சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறைப் படிப்புகளுக்கு விரைவில் விண்ணப்பம் விநியோகம் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறை படிப்புகளுக்கு நிகழ் கல்வியாண்டில் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு ஜூலை 16-ஆம் தேதி அறிவித்தது. இந்த நிலையில், அந்தப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் எப்போது தொடங்கும் என்று மாணவர்கள், பெற்றோர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப் படிப்புகளுக்கு 6 அரசு இந்திய முறை மருத்துவக் கல்லூரிகளில் 396 இடங்களும், 22 தனியார் கல்லூரிகளில் 859 அரசு ஒதுக்கீட்டு இடங்களும் உள்ளன. இது தொடர்பாக இந்திய மருத்துவ முறை மற்றும் ஹோமியோபதித் துறை ஆணையர் டாக்டர் கே.செந்தில்ராஜ் கூறியது:
இந்திய முறை படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகத்துக்கு தகவல் குறிப்பேடு (Prospectus) தயாரிக்கப்பட்டு தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவு அரசாணையாக வெளியிடப்பட வேண்டும். அதே போன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள தகவல் குறிப்பேட்டுக்கும் அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த இரண்டு பணிகளும் நிறைவடைய ஒரு வார காலம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து விண்ணப்ப விநியோகம் தொடங்கும். நிகழாண்டில் விண்ணப்ப விநியோகம், கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் உள்ளிட்ட நடைமுறைகள் அனைத்தையும் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நேரடி விண்ணப்ப விநியோகமும் நடைபெறும். மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்புக்கு சுகாதாரத் துறையின் www.tnhealth.org என்ற இணையதளத்தை மாணவர்கள் தொடர்ந்து பார்வையிட வேண்டும் என்றார் அவர்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.