தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக அரசு பள்ளிக்கூடங்களை கண்கவர் அலங்காரங்களுடன் ஜொலிக்க வைத்துக்கொண்டிருக்கும் கல்வித்துறை அதிகாரி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 08, 2018

தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக அரசு பள்ளிக்கூடங்களை கண்கவர் அலங்காரங்களுடன் ஜொலிக்க வைத்துக்கொண்டிருக்கும் கல்வித்துறை அதிகாரி

தனியார் பள்ளிக்கூடங்களுக்கு இணையாக அரசு பள்ளிக்கூடங்களை கண்கவர் அலங்காரங்களுடன் ஜொலிக்க வைத்துக்கொண்டிருக்கிறார், கல்வித்துறை அதிகாரி கீதிகா ஜோஷி. இவர் உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் தரிகேட் மண்டல கல்வித்துறை துணை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஆய்வு செய்ய சென்றபோது அங்கு மேற்கூரைகள் பழுதாகி வகுப்பறைகள் சிதிலமடைந்த நிலையில் இருப்பதை கவனித்திருக்கிறார். மழைக்காலங்களில் தண்ணீர் வகுப்பறைக்குள் தேங்கி நிற்பதையும், மாணவர்கள் குளிரில் சிரமப்படுவதையும் அறிந்து வேதனைப்பட்டிருக்கிறார் அந்த பள்ளிக்கூடத்தை தன் சொந்த செலவில் சீரமைத்தவர், அதுபோல் பழுதடைந்த நிலையில் இருக்கும் பள்ளிகளை சீரமைக்க நிதி திரட்டி வருகிறார். இவருடைய முயற்சியால் பல பள்ளிக்கூடங்கள் தனியார் பள்ளிக்கூடங்களை போன்று அழகிய கட்டமைப்புகளுடன் மிளிர்ந்து கொண்டிருக்கின்றன. ‘‘நான் ஆய்வுக்கு சென்ற பள்ளிக்கூடம் சீர்குலைந்த நிலையில் இருந்தது. அங்கு மாணவர்களின் நிலையை பார்க்க பரிதாபமாக இருந்தது. அவர்களை என் சொந்த குழந்தை போல உணர்ந்தேன். முதலில் மேற்கூரையை பழுது பார்க்க முடிவு செய்தேன். பிறகு முழு கட்டிடத்தையும் என் சொந்த செலவில் புதுப்பித்தேன். வெறுமனே புனரமைப்பு பணி மேற்கொள்வதில் எந்த பயனும் இல்லை என்பதை உணர்ந்தேன். அதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரமும் மேம்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.
அதற்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பதே சரியான தீர்வாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். பள்ளியை முழுமையாக சீரமைத்து தேவையான பொருட்களையும் வாங்கிக்கொடுத்தேன். அதனால் நானே ஆச்சரியப்படும் வகையில் அந்த பள்ளிக்கூடம் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் காட்சியளித்தது. அதை பார்த்ததும் மற்ற பள்ளிக்கூடங்களையும் அதுபோல் ஏன் மாற்றியமைக்கக்கூடாது என்ற எண்ணம் உண்டானது. இதுபற்றி ஆசிரியர்களிடம் ஆலோசித்தேன். அவர்களும் அதற்கு சம்மதித்தார்கள். பள்ளிக்கூடத்தில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு நிதி திரட்டி கொடுத்தார்கள். முதல்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாய் திரட்டினோம்.
தரிகேட் மலைகள் சூழ்ந்த பகுதி. அங்கு குளிர் அதிகமாக இருக்கும். அதனால் மாணவர்கள் குளிரை சமாளிப்பதற்கு தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டி யிருக்கிறது. அங்கு வசிப்பவர்களில் பெரும் பாலானோர் ஏழைகள். அவர்களால் பிள்ளைகளின் படிப்பு செலவை சமாளிப்பதே சிரமமாக இருக்கிறது. மாணவர்களின் நலன் கருதி வகுப்பறையில் கட்டமைப்பு வசதிகளையும், அவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் கட்டமைப்புகளையும் உருவாக்கி வருகிறோம்’’ என்கிறார். கீதிகா ஜோஷியின் முயற்சிக்கு அரசு அதிகாரிகள், நீதிபதிகள், தன்னார்வலர்கள் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறார்கள். அந்த தொகுதி எம்.எல்.ஏ. ரூ.23 லட்சமும், முன்னாள் நீதிபதி ஒருவர் 12 லட்சம் ரூபாயும் வழங்கி இருக்கிறார்கள். அதனால் அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அல்மோரா மாவட்டத்தில் 57 பள்ளிகளில் குறுகிய காலத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கீதிஜா ஜோஷியின் முயற்சியால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

Total Pageviews