பி.இ. விண்ணப்பக் கட்டணம் வரைவோலையாகச் செலுத்துவதில் சிக்கல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 19, 2018

Comments:0

பி.இ. விண்ணப்பக் கட்டணம் வரைவோலையாகச் செலுத்துவதில் சிக்கல்!


பி.இ. விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்துவதால் மாணவர்களின் பெற்றோருக்கு கூடுதல் செலவும், அலைச்சலும்தான் ஏற்படும் என்று வங்கி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதற்கு மாறாக, அண்ணா பல்கலைக்கழக வங்கிக் கணக்கில் 'சலான்' மூலம் நேரடியாக பணத்தைச் செலுத்துவது எளிது, இதற்கான கமிஷன் தொகையும் குறைவு என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.  தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பி.இ. இடங்கள் அனைத்தும் இந்த ஆண்டு முதன் முறையாக ஆன்-லைன் கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட உள்ளது.  இதற்கு ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பப் பதிவையும், விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது.  அதாவது பற்று அட்டை அல்லது கடன் அட்டை மூலமே கட்டணத்தைச் செலுத்த முடியும். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கட்டணத்தை வரைவோலையாகப் பெறவும் உத்தரவிட்டது.  அதனடிப்படையில், விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகவும் செலுத்தலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில் இதற்கான வசதிகள் வெள்ளிக்கிழமை முதல் செய்யப்பட்டன. வரைவோலை எடுப்பதில் சிக்கல்?  இந்த நிலையில், வரைவோலை எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரொக்கப் பரிவர்த்தனை பெரும்பாலும் நிறுத்தப்பட்டு விட்டன. இதன் காரணமாக பெரும்பாலான வங்கிகளில் காசோலைகள் மூலமாகவே வரைவோலையை எடுக்க முடியும். அதுவும் சேமிப்புக் கணக்கு வைத்துள்ள வங்கியில் மட்டுமே வரைவோலையை எடுக்க முடியும். ஒருசில வங்கிகள் மட்டும், ஆதார் அட்டை நகல் சமர்ப்பிப்பவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு வரைவோலையை வழங்குகின்றன. இதனால், மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் கூடுதல் செலவும், அலைச்சலும்தான் ஏற்படும் என்கின்றனர் வங்கி நிர்வாகிகள். இது குறித்து அகில இந்திய வங்கி அலுவலர்கள் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் சி.ஹெச்.வெங்கடாச்சலம், பாரத ஸ்டேட் வங்கி அலுவலர்கள் சங்க (சென்னை வட்டம்) பொதுச் செயலாளர் டி.தாமஸ் ஃப்ராங்கோ ஆகியோர்கூறியது: வரைவோலைக்கு கமிஷன் தொகை அதிகமாக இருப்பதால், கூடுதல் செலவு ஏற்படும். வங்கியில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து எடுக்க வேண்டியிருக்கும்.  இதற்கு மாற்றாக அண்ணா பல்கலைக்கழக வங்கிக் கணக்கில் 'சலான்' மூலம் நேரடியாகக் கட்டணத்தைச் செலுத்த அனுமதிக்கலாம். இதற்கு கமிஷன் தொகை மிகக் குறைவு. இருந்தபோதும், பற்று அட்டை, கடன் அட்டைகள் மூலம் ஆன்-லைனில் கட்டணம் செலுத்துவதே எளிய நடைமுறை. இதற்கு கமிஷன் தொகையும் மிகக் குறைவு என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews