மாணவர்களின் கேள்விகளும் நீதிபதிகளின் பதிலும் :
நீதிபதிகள் மாணவர்களுடன் கலந்துரையாடல்
ஆண்கள் பாதுகாப்பு சட்டம் என்று உண்டா? மாணவரின் கேள்வி
தங்களுக்கு மறக்க முடியாத தீர்ப்பு என்ன ? ஒன்று கூறுங்களேன்.
மாணவர் ஐயப்பன் :ஆண்கள் பாதுகாப்பு சட்டம் என்று உண்டா ?
நீதிபதி பதில் : ஆண்களுக்கும்,பெண்களுக்கும் சட்டம் பொதுவானது.சில நேரங்களில் பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும்போதுதான் பெண்களுக்கு என்று தனி சட்டம் உருவானது.சட்டம் என்பது ஆண் .பெண் இருவருக்கும் பொதுவானதுதான்.
மாணவர் கார்த்திகேயன் : நுகர்வோர் நீதிமன்றம் என்பது என்ன ?
நீதிபதி பதில் : இது பொருளாதாரம்,சரக்கு விற்றல்,வாங்கல்,பொருள் குறைபாடு,எடை பிரச்சனை,விலை பிரச்சனை ,தரம்,நஷ்ட ஈடு போன்றவை சம்பந்தமாக ஏற்படும் வழக்குகளுக்கு ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் நுகர்வோர் நீதிமன்றம் உள்ளது.
மாணவர் சஞ்சீவ் : இலவச சட்ட உதவி மையம் எங்கு உள்ளது ?
நீதிபதி பதில் : அனைத்து ஊர் நீதிமன்றங்களிலும் இலவச சட்ட உதவி மையம் உள்ளது.அங்கு இதற்கென வக்கீல்கள் இருப்பார்கள்.அவர்கள் பொருளாதாரத்தில் ஒரு லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவச வழக்கறிஞர்கள் செய்து வழிகாட்டுவார்கள்.மற்றவர்கள் தகவல் பெறலாம்.
மாணவி காயத்ரி : பொதுவாக பெண்கள் பாலியில் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது புகார் கொடுக்க தயங்குவது ஏன் ?
நீதிபதி பதில் : பாலியல் புகார் வழக்கில் விசாரணை சற்று கூச்சமாகவும் ,கடுமையாகவும் இருக்கும்.அதே நேரத்தில் வழக்கு நீதிமன்ற உள் அறைக்குள் வக்கீல்கள் மட்டும் தட்டச்சர்,நீதிபதி என ஐந்து பேர் மட்டுமே விசாரிப்பார்கள்.மிகவும் பாதுகாப்பாக விசாரணை நடக்கும் .இதனால் தற்போது பொது நீதிமன்றத்தில் நடப்பது போல் அனைவர் முன்பாகவும் பாலியல் புகார் விசாரணை நடப்பதில்லை.
மாணவி ஜனஸ்ரீ : குழந்தைகள் புகார் கொடுக்க முடியுமா?
நீதிபதி பதில் : இளவளர் என்ற மைனர் வயது உடையவர்கள் புகார் கொடுக்க இயலாது.விசாரணை தேவை என்ற சமயத்தில் குழந்தை முழு விவரத்தையும் அறிந்து உள்ளதா என்கிற தகவல் தெரிந்த பின்புதான் புகார் குறித்து ஆராய முடியும்.
மாணவி பாக்யலட்சுமி : தங்களுக்கு மறக்க முடியாத தீர்ப்பு என்ன ? ஒன்று கூறுங்களேன்.
நீதிபதி பதில் : அனைத்து தீர்ப்புகளுமே மறக்க முடியாதுதான்.நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றியபோது,விதவை பெண் ஒருவர் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தனது கணவனின் உடன்பிறப்புகள் போலியான உயில் தயாரித்து தனது சொத்தினை அபகரிக்க நினைத்த வழக்கில் ,அந்த உயில் பொய்யானது என ஆராய்ந்து கண்டறிந்து தீர்ப்பு சொன்னதும்,அந்த தீர்ப்பு மேல் முறையீடு சென்றும் அதே தீர்ப்பு வழங்கப்பட்டதும் என்னால் மறக்க இயலாத தீர்ப்புகளில் ஒன்று.
மாணவர் ஈஸ்வரன் : இ .பி.கோ.என்றால் என்ன ?
நீதிபதி பதில் : இந்திய தண்டனை சட்டம் தான் இ .பி.கோ ஆகும்.
மாணவி நித்யகல்யாணி : பாலியல் குற்றங்களுக்கு என்ன தண்டனை ?சட்டம் என்ன சொல்கிறது ?
நீதிபதி பதில் : போஸ்க்கோ சட்டம் உட்பட பல்வேறு தண்டனை சட்டங்கள் உள்ளன.இதனில் மரண தண்டனை வரை உண்டு.பாலியல் புகாரில் சிக்கியவர்களுக்கு ஜாமீன் கிடையாது.அவமானம்,இழுக்கு ஆகியன ஏற்படுத்தும்.கடுமையான சட்டங்கள் இப்போது உள்ளது.
மாணவி கீர்த்தியா : உச்ச நீதிமன்றம்,உயர் நீதி மன்றம் போன்றவற்றில் பணியாற்றும் நீதிபதிகள் அவர்களாகவே சில பொது பிரச்சனைகளை வழக்காக எடுத்து கொண்டு விசாரிக்கிறார்கள் .அது போன்று நீங்கள் ஏதேனும் பொது நல வழக்கு நீங்களாக எடுத்துக்கொண்டு விசாரித்து உள்ளீர்களா?
நீதிபதி பதில் : இந்திய அரசியல் சட்டப்படி கீழமை கோர்ட்டுக்கு பொது நல வழக்கு விசாரிக்க வாய்ப்பு இல்லை.உயர் நீதிமன்றம்,உச்ச நீதிமன்றங்களுக்கு மட்டுமே இந்திய அரசியல் சட்டத்தில் உரிமை உள்ளது.
மாணவி மாதரசி : குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் எப்படி ?
நீதிபதி பதில் : குழந்தை திருமணம் சட்ட மீறலாகும்.இச்செயல் குற்றமாகும்.விதி சொல்லும் வயதுக்கு முன்னர் திருமணம் செய்து வைக்க கூடாது.அவ்வாறு தெரிந்து செய்தால் புகார் அளிக்கலாம்.
மாணவர் சபரி : சட்டம் படித்தால் என்ன,என்ன வேலைக்கு செல்லலாம் ?
நீதிபதி பதில் : சட்ட படிப்பு படித்தால் நிறைய வேலைகள் உள்ளன. இந்தியாவில் 15 சட்ட பள்ளிகள் உள்ளன.அவற்றிற்கு கிளாட் தேர்வு எழுதி சேரலாம்.தமிழ்நாட்டிலும் சட்ட கல்லூரிகள் உள்ளன.சட்ட படிப்பு படித்தால் ஐ.எ .எஸ்.,ஐ .பி.எஸ்.,வங்கி போன்ற பல்வேறு துறைகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு அமையும்.
மாணவி சந்தியா : நீதிபதி பணிக்கு என்ன படிக்க வேண்டும் ?
நீதிபதி பதில் : சட்டம் படித்தல் அவசியம் .12ம் வகுப்பு படித்து முடித்த பிறகு ஐந்து வருட வக்கீல் படிப்பு முடித்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவு செய்து வழக்கறிஞராகப் பணியாற்ற வேண்டும்.பின்னர் தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற்று நீதிபதியாக வரலாம்.
இவ்வாறு மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு நீதிபதிகள் அன்புடன் பதில் சொன்னார்கள்.
தேவகோட்டை - தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நீதிபதிகளுடன் கலந்துதுரையாடல் நிகழ்வாக நடைபெற்றது.
நிகழ்வின் துவக்கமாக ஆசிரியை செல்வமீனாள் வாரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார்,மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம் மாணவர்களிடம் பேசுகையில்,சட்ட படிப்பு படித்தால் நிறைய வேலைகள் உள்ளன. இந்தியாவில் 15 சட்ட பள்ளிகள் உள்ளன.அவற்றிற்கு கிளாட் தேர்வு எழுதி சேரலாம்.தமிழ்நாட்டிலும் சட்ட கல்லூரிகள் உள்ளன.சட்ட படிப்பு படித்தால் ஐ.எ .எஸ்.,ஐ .பி.எஸ்.,வங்கி போன்ற பல்வேறு துறைகளுக்கு செல்வதற்கு வாய்ப்பு அமையும்.ஆசை பாடுங்கள்.ஆனால் பேராசைபடாதீர்கள்.ஒழுக்கம்,பணிவு,நேர்மை இருந்தால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாம் .லஞ்சம் வாங்க கூடாது.நாம் செய்யும் வேலையில் தப்பு பண்ணக்கூடாது.நீதிபதிகள் பெரும்பாலும் விழாக்களில் பங்கு கொள்ள இயலாது.எங்களுக்கான வாழ்க்கை கோர்ட்,வீடு என்றுதான் இருக்கும்.பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சட்டம், இலவச சட்ட மையம் தொடர்பான சட்டம்,பொதுநல வழக்கு தொடர்பான தகவல்கள்,சட்டத்தின் அடிப்படை கூறுகளை விரிவாக விளக்கினார்.
மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார் . தேவகோட்டை சார்பு நீதி மன்ற சிரசாதர் பாலசுப்ரமணியன் ,வட்ட சட்ட பணிகள் குழுவின் அலுவலர்கள் மணிமேகலை,வெற்றி செல்வன் ஆகியோர் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.நிறைவாக ஆசிரியர் கருப்பையா நன்றி கூறினார்.மாணவர்கள் ஐயப்பன்,காயத்ரி,நித்யகல்யாணி,ஜ
னஸ்ரீ , சஞ்சீவ் ஆகியோர் சந்தேகங்கள் கேட்டு தெளிவு பெற்றனர்.
பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் தேவகோட்டை வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும்,சார்பு நீதிமன்றங்களின் நீதிபதியுமான கிருபாகரன் மதுரம் மாணவர்களுடன் சட்டம் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்த்தினார்.உடன் தேவகோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார்,மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனா,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளனர்.
மேலும் விரிவாக :
பள்ளி ,ஆசிரியர்கள் இருக்கும் இடமே கோவில்
ஆசிரியர் சொல்லி கொடுத்ததனால்தான் நான் இன்று நீதிபதியாக உள்ளேன்
தேவகோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விஜயகுமார் மாணவர்களிடம் பேசும்போது , சட்டம் என்பது அறம் .அனைவரையும் நேசிக்க வேண்டும்.ஒழுக்கம் உயர்வை தரும்.நாம் ஒழுக்கத்துடன் செயல்பட்டால் சட்டத்தின்படி செயல்படுகிறோம் என்று அர்த்தம்.வீடுகளில் சாமி கும்பிடுவது போன்று சட்ட புத்தகங்களையும் படித்து பாதுகாத்து வைத்து கொள்ள வேண்டும்.நாம் நமது உரிமையை அறிய வேண்டும்.சட்ட நூல்களை உள்ளார்ந்து படிக்க வேண்டும்.புத்தக அறிவு மட்டும் போதாது.அனுபவ அறிவு,புதைந்த,தெளிந்த அறிவு வளர்க்க வேண்டும்.அப்போதுதான் வாழ்க்கை வளமாகும்.நான் உங்கள் முன்பு இன்று நீதிபதியாக நிற்க எனது பள்ளி ஆசிரியர்களே காரணம்.இறைவன் இருக்கும் இடம் உங்கள் பள்ளிதான்.பள்ளி ஆசிரியர்கள்தான் நம்மை செதுக்கி உருவாக்குபவர்கள்.நான் எனது சொந்த ஊருக்கு செல்லும்போதெல்லாம் எனக்கு சொல்லி கொடுத்த ஆசிரியர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுத்தான் வருவேன்.சட்டம் தெரிந்தால்தான் சமூகத்தில் வாழ முடியும்.
தேவகோட்டை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மோகனா பேசும்போது :
மாணவர்களாகிய உங்களை யாராவது வீபரீதமாக தொட்டால் உடனே கத்தி எதிர்ப்பை தெரிவியுங்கள்
பெற்றோரே பிள்ளைகள் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்
பெற்றோர்கள் குழந்தைகளை அடக்கி வைக்க கூடாது.குழந்தைகளை பற்றி தெரிந்து வைத்து கொள்ள வேண்டும்.பள்ளி முடிந்து வந்த பிறகு ஒரு மணி நேரமாவது அவர்களுடன் பேச வேண்டும்.அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும்.பிள்ளைகள் சொல்ல வருவதை பொதுவாக கேட்காமல் போவதால்தான் பல இடங்களில் சட்ட சிக்கல் வருகிறது.மாணவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் யார் எந்த பொருள் கொடுத்தாலும் வாங்க கூடாது.யாராவது தொடாத இடத்தில் விபரீதமாக தொட்டால்,பேசினால் உடனே கண்களை விரித்து எதிர்ப்பை தெரிவியுங்கள் .அதனையும் மீறி தவறாக நடந்தால் சத்தமாக கத்துங்கள்.எதிர்ப்பை தெரிவியுங்கள்.குழந்தைகள் தைரியமாக வளர வேண்டும்.ஏன் ,எதற்கு என்று கேள்விகள் கேட்க வேண்டும்.கேள்வி கேட்டு பதில் பெற்றால்தான் வாழ்க்கையில் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த இயலும்.இவ்வாறு பேசினார்.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்