உதவி கல்வி அதிகாரி இனி வட்டார கல்வி அதிகாரி என அழைக்கப்படுவார் என்றும், அவர் தனது வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.
உதவி கல்வி அதிகாரிகள் இனிமேல் வட்டார கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் இனிமேல் தொடக்க கல்வி துறையில் உள்ள பள்ளிகளை மட்டும் அல்லாமல், பள்ளி கல்வித்துறையில் உள்ள பள்ளிகள், மெட்ரிகுலேசன் இயக்குனரக பள்ளிகள் அனைத்தையும் அவர்களது எல்லைக்குட்பட்ட இடங்களில் ஆய்வு செய்வார்கள்.
அதுபோல மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளாக மாற்றப்படுகிறார்கள். அவர்களும் தங்களின் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வார்கள். முதன்மை கல்வி அதிகாரிகளின் பணிகளும், அவர்களுக்குள்ள பொறுப்புகளும் வருமாறு.
மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்யவேண்டும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறதா? என அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருடம் ஒருமுறை அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்யவேண்டும். அதுபோல மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் ஆய்வு செய்யவேண்டும்.
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். தொடக்கப்பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் நிலவரத்தை அதற்குரிய இயக்குனருக்கு, மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரையை அனுப்பி வைக்கவேண்டும். அரசு உதவி பெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் அங்கீகாரம் முறையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறதா? என்று ஆராயவேண்டும்.
சுயநிதி பள்ளிகள் தொடங்கவும், மூடவும் அதற்குரிய இயக்குனருக்கு பரிந்துரைக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்று பார்க்கவேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.