தலைமையாசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 16, 2018

Comments:0

தலைமையாசிரியர்கள் இல்லாததால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பாதிப்பு


அரசு பள்ளிகளில் போதிய தலைமையாசிரியர்கள் இல்லாததால் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆண்டுதோறும் மே மாதம் தொடக்கக்கல்வி துறையின் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும். இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான கலந்தாய்வும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவிக்கான பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தப்படும். ஜூன் முதல் தேதி இவர்கள் பணியில் சேர வேண்டும். ஆனால் தற்போது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கூட கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படுகிறது. ஜூன் மாதம் புதிய மாணவர்கள் சேர்க்கை, கல்வித்துறை பல புள்ளி விவரங்கள் கேட்பது, விலையில்லா பொருட்களை மாணவர்களுக்கு வழங்குதல் என பல்வேறு பணிகளை தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்வர். கடந்த கல்வியாண்டில் (2017-18) நடந்த கலந்தாய்வுக்கு பின்னர், ஏற்பட்ட தலைமை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை. விருப்ப ஓய்வு மற்றும் மரணமடைந்த தலைமையாசிரியர்களால் ஏற்பட்ட காலிப்பணியிடங்களும் கடந்த 10 மாதங்களுக்கு மேல் காலியாக இருக்கிறது.கடந்த ஏப்.30ம் தேதியுடன் சுமார் ஆயிரம் தலைமை ஆசிரியர்கள் மாநிலம் முழுவதும் ஓய்வு பெற்றுள்ளனர். தமிழகத்தில் பல தொடக்கப்பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாகவே உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாத நிலையில் ஒரு ஆசிரியர் இருந்து மாணவர் சேர்க்கைக்கு முயற்சிப்பது சிரமமான காரியம். எனவே, அருகாமை தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளை அணுகி சேர்க்கையை அதிகரிப்பதால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதுகுறித்து கல்வித்துறை ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘தொடக்க கல்வித்துறை இயக்குநர் தனிக்கவனம் செலுத்தி, பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை மே 31ம் தேதிக்குள் நிரப்பி, ஜூன் 1 ம் தேதிக்குள் பள்ளிக்கு சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு என்பது 90 சதவீதம் இல்லாமலே போய்விட்டது. தொடக்க கல்வித்துறை இதுவரை தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விண்ணப்பம் கூட இதுவரை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் சரிசெய்யப்பட வேண்டும்’’ என்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews