பள்ளிகள் திறப்புக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன
கோடை விடுமுறை முடிந்து பின்பு பள்ளிகள் திறப்பது தொடர்பாக இந்த மாத இறுதியில்தான் முடிவெடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி வரையும், 4 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 முதல் 23-ம் தேதி வரையும் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மேலும், மக்களவைத் தேர்தல் முன்னிட்டு இந்தாண்டு கூடுதலாக கிடைத்துள்ள விடுமுறை நாட்களை மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கழித்து வருகின்றனர்.
வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்பட்டு, ஜூன் மாத தொடக்கத்தில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாவதால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பெற்றோர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,
“இந்த மாத தொடக்கத்தில் கோடை வெயில் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக, பள்ளிகளை சற்று தாமதமாக ஜூன் 2-வது வாரத்தில் திறக்க முதலில் திட்டமிட்டோம். ஆனால், கடந்த ஒரு வாரமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் இன்னும் ஒருவாரம் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் ஜூன் முதல் வாரத்திலேயே தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் பள்ளிகளை திறக்க பரிசீலித்து வருகிறோம். இதுசார்ந்த ஆலோசனைக் கூட்டம் மே 27-ம் தேதி நடைபெற உள்ளது. அப்போதைய சூழல்களை கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். எனினும், அலுவல் ரீதியாக பள்ளிகள் திறப்புக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன” என்றனர்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.