தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த அரசு ரூ.16 கோடி அனுமதி
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழக அரசு ரூ. 16 கோடி அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தெரிவித்திருப்பது:
உலகத் தமிழர்களின் ஒப்பற்ற அடையாளமாகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை உயர்த்துவதற்காகத் தமிழக அரசு ரூ.16 கோடிக்கு அனுமதி அளித்துள்ளது. இவற்றில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படவுள்ள தமிழ் வளர் மையத்துக்கு ரூ. 2 கோடியும், தமிழ்ப் பண்பாட்டு மையத்துக்கு ரூ. 1 கோடியும், வருங்காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதற்கு வகை செய்து, தமிழ் மொழி மற்றும் பண்பாட்டுக்கான நிரந்தர உயர் அமைப்பாகச் செயல்படுத்துவதற்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள கரிகால சோழன் கலையரங்க மேம்பாட்டுப் பணிக்கு ரூ. 4 கோடியும், 1981 -ஆம் ஆண்டு முதல் 1993 -ஆம் ஆண்டு வரை கட்டப்பட்ட கட்டடங்களுக்குச் சிறப்பு சீர்காப்புப் பணிகள் மேற்கொள்ள ரூ. 3.5 கோடியும், பல்கலைக்கழகப் பசுமை வளாகத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க முதல்கட்டமாக ரூ. 1.65 கோடியும், சிற்பக் கலைப் பயிற்சிக்கூடம் தொடங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ. 20 லட்சம், தொடராச் செலவினமாக ரூ. 30 லட்சம் என மொத்தம் ரூ. 50 லட்சமும் வழங்கியுள்ளது.
இத்துடன், பல்கலைக்கழக நூலகத்தை மின்னணு நூலகமாக மாற்றி அமைப்பதற்கு ரூ. 50 லட்சமும், நூலகக் கட்டடத்தில் உள்ள பனுவல் அரங்கம் மேம்பாட்டுப் பணிக்காக ரூ. 40 லட்சமும், பதிப்புத் துறை மூலம் ஆய்வாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோருக்குப் பயன்படும் வகையில் வெளியிடப்பட்டு தற்போது இருப்பில் இல்லாத நூல்களை மறுபதிப்பு செய்வதற்கு ரூ. 2 கோடியும், மெய்யியல் துறை மூலம் யோகா பயிற்சி மையத்தை விரிவுப்படுத்த ஆண்டுதோறும் ரூ. 5 லட்சம், தொடராச் செலவினமாக ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 10 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை மூலம் மியான்மர் (பர்மா), தென்னாப்பிரிக்க நாடுகளில் உள்ள தமிழர்களுக்குத் தமிழ்மொழியில் பேச, கற்பிக்கச் சிறப்புப் பயிற்சித் திட்டத்துக்காக ரூ. 22 லட்சமும், நூலகத்திலுள்ள அரிய நூல்களை மின்னாக்கம் செய்வதற்கு ரூ. 10 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.