மாணவர் சேர்க்கைக்குத் தேவையான சான்றுகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 07, 2022

Comments:0

மாணவர் சேர்க்கைக்குத் தேவையான சான்றுகள் விரைவில் கிடைக்க நடவடிக்கை: வருவாய்த்துறை அமைச்சர்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு தேவையான இருப்பிட, வருமான, சாதி உள்ளிட்ட அனைத்து சான்றுகளும் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திருச்சியில் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தலைமை வகித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியது:

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் உள்ளது. அந்த பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றிற்கு உடனடியாக தீர்வு காண தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் குறிப்பாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ, மாணவியருக்கு தேவையான இருப்பிடச் சான்றிதழ், பெற்றோரின் வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவைகள் வழங்க வேண்டியுள்ளது.

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மட்டும் இதுவரை சுமார் 5.50 லட்சம் பேர் இதுபோன்று சான்றுகள் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அவற்றில் சுமார் 4.50 லட்சம் பேருக்கு சான்றுகள் வழங்கப்பட்டு விட்டாலும் 1 லட்சம் பேருக்கு மீதமுள்ளது. இன்னும் 2 நாட்களுக்குள் அனைவருக்கும் சான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதை செயல்படுத்தவும் அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வீட்டு மனை மற்றும் நிலப் பட்டா வழங்குவதிலும் பல்வேறு குளறுபடிகள் நடைபெறுவதாக சட்டமன்ற உறுப்பினர்கள் எங்களுடைய கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். சுமார் 30 ஆண்டு காலம் ஒரே இடத்தில் வசித்து வந்த நிலையிலும் பட்டா இல்லாமல் இருந்த நிலை உள்ளது. அவற்றுக்கு பட்டா செய்து தருமாறு கோரிக்கை மனுக்களை கொடுக்கும் போது அவற்றை எப்படி சட்டரீதியாக நிவர்த்தி செய்து கொடுக்க வேண்டுயுள்ளது.

சுமார் 50 ஆண்டுகாலமாக உள்ள புறம்போக்கு நிலங்களுக்கான பட்டாக்கள் வழங்குவதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் முதல்வருடன் கலந்து ஆலோசித்து அதனை நிவரத்தி செய்ய தயாராக இருக்கிறோம்.

தற்போது, தமிழகத்தில் நில அளவையர் பணியிடங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தற்காலிகமாக கிராம நிர்வாக அதிகாரிகள் அந்த பணிகளை செய்து வருகிறோம். மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் விரைவில் 800-க்கும் மேற்பட்ட நிரந்தர நில அளவையர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அதன்பின்னர் பட்டா வழங்கும் பிரச்னைகளில் தாமதம் இருக்காது.

தமிழகத்தில் முதியோர் தொகை தகுதி உள்ளவர்களுக்கு கட்டாயம் வழங்கப்படும். தகுதியல்லாதோருக்கு வழங்கப்பட்டு வந்தால் அவை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். திருச்சியில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு கையகப்பட்டுத்தப்பட்டுள்ள நிலத்தில் இதுவரை 25 ஹெக்டேர் நிலத்திற்கு உரிய பணத்தை வழங்கியுள்ளோம். விரைவில் மீதியுள்ள நிலத்துக்கும் வழங்கப்படும். மேலும் விமான நிலைய விரிவாக்கத்திற்கான நிலமெடுக்கும் பணியை தொடரவும் முடிவு செய்துள்ளோம். இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமே அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்னைகளை அறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதில், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி, போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ் எஸ்.சிவசங்கர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மக்களவை உறுப்பினர் சு. திருவாவுக்கரசு, வருவாய்த்துறை உயர் அலுவலர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் நான்கு மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews