கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க உயர் கல்வித் துறை அனுமதி
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் கூடுதல் மாணவர்களைச் சேர்க்க அனுமதி வழங்கி உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலாளர் (பொறுப்பு) ஜெ.குமரகுருபரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
2024-25-ம் நிதி ஆண்டுக்கான உயர்கல்வித் துறைக்கான மானிய கோரிக்கையின்போது, 2024-25-ம்கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தேவையுள்ள கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளுக்கு 15 சதவீதமும், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு 10 சதவீதமும், தனியார் சுயநிதி கல்லூரிகளில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 10 சதவீதமும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்தார். அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் 2024-25-ம் கல்வி ஆண்டில் மேற்கண்டவாறு கூடுதலாக மாணவர்களைச் சேர்க்க பின்வரும் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களால் முதன்முதலில் ஒப்பளிக்கப்பட்ட மாணவர் சேர்க்கையின் அடிப்படையில் கூடுதல் சேர்க்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
கூடுதல் மாணவர் சேர்க்கையினால் கூடுதல் பணியிடங்கள் கோரக் கூடாது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெறவேண்டும். கூடுதல் சேர்க்கை நடப்பு கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.