சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி தனது மாணவர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும்! - பிரின்ஸ் கஜேந்திர பாபு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, October 06, 2024

Comments:0

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி தனது மாணவர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும்! - பிரின்ஸ் கஜேந்திர பாபு



சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி தனது மாணவர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும்! - பிரின்ஸ் கஜேந்திர பாபு

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி தனது மாணவர் விரோதப் போக்கைக் கைவிட வேண்டும்!

கல்லூரியின் வரலாற்றுத் துறை இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் பா.சாமுவேல் அவர்களை உடனடியாக கல்லூரியில் மீண்டும் சேர்க்க வேண்டும்!

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்!

உலகின் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமை நடந்த வண்ணம் உள்ளது.

இந்தியாவின் தலைநகர் புதுதில்லியில் "நிர்பயா"விற்கு நிகழ்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமை இந்தியாவை உலுக்கியது.

பல்வேறு சட்டங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட பின்னரும் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா மருத்துவமனையில் ஒரு பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி இறந்துள்ளார். மருத்துவக் கல்லூரி முதல்வர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. இதை கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடந்தது. மாணவர் அமைப்புகள் அகில இந்திய அளவில் விடுத்த அறைகூவலை தொடர்ந்து இந்தியா முழுக்க பல்வேறு கல்வி வளாகங்களில் கொல்கத்தா மாணவிக்கு நீதி வேண்டி போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநிலத்தில் பல்வேறு கல்வி வளாகங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரியிலும் மாணவர்கள் கொல்கத்தாவில் பாதிக்கப்பட்ட மருத்துவருக்கு நீதி வேண்டி போராடியுள்ளனர்.

சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தங்களின் அடிப்படை தேவைகளை கல்லூரி நிர்வாகம் நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தி போராடி உள்ளனர்.

இந்த இரண்டு‌ போராட்டங்களில் பங்கேற்ற சென்னை பச்சையப்பன் கல்லூரி வரலாற்றுத் துறை இளங்கலை முதலாம் ஆண்டு மாணவர் பா. சாமுவேல் அவர்கள் 03.10.2024 அன்று மாற்றுச் சான்றிதழ் தரப்பட்டு கல்லூரியில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளார்‌.

மாற்றுச் சான்றிதழில் கல்லூரி முதல்வர் மாணவர் நடத்தை "திருப்தி இல்லை" (Conduct and Charector: Not Satisfactory) என்று குறிபிட்டதுடன் கல்லூரி நீக்கிய மாணவரை "discontinued" என்றும் குறிப்பிட்டுள்ளார். நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய மாணவரை "இனி எந்த கல்லூரியிலும் சேர்ந்து படிக்க கூடாது" என்ற வன்மத்துடன் கல்லூரி முதல்வர் நடந்துக் கொண்டுள்ளது பெரும் அதிர்ச்சியை தருகிறது.

அதுவும் விடுதலைப் போராட்டக் காலம் தொட்டு, மொழிப் போராட்டக் காலம் உட்பட மாணவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து வரும் வரலாற்றைக் கொண்ட பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களைப் பழிவாங்கும் நோக்குடன் தற்போதைய கல்லூரி முதல்வர் நடந்துக் கொண்டுள்ளது கல்லூரியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

கல்லூரி முதல்வரின் நடவடிக்கை அப்பட்டமான பழிவாங்கும் நோக்குடன் உள்ளது என்பதை மாற்றுச் சான்றிதழை படிக்கும் யாராலும் புரிந்துக் கொள்ள இயலும்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடினால் மாற்றுச் சான்றிதழ் வழங்குவது என்றால் கல்லூரியின் முதல்வர் பாலியல் வன்கொடுமையை ஆதரிக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.

மாணவர்கள் அடிப்படைப் வசதிகள் கேட்டு போராடினால் மாற்றுச் சான்றிதழ் என்றால் மாணவர்கள் நிர்வாகம் தருவதை ஏற்றுக் கொண்டு செல்ல வேண்டும், உரிமை குறித்து பேசக் கூடாது என்று கல்லூரி நிர்வாகம் கருதுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

தவறு செய்த மாணவர்களுக்கு முறையான விசாரணைக்கு பின்னர் விசாரணை அறிக்கை முறைப்படித் தந்து முதல் தவறுக்கு எச்சரிக்கை, அடுத்தும் நிகழ்ந்தால் இடை நீக்கம், திருத்த வாய்ப்பே இல்லை என்ற அசாதாரண சூழலில் மட்டுமே முற்றிலுமாக கல்லூரியில் இருந்து நீக்கம் என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. மாணவர் பா. சாமுவேல் என்ன தவறு செய்தார்?

இந்திய அரசமைப்புச் சட்டம் கூறு 19 தந்துள்ள அடிப்படை உரிமையைப் பயன்படுத்தி போராடியது குற்றமா?

பாலியல் வன்கொடுமை நடக்கக் கூடாது என்று கூறியது குற்றமா?

மாணவர்களுக்கு அடிப்படை வசதிகளை கல்லூரி நிர்வாகம் செய்துத் தர வேண்டும் என்று கோரியது குற்றமா?

கல்லூரியை விட்டு நீக்கும் அளவிற்கு என்ன குற்றம் செய்தார் இந்த முதல் தலைமுறை கல்லூரியில் கால் வைத்திருக்கும் மாணவர் பா‌.சாமுவேல்?

கல்லூரி முதல்வரின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.‌

சென்னை, பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் உடனடியாக மாற்றுச் சான்றிதழைத் திரும்பப் பெற்று மாணவர் பா. சாமுவேல் அவர்கள் படிப்பைத் தொடர அனுமதிக்க வேண்டும்.

சென்னை, பச்சையப்பன் கல்லூரி நிர்வாகம் நீக்கப் பட்ட மாணவரை மீண்டும் கல்லூரியில் சேர்க்க தவறினால், கல்லூரி கல்வி இயக்ககம் தலையிட்டு, கல்லூரியில் முழுமையான விசாரணை மேற்கொண்டு மாணவரை மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்க நடவடிக்கை மேற்கொள்வதுடன், மாணவர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகளை கல்லூரி முதல்வர் தொடர்ந்து மேற்கொள்ளக் கூடாது என்ற அறிவுரையை கல்லூரி முதல்வருக்கு வழங்க வேண்டும். பெரியாரின் சுயமரியாதை கோட்பாட்டை உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நாடு அரசு, கல்லூரிகளில் மாணவர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

மாணவர் பா. சாமுவேல் அவர்களுக்கு நீதி கிடைக்க கல்வியின் மீது அக்கறை கொண்ட அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு

பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

14-A, சோலையப்பன் தெரு,

தியாகராயா நகர், சென்னை - 600 017.

மின்னஞ்சல்: spcsstn@gmail.com

தொடர்பு எண்: 94456 83660

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews