ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க விருப்பமா? - நிதி ஆலோசனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, September 06, 2024

Comments:0

ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க விருப்பமா? - நிதி ஆலோசனை



ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க விருப்பமா? - நிதி ஆலோசனை

நம் சேமிப்புக்கு வேட்டு வைக்கும் விஷயங்கள் பற்றி விவரிக்கிறார், நிதி ஆலோசகர் சுந்தரி ஜகதீசன்: 'எவ்வளவு நாள் தான் சிக்கனமாக இருப்பது... எதற்காக சம்பாதிக்கிறோம்; எவ்வளவு பாடுபட்டு மேலே வந்திருக்கிறோம்; கொஞ்சம் வசதியை அனுபவிப்பதில் என்ன தவறு? பதவி உயர்வு வந்த பிறகும், இவ்வளவு இழுத்துப் பிடிக்க வேண்டுமா?' என்பது போன்ற சில கேள்விகள் நியாயமானவை தான். ஆனால், வரவு ஏறும் போதே, செலவும் ஏறும் இந்த, 'லைப்ஸ்டைல் இன்ப்ளேஷன்' நம் செல்வ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாகும். கையில் சிறிது பணப்புழக்கம் அதிகரித்தாலே, ஏதோ நாம் பொருளாதார சுதந்திரத்தை அடைந்து விட்டது போலவும், திட்டமிட்டு தான் அதிக செலவை செய்வது போலவும் நினைத்துக் கொள்கிறோம்.

பணத்தை சற்று அதிகம் செலவழிப்பதால், உடனடியாக கிடைக்கும் இன்பமானது, எதிர்கால தேவைகள் பற்றிய எண்ணங்களை, எச்சரிக்கைகளை மாற்றி அமைத்து விடும். 'நானெல்லாம் அப்படி இல்லை; அன்றும், இன்றும் ஒரே மாதிரியான எளிய தேவைகள் தான் எனக்கு' என்கிறீர்களா? மனதை தொட்டுச் சொல்லுங்கள்... நம் உணவு பழக்கங்கள் எவ்வளவு மாறி உள்ளன.

வாழைப்பழம், நிலக்கடலை, இட்லி, தயிர் சாதம் என்றிருந்த இடத்தில், இன்று ஆப்பிள், ஸ்ட்ராபெரீஸ், கேட்பரீஸ் சாக்லேட், பாதாம், பிஸ்தா, பீட்சா, ஷவர்மா...! இந்த உயர்நிலை மாற்றமானது, நம் ஆடைகள், அணிகலன்கள், வீட்டு அலங்கார பொருட்கள், பர்னிச்சர், கார், டிவி, போன் என, அத்தனையிலும் நிகழ்ந்துள்ளது. இவை எல்லாம், நம் நீண்ட கால சேமிப்பை பாதிக்குமானால், 'பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ்மென்ட் வீக்' என்ற நிலைக்கே நம்மை இழுத்துச் செல்லும். நம் அதீத செலவுகளுக்கு காரணம், விலைவாசி உயர்வும், பண வீக்கமும் மட்டுமல்ல... லைப்ஸ்டைல் இன்ப்ளேஷனும் தான். இது, நம் செல்வ வளர்ச்சிக்கு உலை வைத்து விடும்.

பார்க்குகளில் நடைபயிற்சி, பாடல்களை கேட்டல், தோட்டக் கலையில் ஈடுபடுதல், நண்பர்களுடன் அரட்டை போன்ற செலவில்லாத பொழுது போக்குகளை ரசிக்க தெரிந்தவர்களுக்கு, லைப் ஸ்டைல் இன்ப்ளேஷன் தொல்லை இல்லை.நம் உடை, கார், வாட்ச், போன் போன்றவற்றின் வாயிலாக, நம்மை மதிப்பீடு செய்வோரிடம் இருந்து, நாம் சற்று தள்ளி இருப்பது நல்லது.

இல்லையெனில், ஒவ்வொரு முறை அவர்களை சந்திக்க நேரும் போதும், நம்மை அவர்கள் மதிக்கும்படி உயர்வாக காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படும்.வாழ்நாள் எல்லாம் உழைத்த பணத்தை சேர்த்து, ஓய்வு காலத்தை நிம்மதியாக கழிக்க விரும்புவோருக்கு, இந்தக் குறிப்புகள் உதவும்; விரும்புவோர் பின்பற்றலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews