11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துகொள்ள வேண்டும்! வலுக்கும் ஆதரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, October 08, 2018

11-ம் வகுப்பு மதிப்பெண்களை உயர்கல்விக்கு எடுத்துகொள்ள வேண்டும்! வலுக்கும் ஆதரவு

10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு எனும் வழக்கத்தில் சென்ற கல்வியாண்டிலிருந்து, 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும், 11 வகுப்பு மற்றும் 12 -ம் வகுப்புத் தேர்வுகளின் மதிப்பெண்களின் கூடுதலை வைத்து, உயர்கல்விக்கான சேர்க்கை முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தது. அதன்படியே சென்ற ஆண்டு, மார்ச் மாதத்தில் 11-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மேல்படிப்புக்கு 12-ம் வகுப்பு மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும். 11-ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்தார். அவரின் இந்த முடிவுக்கு, ஆதரவும் ஒருபுறம் இருந்தாலும் கல்வியாளர்கள், பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பும் எழுந்த வண்ணமிருக்கின்றன.
சில நாள்களுக்கு முன், ஈரோட்டில் ஒரு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம், மொடக்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர், "தமிழக அரசின் இந்த முடிவு தனியார் பள்ளிகளுக்கே லாபகரமானதாக இருக்கும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பெரும் இழப்பாக இருக்கும்" என்று தெரிவிக்கும் கடிதம் அளித்தார். அந்த மாணவரிடம், இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருப்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இந்த நிலையில், பேராசிரியர் கல்விமணி, ச.மாடசாமி, பெ.மணியரசன், சு.மூர்த்தி, ஆசிரியை உமா மகேஸ்வரி உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கல்விச் செயற்பாட்டாளர்கள் அளித்திருக்கும் அறிக்கையில், அரசின் இந்த முடிவு, தனியார் பள்ளிகளில் அழுத்தத்தால் ஏற்பட்டதோ என்ற சந்தேகத்தை முன் வைக்கின்றனர். புதிய அரசாணை எண் 195, அரசாணை எண் 100-க்கு முரணாக உள்ளது என்பதோடு, அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தருவது தனியார் பள்ளிகள்தான் என்ற முடிவுக்கு ஏற்கெனவே பெற்றோர்கள் வந்திருக்கும் நிலையில், இந்த முடிவு அரசுப் பள்ளியை நோக்கி வரும் பெற்றோர்களையும் குறைத்துவிடும் என அச்சம் தெரிவிக்கின்றனர். தமிழக அரசினை நோக்கி, அரசாணை 100-ல் குறிப்பிடுவதுபோல, மேல்நிலைக்கல்வியை இரண்டு ஆண்டுகளாகக் கருதி, மதிப்பெண்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், சிறப்புத் தேர்வுகள் என அதிகளவில் வைத்து, மாணவர்களுக்கான மன அழுத்தம் கொடுக்கப்படுகிறதா என்ற கண்காணிப்பு அவசியம். இவற்றோடு ஏழு முக்கியமான கோரிக்கைகளை முன் வைக்கிறது இந்த அறிக்கை.
கல்வியாளர்களின் இந்த அறிக்கையை வெளியிட்டு, தங்கள் கோரிக்கைகளை மக்கள் மத்தியில் பரப்புரை செய்தும் வருகின்றனர். இதற்கு, நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பதற்கான அறிகுறியே கிராம சபையில் நிறைவேறிய தீர்மானங்கள். நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஒன்றியம் சங்கனான்குளம் ஊராட்சி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், பழவேரி ஊராட்சி, தர்மபுரி மாவட்டம், பென்னகரம் ஒன்றியம், பனைக்குளம் ஊராட்சி உள்ளிட்ட ஊராட்சிகளில் 11-ம் வகுப்புத் தேர்வுகளில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை, அவர்கள் கல்லூரியில் சேர்க்கும்போது கணக்கில் கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இன்னும் 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் இதே வகையிலான தீர்மானங்கள் முன் வைக்கப்பட்டு, வட்டார அதிகாரிகளின் அனுமதிக்காகக் காத்திருக்கின்றன.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

Total Pageviews