அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் தீவிரம் 7 லட்சம் பேர் சஸ்பெண்ட்?: இரவு பகலாக காத்திருப்பு போராட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 13, 2017

Comments:0

அரசு ஊழியர், ஆசிரியர் போராட்டம் தீவிரம் 7 லட்சம் பேர் சஸ்பெண்ட்?: இரவு பகலாக காத்திருப்பு போராட்டம்

கோரிக்கை நிறைவேறும் வரை இரவு பகலாக காத்திருக்கும் போராட்டம் தமிழகம் முழுவதும் தொடங்கியது. போராட்டத்தில் கலந்து கொள்ளும் அரசு  ஊழியர், ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. இதனால் 7 லட்சம் பேர் சஸ்பெண்ட் ஆகும்  நிலை  ஏற்பட்டுள்ளது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். முதற்கட்டப்  போராட்டத்தின் உச்சமாக கடந்த மாதம் 22ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். அதற்கு பிறகு செப்டம்பர் 7ம் தேதி தொடர்  வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். அதனால் 6ம் தேதியே முதல்வர் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் உடன்பாடு  ஏற்படவில்லை. இதையடுத்து, 7,8,9 ம் தேதி தொடர் போாட்டங்களை அறிவித்தனர். பின்னர் 11ம் தேதி முதல் அடுத்த கட்ட போராட்டம்  அறிவித்தனர். இந்த அறிவிப்புக்கு ஏற்ப நேற்று மறியல் போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் நேற்றும் 7 லட்சம் பேர் நேற்று கைதாகி  மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் தாஸ், மோசஸ், அன்பரசு, சுப்ரமணியன் ஆகியோர் மீது நீதி மன்ற அவமதிப்பு வழக்கு  தொடரப்பட்டு, அவர்கள்  நான்கு பேர் மட்டும் 15ம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  இதற்கிடையே நேற்றைய மறியல் போராட்டம் தொடங்குவதற்கு முன்னதாக மேற்கண்ட நான்குபேரை மட்டும் அந்தந்த மாவட்ட போலீசார்  மிரட்டியதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் போராட்டத்தை முன்னின்று நடத்தி செல்லும் ஒருங்கிணைப்பாளர் தாஸ்  என்பவரை திருவள்ளூர் மாவட்ட போலீசார் கைது செய்து அழைத்து சென்று தனி அறையில் அடைத்து வைத்து மிரட்டியதாக நேற்று தகவல்  பரவியது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஒன்று திரண்டு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனால்  போலீசார் தாசை விடுவித்துள்ளனர். இதே பாணியில் அந்தந்த மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரதிநிதிகளை போலீசார் மிரட்டி வருவதாக  ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். 
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராத அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக குறிப்பாணை(17-ஏ) அனுப்பி வருகிறது. அதில் 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும்  கேட்டுள்ளது. இந்த குறிப்பாணைகள் அரசு ஊழியர்களைவிட ஆசிரியர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது. நேற்று தான் அனைத்து ஆசிரியர்களுக்கும்  குறிப்பாணை கிடைத்துள்ளது. இப்படி பல்வேறு மிரட்டல்கள் அரசு தரப்பில் இருந்து வந்தாலும் கோரிக்ைக நிறைவேறும் வரை தங்கள் போராட்டம்  தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ தெரிவித்துள்ளது. இந்நிலையில், பணிக்கு வராதவர்களை சஸ்பெண்–்ட் செய்ய வேண்டும் என்று அரசு  தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 
இந்த பரபரப்புக்கு இடையே, இன்று முதல் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் காத்திருப்பு போராட்டத்தை ஜாக்டோ-ஜியோவினர்  தொடங்கியுள்ளனர். இது குறித்து ஒருங்கிணைப்பாளர் தாஸ் கூறியதாவது: அரசு தரப்பில் இருந்து எங்களுக்கு பல நெருக்கடிகள் வருகின்றது. போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் ஒருங்கிணைப்பாளர்களை போலீசார்  மிரட்டுகின்றனர். எங்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை திரும்ப வழங்க வேண்டும், பழைய பென்ஷன் வேண்டும் என்றும் கேட்கிறோம். இது  எங்கள் உரிமை அப்படி இருக்க போராடக் கூடாது என்று நீதிமன்றம் தடை விதிப்பது என்ன நியாயம். அதற்கு தடை விதிக்கின்றனர். அந்த தடை  உத்தரவு எங்களுக்கு வரவில்லை. போராட்டம் நடத்தினோம். இப்போது நீதிமன்ற அவமதிப்பு என்று வழக்கு போட்டுள்ளனர். 
ஜாக்டோ-ஜியோவுக்கு 6  ஒருங்கிணைப்பாளர்கள் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட நான்கு பேரில் மட்டும் அவமதிப்பு வழக்கு போட்டுள்ளனர். இது எங்களை மிரட்டும் செயல்.  இதை சட்டப்படி நாங்கள் சந்திப்போம். இது ஒருபுறம் இருக்க நாங்கள் அறிவித்தபடி இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்துகிறோம். அந்தந்த  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இரவு, பகலாக காத்திருப்போம். கோரிக்கை நிறைவேறும் வரை இத  தொடரும். என்ன நடந்தாலும் இதில் இருந்து நாங்்கள் பின்வாங்கமாட்டோம். இந்நிலையில், எங்களுக்கு குறிப்பாணையை கல்வித்துறை  வழங்கியுள்ளது. அதில் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் இன்று ஒரு தகவலை அரசு பரப்பி வருகிறது.  அதாவது, போராட்டத்தில் கலந்து கொண்டு பணிக்கு வராமல் உள்ளவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு  போட்டுள்ளதாக  கூறப்படுகிறது. அப்படியானால் 7 லட்சம் பேரை சஸ்பெண்ட் செய்வார்களா? அப்படி செய்தாலும் நாங்கள் போராட்டத்தை கைவிட  மாட்டோம். 
இவ்வாறு ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்தார். இதன்படி ஜாக்டோ-ஜியோ போராட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பிரிந்து சென்ற சங்கங்களை சேர்ந்தவர்கள் திரும்பவும் இந்த போராட்டத்தில்  இணைந்து வருகின்றனர். கல்லூரி ஆசிரியர்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து களத்தில் இறங்கியுள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகளும்  ஆதரவு தெரிவித்து வருவதால் போராட்ட களம் பரபரப்படைந்துள்ளது.
********************

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews