பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர் இன்று தற்செயல் விடுப்பு போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்த விவகாரத்தில் தலைமை செயலர் நா.முருகானந்தம் துறை செயலர்களுக்கு சில விளக்கங்களை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சிபிஎஸ் (பங்களிப்பு ஓய்வூதிய திட்டம்) ஒழிப்பு இயக்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.ஜெயராஜ ராஜேஸ்வரன், பி.பிரெட்ரிக் எங்கெல்ஸ், மு.செல்வகுமார் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, திமுக தனது தேர்தல் அறிக்கையில் (எண் 309) அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது.
ஆனால், ஆட்சி பொறுப்பேற்று 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திமுக அரசு இன்னும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை. தமிழகத்தைவிட நிதி வருவாயில் பின்தங்கிய மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டமே தற்போதும் அமலில் உள்ளது. தேர்தல் வாக்குறுதியின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொள்கைரீதியாக அமல்படுத்துவதற்கு மாறாக தமிழக அரசு, அலுவலர் குழுவை நியமித்துள்ளது. தமிழக நிதித்துறையின் விருப்பத்தையே அலுவலர் குழு, அரசுக்கு அறிக்கையாக வழங்கும் என்பது கடந்த கால அனுபவம். பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கையை வலியுறுத்தி 2026-ம் ஆண்டு ஜனவரியில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
அதற்கு முன்தயாரிப்பாக செப்.11-ம் தேதி (இன்று) ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறுகிறது. அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தன் உணர்வுடன் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். தமிழக அரசும் தேர்தல் வாக்குறுதியின்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
வருகைப்பதிவு விவரம்: இதற்கிடையே, தமிழக அரசின் தலைமைச் செயலர் ந.முருகானந்தம் அனைத்து துறைகளின் செயலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: குறிப்பிட்ட கோரிக்கையை வலியுறுத்தி செப். 11-ம் தேதி அன்று ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுக்க அரசு ஊழியர்கள் திட்டமிட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அங்கீகார விதிமுறையின்படி, எந்த ஒரு சங்கமும் அதன் உறுப்பினர்களை ஒட்டுமொத்தமாக தற்செயல் விடுப்பு எடுக்கச் சொல்ல முடியாது. அனைத்து துறைகளின் செயலர்களும் தங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் வியாழக்கிழமை காலை 10.15 மணிக்குள் ஊழியர் வருகைப்பதிவு விவரங்களை தவறாமல் தெரிவிக்க வேண்டும். அதன் நகலை மனிதவள மேலாண்மைத் துறைக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்ப வேண்டும்.
அதேபோல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தங்கள் நிர்வாக வரம்புக்கு உட்பட்ட அரசு அலுவலகங்களில் ஊழியர் வருகைப்பதிவு விவரங்களை வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் வாயிலாக அரசுக்கு தெரிவிக்க வேண்டும். அதன் நகலை மனிதவள மேலாண்மைத் துறைக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.