ஆசிரியர்களின் நிலை - "அன்றும், இன்றும்"
இன்றைய காலக்கட்டத்தில் ஆசிரிய ராக இருப்பது உலகிலேயே மிகக்கடினமான, சவாலான பணியாகவும் உணர்கிறேன். எங்களது பள்ளி ஆசிரியர்களிடம் இதுபற்றி கலந்துரையாடி, கருத்துக் கணிப்பு நடத்தியதை பகிர்கிறேன். ஆசிரியர்களின் நிலை அன்று:
திண்ணைப் பள்ளிகளும், பாடசாலைகளும் இருந்த காலத்திலும் சரி, பள்ளிக்கூடங்களாக மாறிய காலத்திலும் சரி, ஆசிரியர் பணி என்பது போற்றுதற்குரியதாகவும் மதிப்பும் மரியாதையும் நிறைந்த பணியாகவும் உணரப்பட்டு வந்தது.
கணித வாய்ப்பாடு படிக்காமல் வந்தால் ஆசிரியரின் அடியும், இடுப்பில் வாங்கிய கிள்ளும் இன்றும் நினைவில் உள்ளது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே, இரண்டு முதல் 12 வாய்ப்பாடு வரை கடகடவென சொல்லிய நினைவு உள்ளது.
நான்காம் வகுப்பு படிக்கும் போதுஒரு சில மணித்துளிகள் பள்ளியின் காலை வழிபாட்டுக்கு தாமதமாகச் சென்றதால் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் பத்து நிமிடம் முட்டிக்கால் போட்டு இருந்த அனுபவத்தினாலோ என்னவோ இன்றளவும் காலத்தின் அருமையையும், காலம் தவறாமையின் உன்னதத்தையும் உணர முடிகிறது. வீட்டுப் பாடங்களை படிக்காமல் சென்றால், மறுநாள் பெற்றோரை அழைத்து வா என்று சொல்லிவிடுவார்களே என்ற பயத்திலேயே அன்றைக்கான பாடங்களை அன்றேசெய்து முடிக்கும் வழக்கம் ஏற்பட்டது. தொலைக்காட்சியில் வெள்ளிக்கிழமையில் அரைமணி நேரம் ஒளியும் ஒலியும் ஞாயிற்றுக்கிழமை மாலையில் பார்க்கின்ற ஒரே ஒரு திரைப்படம். அதுவும் மாதத்திற்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி இருந்தது.
மதிப்பும் மரியாதையும்:
இன்றைய தலைமுறையின் வெற்றிக்கு அன்றைய ஆசிரியர்களின் கண்டிப்பும், பெற்றோர்களின் அரவணைப்புடன் கூடிய கண்காணிப்புமே காரணம் என்று எண்ணுகிறேன். அன்றைய காலத்தில் மாணவர்கள் எழுத்தை திருத்தமாக எழுதுவதற் கும் பிழையின்றி எழுதுவதற்கும் ஆசிரியர்களின் கரங்களால் கைமுட்டியிலேயே அடி வாங்கியதுதான் மூல காரணம் என்று நினைக்கிறேன். இன்றளவும் எனது பள்ளி ஆசிரியர்கள் மீதான மதிப்பும், மரியாதையும் எள்ளளவும் குறையவில்லை. இன்றைய ஆசிரியர்களின் அவல நிலை:
தனது கண்ணுக்கு முன்னே நடக்கின்ற விழிப் பரிமாற்றத்தையும் சைகைப் பேச்சுக்களையும் தட்டிக் கேட்க முடியாத கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இன்றைய ஆசிரியர்கள். வகுப்பில் மாணவரின் பெயர் சொல்லி அழைத்த பிறகும் கூட எழும்புவதற்கு யோசித்துக் கொண்டும், கேட்ட கேள்விக்கு பதில் கூறத் தயங்குகின்றனர்.
பெற்றோர் கண்டிக்கவோ, ‘படி’ என்று சொல்லவோ பயப்படுகின்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். எங்கே செல்கிறது இந்த மாணவ சமுதாயம்? மாணவர்களின் வயதுக்கு மீறிய விஷயங்களை கணினியிலும் செல்போன் என்ற மாய வலையின் மூலமும் தெரிந்து கொள்வது அவர்களது மனநலத்துக்கும் நல்லதல்ல. செல்போனுக்கு அடிமையாகிய மாணவர்கள் மனநோயாளிகளாக மாறுவதாக உளவியலாளர்களும் கருத்துகளைப் பதிவிடுகின்றனர். படிக்கச் சொல்லி வற்புறுத்தும் பெற்றோர்களும் தனது மகன் அல்லது மகள் ஏதாவது செய்து விடுவார்களோ? என அஞ்சுகின்றனர். தற்போது மாணவர்களிடம் பாடங் களை கொண்டு சேர்ப்பதற்கான நேரம் எங்கே? செல்போனிற்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகிவிட்டு காது கேளாதோர் போல் நடந்து கொண்டிருக்கும் மாணவர்களை எவ்வாறு அதிக மதிப்பெண்களை எடுக்க வைப்பது? தனது எதிர்காலம் பற்றிய சரியான புரிதலோ, திட்டமிடலோ இல்லாத வாழ்க்கையின் இலக்கினை தீர்மானிக்காத மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்திடுவது ஆசிரியரின் கண்டிப்பின்றி எவ்வாறு சாத்தியம்? 90 சதவீத மாணவர்களின் நிலை இன்று இதுவே.
பெற்றோரின் அன்பினையும் புரிந்து கொள்ளாமல் ஆசிரியரின் கண்டிப்பினையும் புரிந்து கொள்ளாமல் இந்த மாணவர் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? ஆசிரியர்களின் கரங்கள் இன்று கட்டப்படுமானால் ஒழுக்கமிகு மாணவர்களை நல் மனிதர்களாக உருவாக்கிடுவது எவ்வாறு சாத்தியம்? இன்று கண்டிக்கின்ற ஆசிரியர்களை புழுக்களைப் போன்று பார்க்கின்ற சமுதாயத்தினை என்னவென்று சொல்வது?
- கட்டுரையாளர் தலைமை ஆசிரியர் பல்லோட்டி மேல்நிலைப்பள்ளி நாகமலை, மதுரை
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.