ஆசிரியர் பற்றாக்குறை: தான் படித்த பள்ளியில் வகுப்பெடுக்கும் கல்லூரி மாணவர்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, September 30, 2018

ஆசிரியர் பற்றாக்குறை: தான் படித்த பள்ளியில் வகுப்பெடுக்கும் கல்லூரி மாணவர்!


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளது செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளி 1964ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தப் பள்ளியில் 750க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். "மாணவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே இப்பள்ளியில் இல்லை. அதுமட்டுமில்லாமல், ஆசிரியர்களும் போதுமான அளவில் இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரும் இல்லை. எனவே, பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமித்து, அடிப்படை வசதிகளைச் செய்துதரவும்" என்ற கோரிக்கையோடு ஊர் மக்களோடு அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களும் இணைந்து மனு அளித்திருக்கிறார்கள். இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவரான சக்திவேல், தற்போது தன் கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் பள்ளிக்குச் சென்று மாணவர்களுக்குத் தினமும் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம் ''என் அப்பா ஹோட்டலில் வேலை பார்க்குறாங்க. அம்மா காட்டுக்கு வேலைக்கு போவாங்க. எனக்கு இரண்டு தம்பி இருக்காங்க. நான் செக்காரக்குடி அரசுப்பள்ளியில்தான் படிச்சேன். போன வருஷம் 1056 மார்க் எடுத்து ப்ளஸ் 2முடிச்சேன். இப்ப தூத்துக்குடில உள்ள ஒரு கல்லூரியில் இயற்பியல் படிக்கிறேன். நான் படிச்ச அரசுப் பள்ளியில எங்களுக்குப் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இருந்தாங்க. வரலாறு பிரிவுக்கு மட்டும்தான் ஆசிரியர்கள் இல்லாமல் இருந்தாங்க. ஆனா, இந்த வருஷம் வரலாறு பிரிவுக்கு இயற்பியல், பயாலஜி பிரிவுக்கு ஆசிரியர்களே இல்லை. இயற்பியல் எடுக்க ஆளே இல்லை. நாங்க படிக்கும்போதே எங்க ஸ்கூல்ல எந்த வசதியும் கிடையாது. போன வருஷம் பிளஸ் ஒன் ஆங்கில வழிக்கல்வியை ஓப்பன் பண்ணாங்க. ஒரு வருஷம்தான் ஒரு டீச்சர் இருப்பாங்க. அடிக்கடி டீச்சர்ஸ் மாறிகிட்டே இருப்பாங்க. இப்போ இருக்கிற தலைமை ஆசிரியர் கூட போன வருஷம் வந்தவங்கதான். எங்க ஸ்கூலை சுற்றி இருக்கிற பத்து கிராமத்துல இருக்கிற பசங்களும் எங்க ஸ்கூல்ல தான் படிப்பாங்க. எங்களுக்குக் கடந்த மூன்று வருஷமா உடற்கல்வி ஆசிரியர் இல்ல. எங்களுடைய ஸ்கூலுக்கு இருபது வருஷம் காத்திருந்து 'தேசிய மாணவர் படை'க்கான அனுமதி கிடைச்சிருக்கு. ஆனா, நிரந்தரமான உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால எங்க ஸ்கூலுக்கு 'தேசிய மாணவர் படை' வேண்டாம்னு நோ அப்ஜக்ஷன் கொடுக்கச் சொல்லி 'தேசிய மாணவர் படை' அலுவலகத்துல சொல்றாங்க. நாங்க வேண்டாம்னு சொல்லிட்டா இன்னும் ரொம்ப வருஷம் கழிச்சுதான் எங்க பள்ளிக்கு அந்த அனுமதி கொடுப்பாங்க. அவங்க கேட்குற மாதிரி நிரந்தரமான உடற்பயிற்சி ஆசிரியரை நியமிச்சிட்டா எங்க பள்ளியில தேசிய மாணவர் படை இயங்கும். எங்க ஊரைச் சுற்றி பலரும் ராணுவத்துலதான் வேலை பார்க்குறாங்க. அதனால், தேசிய மாணவர் படை எங்க பள்ளிக்கு ரொம்பவே அவசியம்'' என்றவரிடம் வகுப்பெடுப்பது பற்றி கேட்டேன். ''நான் படிச்சு முடிச்சு ஹோட்டலில் வேலை பார்த்து காசு சேர்த்து வைச்சுதான் காலேஜூக்கு ஃபீஸ் கட்டுனேன். எங்க ஸ்கூல்ல இயற்பியல் எடுக்கச் சொல்லி எங்க மிஸ் கூப்பிட்டாங்க. காலையில காலேஜ் போயிட்டு வேகமாக ஸ்கூலுக்கு வருவேன். அங்கே, இரண்டு குரூப்( பயாலஜி, கம்ப்யூட்டர் சயின்ஸ்) மாணவர்களை சேர்த்து வைச்சு இயற்பியல் சொல்லிக் கொடுப்பேன். கிட்டத்தட்ட ஐம்பது மாணவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறேன். பிளஸ் ஒன் பசங்களும் இயற்பியல் சொல்லித்தரச் சொல்லிக் கேட்பாங்க. ஆனா, எனக்கு இதுக்கு மட்டும்தான் நேரம் சரியா இருக்கு. அதனால, அந்தப் பசங்களுக்கு என்னால சொல்லிக்கொடுக்க முடியல. பிளஸ் ஒன் படிக்குற பசங்க வகுப்பு எடுக்கக்கூட யாரும் இல்லாம கஷ்டப்படுறாங்க.

Total Pageviews