மத்திய பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பில் மாற்றம், சலுகைகள் என்னென்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2024

Comments:0

மத்திய பட்ஜெட் 2024: புதிய வருமான வரி விதிப்பில் மாற்றம், சலுகைகள் என்னென்ன?



புதிய வருமான வரி விதிப்பு (New Tax Regime) முறையில் வரி விகிதக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வரி செலுத்த தேவையில்லை என்று மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று (ஜூலை 23) காலை தாக்கல் செய்தார். அவர் தனது உரையில், “புதிய வருமான வரி விதிப்பில் வரி விகிதக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படும்.

வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும். ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5% வரி விதிக்கப்படும். ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருவாய்க்கு 10% வரி விதிக்கப்படும். ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான வருவாய்க்கு 15% வரி விதிக்கப்படும்.

ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான வருவாய்க்கு 20% வரி விதிக்கப்படும். ரூ.15 லட்சம் மற்றும் அதற்கு மேல் - 30% வரி விதிக்கப்படும். இதன் மூலம், சம்பளம் பெறும் ஊழியர் ஆண்டுக்கு ரூ.17,500 வரை வருமான வரியைச் சேமிக்க முடியும். புதிய வரி முறையைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு, சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு ரூ.50,000-ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்படும். அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்துக்கான பிடித்தம் ரூ.15,000-ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.

இதன் மூலம் சுமார் 4 கோடி சம்பளம் பெறும் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். 1961-இன் வருமான வரிச் சட்டம் ஆறு மாதங்களில் மறுஆய்வு செய்ய பட்ஜெட் முன்மொழிகிறது. வருமான வரி சார்ந்த வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் வருமான வரிச் சட்டம் மறு ஆய்வு செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews