ஏஐசிடிஇ அட்டவணையில் திருத்தம்: முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் அக்டோபரில் தொடங்கும்
பொறியியல் படிப்புகளில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 23-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) சார்பில் ஆண்டுதோறும் கல்வியாண்டு கால அட்டவணை வெளியிடப்பட்டு வருகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு பொறியியல், மேலாண்மை போன்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் வகுப்புகள் தொடங்கும் நாள், பருவத் தேர்வுகள் மற்றும் விடுமுறைகள் உட்பட அனைத்து அலுவல் விவகாரங்களையும் முடிவு செய்து செயல்படுகின்றன.
அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான (2024-25) கால அட்டவணை கடந்த ஜூன் மாத இறுதியில் வெளியிடப்பட்டது. அதில், பொறியியல் மாணவர் சேர்க்கையை நடத்தி முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். மேலும், நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையையும் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கல்லூரிகளின் கோரிக்கையை ஏற்று கல்வியாண்டு கால அட்டவணையில் திருத்தம் செய்து ஏஐசிடிஇ தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, பொறியியல் கலந்தாய்வை முடித்து முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்குவதற்கான அவகாசம் அக்டோபர் 23-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேரடி 2-ம் ஆண்டு மாணவர் சேர்க்கையையும் கல்லூரிகள் அக்டோபர் 23-ம் தேதி வரை மேற்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.