அரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்... - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 02, 2018

Comments:0

அரசு பள்ளியில் தகுதியற்ற மாணவர்களுக்கு சேர்க்கை; முறைகேடு நடந்ததால் பெற்றோர் ஆத்திரம்...


அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்ததை அடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம் செட்டிமாங்குறிச்சியில் அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 650 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆறாம் வகுப்பில் உள்ள 80 இடங்களுக்கு 260 மாணவ - மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் படிக்காத பெற்றொர்களின் குழந்தைகள், ஏழை, எளியவர்களின் குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் பள்ளியில் சேர்க்க தேர்வு செய்யப்பட வேண்டும். மீதமுள்ளவர்களுக்கு தேர்வு வைத்து அதில் தேர்ச்சி பெறும் மாணவ - மாணவிகளை தேர்வு செய்யப்பட வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும், தன்னிச்சையாகவும், தகுதியற்றவர்களையும் முறைகேடாக தேர்வு செய்து பள்ளி திறக்கும் முன்பே பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், நேற்று பள்ளி திறக்கப்பட்டதும், மாணவ - மாணவிகளின் சேர்க்கை குறித்த பட்டியலைப் பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், அவர்களுடன், மாணவ - மாணவிகளும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவர்களிடம் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், "நான் இந்த பள்ளிக்கு தற்போதுதான் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றுள்ளேன். மாணவர்கள் சேர்க்கை குறித்து தெரியவில்லை. எனினும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதில் சமாதானம் அடையாத பெற்றோர்கள் பள்ளி வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்த மாணவ - மாணவிகள் பட்டியலை கிழித்து எறிந்ததுடன், "மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. எனவே. முறையாக விதிமுறைகளின்படி மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும்" என்று கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பள்ளி நிர்வாகத்தினர் இது தொடர்பாக நாளை (அதாவது இன்று) உயரதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும் என்று தெரிவித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews