மாண்புமிகு அமைச்சர் . K.A. செங்கோட்டையன் அவர்கள் இதுவரை பள்ளிக்கல்வித்துறையில் செய்துள்ள சாதனைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 30, 2018

1 Comments

மாண்புமிகு அமைச்சர் . K.A. செங்கோட்டையன் அவர்கள் இதுவரை பள்ளிக்கல்வித்துறையில் செய்துள்ள சாதனைகள்


 

மாண்புமிகு அம்மா அவர்களின் மறைவுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 2017 ஆம் ஆண்டு தமிழக பள்ளிக் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டவர் மாண்புமிகு. K.A. செங்கோட்டையன் அவர்கள்.

இவர் 09-01-1948 ல் கோபிசெட்டிப்பாளையம் அர்த்தனாரி கவுன்டர் - ஈஸ்வரி அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தவர். தொடர்ந்து 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.

காலிப் பணியிடங்களை விற்பனை செய்து கல்லாகட்டி வந்தவர்கள் மத்தியில், கல்வித்துறையில் மகத்தான மாற்றங்களை மிகக்குறுகிய காலத்தில் ஏற்படுத்தி தமிழக கல்வி வளர்ச்சியை அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தி வருகிறார் என்றால் அது மிகையாகாது.

பள்ளிக் கல்வி அமைச்சராக பதவி ஏற்ற உடனேயே பல ஆண்டுகளாக கல்வி அமைச்சர்களுக்கே சிம்ம சொப்பனமாக இருந்து வந்த பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர் திருமதி சபீதா IAS அவர்களை மாற்றம் செய்து திரு. உதயச்சந்திரன் IAS அவர்களை நியமித்தார். பணிச் சுமை காரணமாக பள்ளிக் கல்வித் துறைக்கு கூடுதலாக திரு. பிரதீப் யாதவ் IAS அவர்களையும் நியமித்தார்.

அதன் பிறகு நடந்த மாற்றங்களை நாடே அறியும். உதாரணத்திற்கு சில.
11 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு.
11 ஆம் வகுப்பு பாடத்தை நடத்தாமலேயே 12 ஆம் வகுப்பு பாடத்தை 11 ஆம் வகுப்பிலேயே நடத்தி வந்தது தவிர்க்கப்பட்டது.

10, 12 வகுப்பு தேர்வு முடிவுகள் மாநில அளவில் இல்லாமல் பள்ளிகளிலேயே வெளியிட உத்தரவு. இதன் மூலம் மாணவர்கள் மன உளைச்சல் தவிர்க்கப்பட்டது. மீடியாக்களின் தேவையற்ற அலப்பறைகள் தவிர்க்கப்பட்டது. நான் டாக்டராகி ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பேன் என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்லும் பேட்டிகள் தவிர்க்கப்பட்டன.

பள்ளிகள் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை விளம்பரப்படுத்த தடை. மக்கள் விளம்பரத்தை பார்த்து ஏமாறாமல் தரம் பார்க்க இதன் மூலம் வழிவகுத்தார்.

12 ஆம் வகுப்பிற்கு பிறகு என்ன செய்வது, என்ன படிப்பது என 12 வகுப்பு தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு motivation class நடத்துதல்.

அனைத்து மாநிலங்களும் வியக்கும் வண்ணம் புதிய பாடத்திட்டம். நமது தொன்மை வரலாறு, இயற்கை மருத்துவம், பாரம்பரிய பண்பாடு மற்றும் தற்போதைய சிறப்புகளை அற்புதமாக மாணவர்கள் விரும்பும் வண்ணம் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ளும் வண்ணம் புதிய பாடத்திட்டம் உள்ளது.

மாவட்டம் தோறும் இரண்டு அல்லது மூன்று இடங்களில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள்.
பல அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள். தொடக்கப் பள்ளிகளில் கூட ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தொடக்க நிலை மாணவர்கள் ஐபேடு மூலம் தேர்வு எழுதவும் பயிலவும் ஒன்றியத்திற்கு 2 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. வெற்றி பெற்றால் அனைத்து பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் நலனுக்காக இலவச WIFI இண்டர்நெட்.
11,12 மற்றும் 9,10 மற்றும் 6,7,8 மாணவர்களுக்கு தனித்தனியாக அடையாளம் காணத்தக்க வகையில் வெவ்வேறு வண்ணங்களில் தரமான சீருடை.

விலையில்லா புத்தகம், நோட்டு, வண்ண கிரையான்கள், சீருடைகள், ஜுயாமெண்டரி பாக்ஸ், செருப்பு, மேப் போன்றவற்றை போர்ட்டர்கள் போல ஆசிரியர்கள் சாக்கில் கட்டி தூக்கிச் சென்ற நிலையினை மாற்றி, அவை தனி பணியாளர்கள், வாகனங்கள் மூலம் பள்ளிகளிலேயே கொண்டு வந்து கொடுக்கும் திட்டம்

தனியார் பள்ளிகள் அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தல் online விண்ணங்கள் மூலம் லஞ்ச லாவண்யம், ஏமாற்றுதல் தடை செய்யப்பட்டுள்ளது.

கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் அரசு உதவியுடன் படிப்பதற்கு online விண்ணப்பம், குலுக்கல் தேர்வு மூலம் வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு களையப்பட்டது.

சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை ஊக்குவிக்க கனவு ஆசிரியர் விருது ஒரு மாவட்டத்திற்கு ஆறு ஆசிரியர்களுக்கு. (டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அல்லாமல்)
RMSA, SSA, SCERT என இருந்த அமைப்புகளை ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக்கி தேவையற்ற செலவினங்களை குறைத்ததோடு, ஆசிரியர்களுக்கு பயிற்சி மாணவர்களுக்கு வளர்ச்சி என்ற ஒற்றை இலக்கை நோக்கி செயல்பட வைத்தது.

தொடக்கக்கல்வி, பள்ளி கல்வி, மெட்ரிகுலேசன் என பல பிரிவு அதிகாரிகளை ஒன்றினைத்து மூன்று அடுக்கு (BEO, DEO, CEO) அதிகாரிகள் மட்டுமே அனைத்து வகை பள்ளிகளையும் கண்காணிக்க உத்தரவிட்டதன் மூலம் தேவையற்ற பொருட்செலவுகள் தவிர்க்கப்பட்டதோடு, ஆசிரியர்கள், மாணவர்கள், தனியார் பள்ளிகள் மீதான கண்காணிப்பு இறுகும் என்பதில் ஐயமில்லை.

புதியதாக 57 கல்வி மாவட்டங்கள் உருவாக்கப்பெற்று ஆசிரியர்கள் மீதான கண்காணிப்பு, ஆய்வு இறுக்கப்பட்டுள்ளது.
வட்டாரம் தோறும் டிஜிட்டல் லைப்ரரி உருவாகிக்கொண்டு இருக்கிறது.
ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் சிறு ஊழலுக்கும் இடம் இல்லாமல் திறந்த மனதோடு நடைபெற்று வருகிறது. காலிப் பணியிடங்கள் மறைக்கப்படவில்லை.

சிறந்த அரசு பள்ளி மாணவர்களை தேர்வு செய்து வட்டாரத்திற்கு ஒருவர் வீதம் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள்.
அனைத்து அரசு பள்ளிகளுக்கும் பள்ளி வளாகம் சுத்தம் செய்ய ஒருவரும், பள்ளி கழிவறை சுத்தம் செய்ய ஒருவரும் என இரு பணியாளர்கள் அரசு ஊதியத்தில் (வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மூலம்) நியமிக்கப்பட்டு பள்ளி வளாகம் சுத்தம் சுகாதாரமாக விளங்குகிறது.

பள்ளி கழிவறை சுத்தம் செய்ய தேவையான பிரஷ், விளக்காமாறு, ஆசிட் வாங்க தனி நிதி மாதந்தோறும் ஒதுக்கீடு.
பள்ளிகளுக்கான மின்சார கட்டணத்தை அரசே செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

குறைக்கப்பட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிடங்கள் சீரிய செயல்பாட்டை கருத்தில் கொண்டு மீண்டும் தோற்றுவிப்பு.

மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வம் குறைந்து காற்றோடிக் கொண்டிருந்த ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் (DIET) 20 ல் மாணவர்கள் சேர்க்கையை அருகாமை நிறுவனங்களோடு இணைத்து, இந்த 20 இடங்களிலும் ஆசிரியர்களுக்கு தரமான பயிற்சியினை உறுதி செய்யும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இன்னும் எவ்வளவோ . . .

இவ்வளவு மிகக்குறுகிய 15 மாதங்களில்

இன்றைய அரசாங்கத்தில் மிக சிறப்பாக செயல்படும் துறை பள்ளிக் கல்வித் துறை என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோல இதுவரை இருந்த திராவிட அரசாங்க கல்வி அமைச்சர்களில் மாண்புமிகு செங்கோட்டையன் அவர்கள் ஒரு உசேன் போல்ட் (100 மீ ஒட்டப் பந்தயத்தில் தொடர்ந்து பதக்கம் வென்று வருபவர்) என்பதை யாராலும் மறுக்க இயலாது.
இன்று 30-05-2018 பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கை தமிழக சட்டமன்றத்தில் நடைபெற உள்ளது. இதில் இன்னும் பல அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்ப்போம்.

கல்வி வளர்ச்சியே சமுதாய வளர்ச்சி என்ற நோக்கில் அயராது உழைக்கும் மாண்புமிகு பள்ளி கல்வி அமைச்சர் K.A. செங்கோட்டையன் அவர்களையும் அவருக்கு உறுதுணையாக இணைந்த கைகளாக செயல்படும் பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளர்கள் திரு. உதயசந்திரன் IAS, திரு. பிரதீப் யாதவ் IAS அவர்களுக்கும், இவர்கள் கொண்டு வரும் மாற்றங்களையும் திட்டங்களையும் பள்ளிகளில் கொண்டு சேர்க்க உதவிடும் அதிகாரிகளையும் வாழ்த்துகிறேன்.

வணங்கி பெருமைப்படுகிறேன் நானும் ஒரு ஆசிரியர் என்பதில்.

1 comment:

  1. Venam valikkuthu appuram romba asingama thittiruven tet?????

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews