ஆசிரியர் மனசு - ஆசிரியர்களின் அன்பான பரிந்துரைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 28, 2022

1 Comments

ஆசிரியர் மனசு - ஆசிரியர்களின் அன்பான பரிந்துரைகள்

ஆசிரியர் மனசு - ஆசிரியர்களின் அன்பான பரிந்துரைகள்:

முதலமைச்சர் அவர்களே

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களே ஆசிரியர்களின் அன்பான பரிந்துரைகள்:

சனி,ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் விடுமுறை கழிந்து திங்கட்கிழமை மீண்டும் பள்ளிக்குச் செல்ல குழந்தைகளுக்கு மட்டும் தான் காலம் காலமாக மனது வலித்துக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கு செல்லவே பாரமாக உள்ளது. நீங்கள் புதிதாக கொண்டு வந்துள்ள எண்ணும் எழுத்தும் கற்பித்தல் முறை மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ்நாட்டில் பணிபுரியும் 99 சதவீத இடைநிலை ஆசிரியர்கள் மிகுந்த மன உளைச்சலோடு வேலையை விட்டு ஓடிப் போய்விடலாம் என்ற மனநிலையில் இருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்பது தெரியவில்லை. எண்ணும் எழுத்தும் பயிற்சி எடுத்துக் கொண்ட இடைநிலை ஆசிரியர்களாகிய எங்களுக்கே கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருக்கிறது.எண்ணும் எழுத்தும் திட்டம் முதல்வரின் சீரிய சிந்தனையில் உதித்த கனவு திட்டம் என்று சொல்லப்பட்டது. இது உண்மைதானா?. கனவு திட்டம் என்றால் உங்களுக்கு புரிந்தது ஏன் எங்களுக்கெல்லாம் புரியவில்லை. மாணவர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தெரியாமல் தினந்தோறும் குமுரிக் கொண்டிருக்கிறோம்.

குழந்தைகளுக்கு ஆனா... ஆவன்னா.. ஒன்று இரண்டு..... A B C D.... சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களை போட்டு பாடாயப்படுத்துகிறீர்கள். இதை சொல்லிக் கொடுப்பதற்கு எதற்கு கிட்டத்தட்ட 40க்கும் குறையாத பதிவேடுகள். ஒன்றுமே புரியவில்லை. நாங்கள் பாடம் எடுப்பதை தவிர அதிகாரிகளுக்கு பயந்து பதிவேடுகளை தயார் செய்வதிலும் மற்ற அரசு துறையினரின் வேலைகளை செய்வதிலும் தான் எங்களின் வேலை நேரம் கடந்து கொண்டிருக்கிறது.

வருடம் முழுவதும் பாடம் நடத்துவதை தவிர மற்ற வேலைகள் தந்து விட்டு, மாணவர்களின் கற்றல் நிலையை மதிப்பீடு செய்யும்போது மட்டும் பாடம் சம்பந்தமாக மதிப்பீடு செய்கிறீர்கள். இது என்ன நியாயம். உண்மையில் நாங்கள் என்ன வேலை செய்தோமோ அதிலிருந்து தானே நீங்கள் எங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். ஆனா.. ஆவன்னா... கற்பிப்பதற்கு மாணவர்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்நாடு அரசாங்கம் கொண்டு வந்த கற்பித்தல் முறை நிறைய இருக்கிறது.

அதிலே DPEP ABL SABL New pedagogy தற்பொழுது எண்ணும் எழுத்தும்.

ஒவ்வொரு கற்பித்தல் முறையும் அறிமுகப்படுத்தும் பொழுது ஆஹா ஓஹோ என்று அறிமுகப்படுத்தப்படுகிறது .பிறகு அந்த கற்பித்தல் முறை முடக்கி வைக்கப்பட்டு புதிய கற்பித்தல் முறை வரும்பொழுது ஏன் அந்த கற்பித்தல் முறை முடக்கிவைக்கப்பட்டது என்பதற்கு எந்த ஒரு காரணமும் சொல்லப்படுவதே இல்லை.இப்படி தொடர்ந்து ஒவ்வொரு கற்பித்தல் முறையாக எலிகள் மீது நடத்தப்படும் பரிசோதனை போல இடைநிலை ஆசிரியர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படுகிறது.ஏன் இந்த குழப்ப நிலை?. படித்து விட்டு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு எப்படி கற்பிப்பது என்பது தெரியாதா?.நீங்கள் சொல்வது போல தான் கற்பிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வகுப்பறைக்கும் எந்திர மனிதர்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் அவை சரியாக செயல்படும்.

கற்பித்தல் என்பது ஒரு கலை. ஒரு கருத்தை மாணவர் இடத்தில் கொண்டு சேர்ப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும் எந்த மாதிரி கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பதிலே ஒவ்வொருவருக்கும் ஒரு நுட்பம் இருக்கும். ஆனால் நீங்கள் கொண்டு வந்திருக்கும் கற்பித்தல் முறைகள் எல்லாம் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வகுப்பறைகளை எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. பரிசோதனை முறைகளை கைவிட்டு ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் பூரண சுதந்திரம் அளிக்க வேண்டும். இவையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ளாமல் ஆசிரியர்களுக்கு கற்பித்தலில் சுதந்திரம் அளிக்காமல் இருந்தால் ஆசிரியர்களும் அதிகாரிகளுக்கு கட்டுப்பட்டு மனசாட்சியை அவிழ்த்து வைத்து விட்டு கட்டாயத்தினால் பதிவேடுகளை தயார் செய்து கொண்டு எல்லாம் சரியாக இருப்பது போல காட்டிக்கொண்டு இருப்பார்கள்.மற்ற கற்பித்தல் முறைகள் போல இதுவும்

ஒருநாள் உங்களால் மூடி வைக்கப்படும். அப்பொழுதும் எந்த காரணமும் சொல்ல மாட்டீர்கள். ஏனெனில் ஆட்சியாளர்களுக்கு அதிகாரிகள் என்றுமே உண்மையான தகவல்களை சொல்வதில்லை என்று நினைக்கிறேன்.

உங்களுக்கு மனசாட்சி இருந்தால் பதிவேடுகள் தொந்தரவுகளில் இருந்தும் கற்பித்தலில் சுதந்திரம் கொடுத்தும் எங்களை மகிழ்ச்சியோடு கற்பித்தல் பணியை செய்ய வழியை உருவாக்குங்கள். மிகுந்த மன உளைச்சலில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆசிரியர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். நன்றி .வணக்கம்.

1 comment:

  1. 100% உண்மை. கற்பிப்பதில் சுதந்திரம் இல்லை என்றால் கண்துடைப்பு கல்வியே வளரும். பதிவேடுகளில் நேரத்தை கடத்துவதும், மனதில் நிம்மதி இன்றியும் ஒவ்வொரு நாளும் யார் வருவார்கலோ என்ன ketpaargaloo, என்ற பயத்துடனும் பள்ளிக்கு வருவதாக உள்ளது. மாணவர்களின் முகத்தை பார்த்ததும் இவ்வளவு நாள் பொங்கிய மனது இப்போது பயப்படுகிறது. இன்னைக்கு யார் வந்து என்ன கேட்பார்களா. இவங்க என்ன சொதப்புவாங்கலோ என் பல்வேறு சிந்தனைகள் மனதில் வாட்டுகிறது. வேலைக்கு போகவே பிடிக்கவில்லை. உடம்பு சரியில்லாத சமயத்தில் கூட தினமும் குளுகோஸ் ஏத்திக்கிட்டு அந்த நிலையில் கூட பள்ளிக்கு senrirukkirom.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews