ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறித்த படைப்பு: பரிசுத் தொகை இனி ரூ.1 லட்சம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 30, 2022

Comments:0

ஆதிதிராவிடர், பழங்குடியினர் குறித்த படைப்பு: பரிசுத் தொகை இனி ரூ.1 லட்சம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை மற்றும் இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் வழங்கப்படும் எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

இதன் மூலம் முன்பு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்ட உதவித் தொகை, தற்போது ஒரு லட்சம் ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களின் சிறந்த இலக்கிய படைப்புகளில் 11 நபர்களது படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, இவர்களது படைப்பினை வெளியிட உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய ஆதிதிராவிடர் கிறித்துவர்களில் 9 நபர்களும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் பிரச்சனைகளை பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒருவரும் பழங்குடியினர் பற்றி எழுதும் ஆதிதிராவிடர் அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒருவரும் என 11 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இதனை ஊக்குவிக்கும் வண்ணம் இவர்களது சிறந்த இலக்கிய படைப்பினை வெளியிட ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது 2022-2023-ஆம் ஆண்டுமுதல் உதவித்தொகை ரூ.50,000/-லிருந்து ரூ.1,00,000/- ஆக உயர்த்தி வழங்கப்படவுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கு சில நிபந்தனைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

எழுத்தாளர்களுக்கு வயது வரம்பு இல்லை. கதை, கட்டுரை, கவிதை, வரலாறு, மற்றும் புதினம் ஆகியவை எதுவாகவும் இருக்கலாம்.

இருப்பினும் தமிழ் மொழியிலேயே படைப்பு இருக்க வேண்டும். பிறமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த தமிழ்மொழி படைப்பாகவும் இருக்கலாம்.

எம்.பில்., பி.எச்,டி., போன்ற படிப்புகளுக்குத் தயாரிக்கப்படும் ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்கு அவை அரிதான சிறப்புடையதாக இருக்க வேண்டும்.

படைப்புகள் 90 பக்கங்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

ஏற்கனவே சந்தையில் வெளியிடப்பட்டுள்ள படைப்புகளை கொண்டு விண்ணப்பித்தல் கூடாது.

ஒருமுறை விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளர் 5 ஆண்டுகளுக்கு பிறகே விண்ணப்பிக்க வேண்டும்.

படைப்புகளை தேர்ந்தெடுத்தல் குறித்து அரசால் அமைக்கப்பட்டுள்ள வல்லுநர் குழுவின் முடிவே இறுதியானது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews