கட்டணம் இல்லாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க கடைசி வாய்ப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 30, 2017

Comments:0

கட்டணம் இல்லாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்க்க கடைசி வாய்ப்பு!

“நாங்கள்தான் அரசுப் பள்ளியில் படித்தோம். எங்கள் பிள்ளையையாவது மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்கவைக்க வேண்டும் என ஆசையாக இருக்கிறது. ஆனால், எல்.கே.ஜி-யிலேயே எக்கச்சக்கமாகக் கட்டணம் வாங்குகிறார்களே!'' என வருந்தும் பெற்றோர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறது, 'குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்'. இந்தச் சட்டத்தின் முக்கிய அம்சம், `பொருளாதார அளவில் நலிந்த பிரிவினருக்குச் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளைத் தவிர, இதர அனைத்துத் தனியார், நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 25 சதவிகித இடங்களைக் கட்டாயம் ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்கிறது. இந்த 25 சதவிகித இடங்களில் சேரும் அனைத்துக் குழந்தைகளுக்கான முழு கல்விக் கட்டணத்தையும் அரசே செலுத்திவிடும்.


இந்த ஆண்டு `கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்துக்கு' உட்பட்டு ஒதுக்கீடுசெய்யப்பட்ட இடங்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக ஆன்லைன் மூலம் சேர்க்கை நடந்துவருகிறது. இதுவரை நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கையில் 83,000 குழந்தைகள் தனியார்ப் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இன்னமும் 41,832 இடங்கள் நிரம்பாமல் இருக்கின்றன.

காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை மூன்றாம்கட்ட சேர்க்கையை செப்டம்பர் 11-ம் தேதி முதல் செப்டம்பர் 25-ம் தேதி வரை அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை 10,000 விண்ணப்பங்கள் மட்டுமே வந்திருப்பதால், மூன்றாம்கட்ட சேர்க்கையை நீட்டித்து, அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பெரும்பாலான பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் மாணவர்களைச் சேர்த்தாலும், சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி வகுப்பிலும் மாணவர்களைச் சேர்த்துக்கொள்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பெற்றோர்கள் பயன்படுத்தி, தங்களுடைய குழந்தையை எல்.கே.ஜி வகுப்பில் சேர்க்கலாம்.
மாணவர்கள் சேர்க்கைக்கு தற்போது ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறுவதால், விண்ணப்பத்தின் நிலையை உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். மேலும், ஒவ்வொரு பள்ளியிலும் எவ்வளவு இடங்கள் நிரம்பியுள்ளன, எவ்வளவு காலி இடங்ளை http://tnmatricschools.com/rte/rtepdf.aspx என்ற இணையதளப் பக்கத்தில் பார்க்கலாம்.
பெற்றோர்கள் தங்களுக்கு அருகில் உள்ள ஐந்து தனியார்ப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, எந்தெந்தப் பள்ளிகளில் எத்தனை இடங்கள் காலியாக இருக்கின்றன என்ற விவரத்தை ஆன்லைன் வழியே தெரிந்துகொண்டு உடனே விண்ணப்பிக்கலாம். இவ்வாறு விண்ணப்பிக்கும்போது காலியாக உள்ள இடங்களைவிடக் கூடுதலாக விண்ணப்பங்களைப் பெற்றிருந்தால், குலுக்கல் அடிப்படையில் மாணவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்.
ஏற்கெனவே தனியார்ப் பள்ளியில் சேர்த்து கல்விக் கட்டணம் கட்ட முடியாமல் யோசித்துவரும் பெற்றோர்கள், அதே பள்ளியில் காலி இடங்கள் இருந்தால் கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் விண்ணப்பித்து இடம்பெறலாம். ``இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் வராமல் வெளிப்படையான முறையில், தெளிவான திட்டமிடலில் குழந்தைகளைச் சேர்த்து பள்ளிக் கல்வித்துறை சாதனை படைத்திருக்கிறது. தற்போது காலியாக உள்ள இடங்கள் குறித்த விவரங்கள், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை, பெற்றோர்கள் தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம்" என்கிறார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் பிரிவின் இயக்குநர் கருப்பசாமி.

பள்ளிக் கல்வித்துறையின் இணையதளமான www.dge.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டாரவள மைய அலுவலகம், அரசு இ-சேவை மையங்கள் போன்றவற்றிலும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் செய்பவர்கள் குழந்தையின் புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும்.

கட்டாயக் கல்விச் சட்டத்தில் நலிவடைந்த பிரிவினர், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் என்ற இரண்டு வகைகளில் சேர்க்கை நடத்தப்படுகிறது. நலிவடைந்த பிரிவில் இரண்டு லட்சத்துக்கும் குறைவாக வருமானம் கொண்ட அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் சேர்க்க விரும்புகிறவர்கள் பொதுப்பிரிவினரைத் தவிர அனைத்துப் பிரிவினரும் விண்ணப்பிக்கலாம். வருமான வரம்பு எதுவும் கிடையாது. 10.10.2017 வரை விண்ணப்பிக்கலாம். 11.10.2017 அன்று கல்வி அதிகாரிகள் விண்ணப்பங்களை பரிசீலனை செய்வர். 12.10.2017 அன்று சேர்க்கை நடைபெறும்.

பலரும் நவோதயா பள்ளி குறித்து பேசும் வேளையில், இந்த வாய்ப்பை அருகில் உள்ள பிரிவினருக்குத் தகவல் தெரிவித்து, பிள்ளைகளை எந்தவிதமான செலவும் இல்லாமல் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் படிக்க உதவி செய்யலாமே!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews