நாளை பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு வெளியாவது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு ஆசிரியர் கூட்டணி கடிதம். - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 05, 2022

Comments:0

நாளை பள்ளிக்கல்வித்துறையின் முக்கிய அறிவிப்பு வெளியாவது தொடர்பாக கல்வி அமைச்சருக்கு ஆசிரியர் கூட்டணி கடிதம்.

05.07.2022
தமிழக ஆசிரியர் கூட்டணி

அரசு அறிந்தேற்பு எண்:36/2001

பெறுநர்:

மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,

 பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்,

 தலைமைச் செயலகம், சென்னை- 600009.

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு வணக்கம்...

தந்தி தொலைக்காட்சிக்கு நேற்று தாங்கள் அளித்துள்ள பேட்டியினை முழுவதும் கேட்டறிந்தோம். செய்தியாளர்களுக்கு பேட்டி அளிப்பதில் எப்போதும் போல சமயோசிதமும், சாதுர்யமும் நேற்றைய பேட்டியிலும் அமைந்திருந்தது... மகிழ்ச்சியை தருகிறது. சட்டப்பேரவையிலும் எல்லோரும் ரசிக்க கூடிய அளவில்  ஆற்றொழுக்கான நடையில் தாங்கள் உரையாற்றி வருவது கண்டு பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகிறோம். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் 6 ஆம் தேதி முக்கிய அறிவிப்புகள் வெளிவரும் என்று தெரிவித்து உள்ளீர்கள். பள்ளிக்கல்வித் துறையை பொறுத்த வரையில் முந்தைய ஆட்சியாளர்களால் கொண்டுவரப்பட்ட கல்வி நிர்வாக கட்டமைப்பை மாற்ற இயலாத சூழ்நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம், என்பதை எண்ணி நெஞ்சம் பொறுக்கமுடியாமல் ஒவ்வொரு ஆசிரியர்களும் இருந்து வருகிறார்கள். உ.பி மாடல் நிர்வாக கட்டமைப்பு நமக்கு தேவையில்லை. தமிழ்நாட்டினுடைய கல்வி நிர்வாக கட்டமைப்பினை தொடர்ந்து நாம் அமல்படுத்த வேண்டும். என்று தாங்கள் மூன்று முறை உறுதி அளித்து விட்டீர்கள்!.. தடையாக இருப்பது யார்?.. யார்?..

 கல்வித்துறையில் யோகி அரசின் கொள்கை கட்டமைப்பை தான் நாம் இன்னமும் நிறைவேற்றிக் கொண்டு இருக்க வேண்டுமா?..  தாய் தமிழுக்கு மறைந்த பின்னரும் பெருமையை தந்து கொண்டிப்பவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்...  அவரின் பெருமைக்குரிய பிள்ளை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழர்கள் எங்கிருந்தாலும் அனைவரும் தமிழால்    ஒன்று சேர முடியும் என்கிறார். வடவர் ஆதிக்கம் தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழின் பெருமையை  உணர்ந்த தாங்கள் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வி த்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறீர்கள்...  ஏன் அந்த நிதி ஆதாரம் இல்லாத கோரிக்கையை கூட நிறைவேற்ற முடியவில்லை. தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் அவர்கள் தமிழாய்ந்த பெருமைக்கு சொந்தக்காரர். தமிழக முதலமைச்சர் அவர்களின் முதன்மைச் செயலாளர்-1 அவர்கள் தமிழின்பால் ஆழ்ந்த பற்று உடையவர்.  மாநில பெருமையினை பாதுகாக்கவேண்டும் என்று சொல்லக்கூடியவர்.  பள்ளிக்கல்வி ஆணையரை பொருத்தவரையில் அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற மனப்பான்மை உடையவர். வட்டார கல்வி அலுவலர்களுக்கு   தண்டனையினைப் பிறப்பித்து ஆணை வழங்குவதும்,  பணிநிறைவு பெற்றவர்களை   பணியில் இருந்து விடுவிடுப்பதும் இவரது கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளார். தொடக்கக் கல்வித் துறையை எப்படி நடத்துவது?.. திண்டுக்கல் மாவட்டத்திற்கு நோடல் அலுவலராக உள்ள இணை இயக்குனர் திரு வெ.ஜெயக்குமார் அவர்கள் ஆணையரை கேட்காமல் தொடக்கக்கல்வித்துறையில் ஏதும் செய்யக்கூடாது என மாவட்டக் கல்வி அலௌவலரிடம்  எச்சரிக்கிறார்.  மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் 7,8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஆனால் திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் அவர்களை இணை இயக்குனர் வெ.ஜெயக்குமார் அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு ஏற்கனவே இரண்டு பேர் மனமொத்த மாறுதல் விண்ணப்பத்தினை அளித்திருக்கிறார்கள். அதில் ஒருவரின் பெயரை நீக்கிவிட்டு இன்னொருவரின் பெயரை சேர்த்து இன்றைக்கே மனமொத்த மாறுதல் ஆணை வழங்கவேண்டும் என்று அச்சுறுத்தியுள்ளார். இதுவரையில் எந்த ஆட்சியிலும் எந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் காலத்திலும் நடைபெறாத விதிமீறல்கள், அத்துமீறல்கள் தற்போது நடைபெற்று வருகிறது. என்பதை உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து தங்களின் பார்வைக்கு கொண்டு வருகிறோம். தேர்வுத் துறை உட்பட அனைத்து துறைகளையும் இவர் நிம்மதியாக  விடவில்லை. உறங்குகிற நேரத்தைத் தவிர மற்ற எந்த நேரமும் ஆசிரியர்களுக்கு எப்படியெல்லாம் பணிச்சுமை கொடுக்கலாம்?   என எண்ணி செயல்பட்டு வரும்  பள்ளிக்கல்வி  ஆணையர்..  அமைச்சர் கட்டுப்பாட்டில் வராத  இந்திய ஆட்சிப் பணித் துறை அலுவலர்கள், இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் எவராக இருப்பினும் பணியிட மாற்றம் செய்வதுதான் இதுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.  என்பதை எனது நீண்டகால பொதுவாழ்வில் பெற்ற அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.


6 ஆம் தேதி வெளியிடும் அறிவிப்பில் அரசாணை 101,108 ரத்து செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறை தனியாகவும், தொடக்கக் கல்வித்துறை தனியாகவும் சுதந்திரமாக செயல்பட வேண்டும். என்ற அறிவிப்பினை தாங்கள் வெளியிட்டால்  ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும், ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயமும் தங்கள் மீது கொண்டுள்ள  அன்பும், பற்றுதலும் பன்மடங்கு பெருகுவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதையும்  உள்ளத்து உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறோம்..


புலனத்தில் இந்த ஆட்சியில் ஆசிரியர்கள் அடிமை வம்சமாக  மாறி விட்டார்கள்... சரண்டர் ஆகிவிட்டார்கள்...  என்றெல்லாம் தொடர்ந்து பதிவுகள் வருவதை  எங்களால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும்?...  பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதைப் போல.. "எதையும் தாங்கும் இதயம் இருந்தாலும்".. இதையெல்லாம் எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையே?...

 1985 ஜாக்டீ போராட்டத்தில் 41 நாட்கள் சிறையில் இருந்த போது பெற்ற தாய் தந்தையர்  இறந்தபோது கூட ஜாமினில் வெளி வராத வீரவரலாறுக்கு சொந்தக்காரர்கள்   ஆசிரியர் பேரினம்...



அதேபோல 1988 நடைபெற்ற ஜாக்டீ ஜியோ  போராட்டத்தில்  சென்னை மவுண்ட் ரோட்டில் அமர்ந்து கொண்டு குதிரைப் படையை  எதிர்கொண்டவர்கள் எங்கள் மகளிர் அணியினர் ஆவார்கள்..



2003 டெஸ்மா போராட்டத்தை எதிர்கொண்டு போர்க்குணமிக்க வரலாறு படைத்த   வீரமிக்க ஆசிரியர்கள்- அரசுப்பணியாளர் சங்கங்கள்..

இந்த வரலாற்று நிகழ்வுகளை மறக்கத்தான் முடியுமா?.. எவராலும் மறுக்கத்தான் முடியுமா?..

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களை மட்டும் மீண்டும் ஒருமுறை தனியாக அழைத்து நடைமுறை சம்பவங்களை கேட்டறிய வேண்டுகிறோம்... வடமாநிலங்களில் தொடக்கக் கல்வித் துறைக்கு என தனி அமைச்சர்கள்  இருக்கிறார்கள் என்பதை எல்லாம்  தாங்களும் அறியாதவர்கள் அல்லர்; பள்ளிக் கல்வித்துறையில் முந்தைய ஆட்சியில் இழந்த உரிமையினை  மீண்டும் நிலைநாட்டி தருவீர்கள்... என்ற நம்பிக்கை உணர்வில் பயணித்து வருகிறோம்..

ஆட்சியின் மீதும் கட்சியின் மீதும் அதிக அக்கறை கொண்டவர்கள் என்ற உணர்வில் இதனை வெளிப்படுத்த வேண்டிய  கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்...

இதயப்பற்றுதலுடன்..

வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), தமிழக ஆசிரியர் கூட்டணி. அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews