உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்; ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை (SET) நடத்த கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 06, 2023

Comments:0

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்; ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை (SET) நடத்த கோரிக்கை

உதவி பேராசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு தேர்ச்சி கட்டாயம்; ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமல்ல, விருப்பத் தகுதியாகவே இருக்கும்; அதேநேரத்தில் தேசியத் தகுதித் தேர்வு (National Eligibility Test - NET), மாநிலத் தகுதித் தேர்வுகள் (State Eligibility Test -SET) ஆகியவற்றில் ஒன்றில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்திருக்கிறது.

முனைவர் பட்டம் பெறுவதில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்திருக்கிறது. ஆனாலும் கூட, முனைவர் பட்டம் பெற்றதால் உதவிப் பேராசிரியர் பணியில் சேர்ந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்புகளை இந்த முடிவு கடுமையாக பாதிக்கும். அதேநேரத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராசிரியர்கள் நியமனத்திற்கான வழிகாட்டுதல் விதிமுறை எண் 3.3.1இன்படி முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு தகுதித் தேர்வுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விதி தொடருவதால் முனைவர் பட்டம் பெற்றவர்களை நேரடியாக நியமனம் செய்யலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது சரியானதா? என்பதை யு.ஜி.சி விளக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் கடந்த 2018-ஆம் ஆண்டு தான் கடைசியாக கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத்தால் உதவிப் பேராசிரியர் பணிக்கான தமிழ்நாடு மாநிலத் தகுதித் தேர்வு (Tamil Nadu State Eligibility Test -TNSET) நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த ஐந்தாண்டுகளாக தகுதித்தேர்வே நடத்தப்படவில்லை. அதனால், கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய தகுதித்தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஒரு சிலரைத் தவிர வேறு எவரும் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெற்றிருக்க மாட்டார்கள். அதேநேரத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதி பெறும் நோக்குடன் கடந்த ஐந்தாண்டுகளில் முனைவர் பட்டம் பெற்ற பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்புக்கான தகுதியை இழந்து விடுவர்.

தமிழ்நாட்டில் விரைவில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உதவிப் பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அதற்கான அறிவிக்கை எந்த நேரமும் வெளியாகும்; அதன்வழியாக தமிழக அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு சென்று விடலாம் என்று முனைவர் பட்டம் பெற்ற பலர் எண்ணிக் கொண்டிருந்தனர். முனைவர் பட்டம் தகுதியல்ல... தகுதித் தேர்வில் வெற்றி தான் தகுதி என்ற பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவு அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.

2023-ஆம் ஆண்டு ஜூன் 30-ஆம் நாள் வரை உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் தகுதியானவர்கள்; ஜூலை ஒன்றாம் தேதிக்கு பிறகு தகுதியற்றவர்கள் என்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. தமிழ்நாட்டில் அடுத்து எப்போது தகுதித் தேர்வு நடத்தப்படும் என்பது யாருக்கும் தெரியாது; எத்தனையாவது முயற்சியில் வெற்றி பெற முடியும் என்பதும் தெரியாது. அதனால், முனைவர் பட்டம் பெற்று உதவிப் பேராசிரியர் பணிக்கு கடந்த மாதம் வரை தகுதியானவர்களாக இருந்தவர்கள், மீண்டும் அந்தத் தகுதியைப் பெறுவதற்கு ஐந்தாண்டுகள் வரை போராட வேண்டியிருக்கும். அது அவர்களின் வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும். பல்கலைக்கழக மானியக் குழுவின் முடிவால் தகுதியிழந்த முனைவர்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்கப்படவேண்டும். 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை முனைவர் பட்டம் பெற்றவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்கள்; 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு முனைவர் பட்டம் பெற்றவர்கள் தகுதித் தேர்வு எழுதி தான் உதவிப் பேராசிரியர் ஆக முடியும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவிக்க வேண்டும். கடந்த காலங்களில் தகுதித் தேர்வுகள் அறிமுகம் செய்யப்பட்ட போது இவ்வாறு அறிவிக்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன. இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடமும், பல்கலைக்கழக மானியக்குழுவிடமும் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். அது தான் சமூகநீதியாகும்.

அதுமட்டுமின்றி, இனிவரும் காலங்களில் தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை தமிழக அரசு குறைந்தது ஆண்டுக்கு இருமுறையாவது நடத்த வேண்டும். தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் போது, மாநில அளவிலான தகுதித் தேர்வும் ஆண்டுக்கு இரு முறையாவது நடத்தப் பட்டால் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு சமவாய்ப்பும், சமூக நீதியும் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் இப்போது மாநில பல்கலைக்கழகங்கள் வாயிலாக தகுதித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அத்தேர்வுகள் நடத்தப்படும் விதம் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அத்தகைய குற்றச்சாட்டுகளைப் போக்கும் வகையில், தேசியத் தகுதித் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவதைப் போன்று தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த புதிய அமைப்பை தமிழக அரசு நிறுவ வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews