சட்டக்கல்லூரி இடமாற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி இடமாற்ற உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு வரும் 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவி காவியா தாக்கல் செய்த மனுவில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில், கடந்த 2008 -ஆம் ஆண்டு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட நீதிபதி சண்முகம் ஆணையம், கல்லூரியை இடம் மாற்றம் செய்ய பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் சென்னையில் உள்ள சட்டக் கல்லூரியை மூடி விட்டு, திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் புதுபாக்கம் ஆகிய இடங்களில் புதிய கல்லூரிகளைத் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டது. உயர்நீதிமன்றம் ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் தற்போதுள்ள கல்லூரியின் கட்டடங்களைச் சீரமைத்து, கல்லூரி தற்போதுள்ள இடத்திலேயே செயல்பட உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தமிழக அரசு, அந்த உத்தரவை மீறி கல்லூரியை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, அரசின் இந்த உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும். கல்லூரி தற்போது செயல்பட்டு வரும் உயர்நீதிமன்ற வளாகத்திலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி பி. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு ஜூன் 22- ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.