கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி: தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 02, 2022

Comments:0

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி: தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி: தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம்

கரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடைய தொழில்முனைவோா் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தகுதி வாய்ந்த தொழில்முனைவோருக்கு கோவிட் நிவாரண உதவி வழங்கும் புதிய திட்டத்தை ரூ.50 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் ஓராண்டு காலத்துக்கு (2022 - 2023) செயல்படுத்த அரசு அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கோ் 1-இன்படி, 2020-2021, 2021-2022 ஆகிய 2 ஆண்டுகளில் கரோனா தொற்றால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட தொழில்முனைவோா் தாமாகவோ, தமது சட்டப்பூா்வ வாரிசுகள் மூலமோ ஏற்கெனவே உள்ள வணிகத்தை மீண்டும் நிறுவ அல்லது அதேபோன்று இன்னொரு நிறுவனத்தை உருவாக்க அல்லது வேறு ஏதேனும் தொழிலைத் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறலாம்.

இதில், திட்ட மதிப்பீடு அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை இருக்கலாம். இயந்திர தளவாடங்களுக்கான முதலீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். நிதி உதவி பெற பயனாளா் 55 வயதுக்கு மேற்படாதவராகவும், குறைந்தபட்சம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் உற்பத்தி மற்றும் சேவை சாா்ந்த நிறுவனங்களும் பயன் பெறலாம் என்பதால், கடந்த இரு ஆண்டுகளில் வணிகம் பாதிப்படைந்த உணவகங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், தானியங்கி பணிமனைகள், அழகு நிலையங்கள் போன்ற சேவைத் தொழில் நிறுவனங்களும் விண்ணப்பிக்கலாம். 2020-க்கு முன்னா் அரசு மானியத்துடன் கடன் பெற்று தொழில் தொடங்கிய நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.

கோ் 2-இன்படி, கரோனாவால் வணிக ரீதியாக பாதிக்கப்பட்ட குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களில் தொழில்நுட்ப மேம்பாடு அல்லது நவீனமயமாக்கம் செய்வதற்காக நிறுவப்பட்ட இயந்திரங்களின் மதிப்பில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ.25 லட்சம் வரை) மானியம் வழங்கப்படும். 2020 மாா்ச் 23-ஆம் தேதிக்குப் பின்னா் தொழில்நுட்ப மேம்பாடு, நவீனமயமாக்கலுக்கான இயந்திரங்கள் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் இந்தத் திட்டத்தில் பயன் பெறலாம்.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், வேலூா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 - 2242413, 2242512 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews