச்சாரத்தில் சுகாதார நோக்கமும், அர்த்தமும் இருந்தது.
ஆனால் இப்போது நிலைமை அவ்வாறு இல்லை. எனவே, போகி கொண்டாடுகிறேன் என்று சொல்லி டயர், ப்ளாஸ்டிக் போன்றவற்றை எரித்து சுற்றுச்சூழலை மாசுபடுத்த வேண்டிய அவசியமில்லை. எனினும் பழையன கழிந்து புதியவைகளுக்கு வழிவிட வேண்டுமென்ற நோக்கம் முக்கியமானது. பழைய துணி, குப்பைகளை மட்டுமல்ல, மனதில் சேர்த்துள்ள தேவையற்ற வன்மம், மனஸ்தாபம், பகைமை உணர்ச்சி இவைகளையும் போகி அன்று எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை உற்சாகமாக ஆரம்பிப்பது அவசியமல்லவா? எனவேதான் போகிப் பண்டிகையின் நிகழ்வுகளில் மாற்றம் வந்தாலும் அடிப்படை நோக்கம் மாறவில்லை. நீங்கள் விரும்பினால், உபயோகப்படக் கூடிய பழைய பொருட்களைத் தேவைப்படுவோர்க்குக் கொடுத்து விடலாம். தை முதல் நாள் புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்