‘பிஎட், எம்எட் படிப்புகளில் விதிகளுக்கு புறம்பான சேர்க்கையில் ஈடுபட்டால் அங்கீகாரம் ரத்து’
பிஎட், எம்எட் படிப்புகளில் விதிமுறைகளுக்கு புறம்பான சேர்க்கையில் ஈடுபடும் கல்வியியல் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகத்தின் பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் அனைத்து கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் செயலாளர்களுக்கு இன்று (செப்.3) அனுப்பியுள்ள உத்தரவில், “தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு அங்கீகாரம் பெற்று இயங்கும் தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளில் பல்வேறு சேர்க்கை மையங்கள் வாயிலாக ரெகுலர் முறையில் வகுப்புகளுக்கே வராமல் சேர்க்கை செய்து தேர்வெழுத அனுமதிப்பதாக யுஜிசியிடமிருந்து புகார் வரப்பெற்றுள்ளது.
எனவே, கல்லூரி முதல்வர்கள் மற்றும் செயலாளர்கள் இத்தகைய பல்கலைக்கழக விதிகளுக்கு புறம்பான மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது. இதுபோன்ற விதிமுறைகளுக்கு புறம்பான சேர்க்கையை மேற்கொள்ளும் கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி களஆய்வு செய்யப்பட்டு இணைப்பு அங்கீகாரத்தை ரத்துசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வெளிமாநில மாணவர்கள் நேரடி தேர்வுகளுக்கு வருவதில்லை என புகார் வந்துள்ளது. வெளி மாநிலங்களில் இயங்கும் மாணவர் சேர்க்கை மையம் வாயிலாக தேர்வே எழுதாமல் தேர்ச்சி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வகுப்புக்கு வராதோரை தேர்வெழுத வைத்தால் பி.எட். கல்லூரிகள் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
வரும் காலங்களில் பி.எட். கல்லூரிகளில் முன்னறிவிப்பின்றி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.
குளோபல் அகாடமி என்ற நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பி.எட். கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.