ஒரே மாதத்தில் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 28, 2018

Comments:0

ஒரே மாதத்தில் 14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தகவல்


2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் 600 மில்லியன் வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இல்லையெனில், வேலையின்மை என்கிற நெருக்கடியைக் கட்டாயம் சந்திக்க வேண்டியிருக்கும் என்று ஜி-20 நாடுகளை சில வருடங்களுக்கு முன்பே எச்சரித்திருக்கிறது உலக வங்கி. அதேபோல், செயற்கை நுண்ணறிவால் (Artificial Intelligence) தகவல் தொழில்நுட்பத் துறையிலும், இதர தொழில் நிறுவனங்களிலும் 2022-ம் ஆண்டுக்குள் 50% வேலைவாய்ப்புகள் மாற்றியமைக்கப்படும் என்கிறது எர்னஸ் யங் மற்றும் நாஸ்காம் அமைப்பு.

 
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர் அரசுக் காப்பீட்டு நிறுவனத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் குறைந்தபட்சம் 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகிறது. இதில், தொழிலாளர் அரசுக் காப்பீட்டு நிறுவனத்தின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் பதிவுசெய்துள்ள ஊழியர்களின் அடிப்படையில் புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து கணக்கிடப்படுகிறது. மேலும், கணக்கிடப்பட்ட அறிக்கையை ஒவ்வொரு மாதமும் 25-ம் தேதி வெளியிடுகிறது. இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 14 லட்சம் பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தற்போது தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்தியப் புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் மட்டும் சுமார் 13.97 லட்சம் பேர் வேலைவாய்ப்பில் இணைந்துள்ளனர். இதில் 18 வயதுக்கும் குறைவானவர்கள் மட்டும் 4,999 பேர் இணைந்துள்ளனர். அதேபோல், 18 வயதிலிருந்து 21 வயதுடையவர்கள் 3,14,901 பேரும் இணைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 22 முதல் 25 வயதுடையவர்கள் 3,84,514 பேர் இணைந்துள்ளனர். 26 முதல் 28 வயதுடையவர்கள் 2,05,637 பேரும், 29 முதல் 35 வயதுடையவர்கள் 2,53,191 பேர் உள்ளனர். 35 வயதுக்கும் மேல் உள்ளவர்கள் 2,34,286 பேர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 13,97,528 பேர் புதிதாக வேலைவாய்ப்பில் இணைந்துள்ளதாக மத்தியப் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி, கடந்த ஆண்டு 2017 செப்டம்பர் மாதம் முதல் 2018 ஜூலை மாதம் வரையில் இத்திட்டங்களின் கீழ் இணைந்தவர்களின் எண்ணிக்கையானது 1.34 கோடியாக அதிகரித்துள்ளது. இதில், ஜூலை மாதத்தில் மட்டும் காப்பீடு செய்துள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.77 கோடியாக உள்ளது. ஆனால், கடந்த 2017 செப்டம்பர் மாதத்தில் காப்பீடு செய்தவர்கள் 2.95 கோடி பேர். இந்த வருடத்தை ஒப்பிடும்போது இந்த எண்ணிக்கையானது மிகவும் குறைவானது. மேலும், தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்தவர்கள் மொத்தம் 38,206 பேர். அதில் குறைந்தபட்சம் 18 முதல் 21 வயதுடையவர்கள் 1,680 பேர் இணைந்துள்ளனர். அதிகபட்சம் 35 வயதுடையவர்கள் 13,096 பேரும் அடங்குவர். கடந்த ஜூலை மாதம், தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பின் கணக்குப்படி, புதிதாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை மொத்தம் 9.51 லட்சம். இந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை இதற்குமுன் கடந்த 11 மாதங்களாக உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை விட மிகவும் அதிகம். 2017 செப்டம்பர் முதல் 2018 ஜூலை மாதம் வரையில் மொத்தம் 61.81 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தொழிலாளர் சேமலாப நிதிய அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு களத்தில் வேலைக்கான வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருப்பதாக மத்திய, மாநில அரசும் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. இருந்தும் ஒவ்வொரு மாநிலத்திலும் லட்சக்கணக்கானோர் வேலையின்மையால் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது வேலையின்மைதான். தமிழ் நாட்டில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்துவிட்டு, வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கையும் ஒரு கோடியை நெருங்குகிறது.



👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here


No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews