HMPV வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 06, 2025

Comments:0

HMPV வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கமா?

dinamani%2Fimport%2F2020%2F7%2F14%2Foriginal%2Flockdown


எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கமா? HMPV virus outbreak.. Will there be another lockdown?

சீனா, மலேசியாவைத் தொடர்ந்து எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

வழக்கமான கண்காணிப்புப் பரிசோதனையின்போது, பெங்களூருவில் நிமோனியா பாதித்து சிகிச்சை பெற்று வந்த இரண்டு குழந்தைகளுக்கு மெடாநியூமோவைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

சீனாவில் நுரையீரல் தொற்று பாதித்து அதிகமானோர் மருத்துவமனைகளில் குவிந்து வருவதற்குக் காரணமான எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு மலேசியாவிலும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், இந்தியாவிலும் இன்று 3 குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பெங்களூருவிலும், குஜராத்திலும் மூன்று குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று காலை அறிவித்தது.

ஏற்கனவே, சீனாவின் சில நகரங்களில் பொதுமுடக்கத்துக்கு நிகரான கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், மலேசியாவிலும் முகக்கவசம் அணிய வேண்டும், கைகளை அவ்வப்போது சோப்பு கொண்டு கழுவ வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மக்கள், தங்களது சுகாதாரத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும், மூடிய மற்றும் அதிகக் கூட்டம் நிறைந்த பகுதிகளுக்குச் செல்லும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.

அதுபோல, எச்எம்பிவி அதிகம் பாதித்துவரும் நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும்போது அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.

தற்போது வரை, இது மிகப்பெரிய உயிராபத்தை ஏற்படுத்தும் நோயாக அடையாளம் காணப்படவில்லை. பெங்களூருவில் வைரஸ் பாதித்த குழந்தைகளில் ஒன்று குணமடைந்து வீடு திரும்பிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, பொதுமுடக்கம் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடையாது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் பொதுமுடக்கமா?

தற்போது வரை குழந்தைகளுக்குத்தான் இது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், எச்எம்பிவி பாதித்த பகுதிகளில் முதற்கட்டமாக 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்க அறிவுறுத்தப்படலாம். அல்லது வடகிழக்கு மாநிலங்களில் குளிர் குறையும் வரை சில நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம். ஆனால் இதுவரை அது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

கரோனா பாதிப்பின்போது, இதுபோன்ற சூழ்நிலையை நாடு எதிர்கொண்டதில்லை என்பதால் பாதிப்பு அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது மக்களும், அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கத் தயாராகி வரும் நிலையில், பொதுமுடக்கத்துக்கான அபாயம் குறைவுதான் என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.

அதிக அச்சம் ஏன்?

ஏற்கனவே கரோனா வைரஸ் சீனாவிலிருந்து பரவியதால், தற்போது எச்எம்பிவி வைரஸ் சீனாவை கடுமையாக பாதித்திருக்கும் நிலையில், உலக நாடுகளுக்கும் மக்களுக்கும் அச்சம் எழுந்துள்ளது. சீனாவிலும் குறிப்பாக சில நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கடுமையான நோயாளிகள் கூட்டம் குவிந்து வருகிறது.

ஹியூமன் மெடாநியூமோவைரஸ்?

எச்எம்பிவி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது நேற்றோ இன்றோ அல்ல.. கடந்த 2001ஆம் ஆண்டு. இது சுமார் 24 ஆண்டுகளாக நம்முடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இது பாதித்தால் நுரையீரல் தொற்று ஏற்பட்டு மூச்சு விடுவதில் பாதிப்பு ஏற்படும். இதன் அறிகுறிகளாக சாதாரண சளி மற்றும் காய்ச்சல்கள் இருக்கும். நோய் பாதித்து 4 அல்லது 10 நாள்களுக்குப் பிறகுதான் எச்எம்பிவியை உறுதி செய்ய இயலுமாம். யாருக்கு அதிக பாதிப்பு?

இந்த வைரஸ் எல்லாரையுமே தாக்கும் அபாயம் உள்ளது என்றாலும் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளைத் தாக்கினால் பாதிப்பு அதிகமாக இருக்கும். முதியவர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும், மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவானர்கள், ஏற்கனவே ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்பவர்களை பாதித்தால் அபாயம் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன?

வழக்கமான காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம்

எப்படிப் பரவும்?

கரோனா போலவே இருமல், தும்மல் மூலம் பரவலாம். நோய் பாதித்தவர்கள் மூக்கு, வாயைத் தொட்டுவிட்டு வேறு எங்கேணும் அவர்களது கையை வைத்து, அந்த இடத்தை மற்றவர் தொட்டால் வைரஸ் பரவலாம்.

சிகிச்சை என்ன?

தண்ணீர் அதிகம் குடித்து ஓய்வாக இருப்பது, உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

தடுக்கும் வழிமுறைகள்

கையை அவ்வப்போது சோப்புப் போட்டு கழுவ வேண்டும், முகக்கவசம் அணிவது போன்றவை.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84603374