ஆசிரியர் நியமனம்: கேள்விகளும் தீர்வும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 06, 2022

Comments:0

ஆசிரியர் நியமனம்: கேள்விகளும் தீர்வும்!

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைப் பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாகத் தேர்வுசெய்ய எடுக்கப்பட்ட முடிவு, நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, திரும்பப் பெறப்பட்டு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

இலவச, கட்டாயக் கல்விக்கான உரிமைச் சட்டம் 2009-ன்படி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெறுபவர்கள் மட்டுமே இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க முடியும். இதன் அடிப்படையிலேயே ஜெயலலிதா ஆட்சிக் காலம் வரை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலத்தில் இந்த நடைமுறை மாற்றப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்களின் தகுதியை நிர்ணயிக்கும் தேர்வாகவும், அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு ஏற்ப விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதற்கெனத் தனியாகப் போட்டித் தேர்வு (competitive exam) நடத்தப்பட்டு, ஆசிரியர்களைப் பணியில் அமர்த்துவது என்கிற புதிய அரசாணை அதிமுக ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டது. இதைக் கடுமையாக விமர்சித்து இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அப்போது பேசினார். kaninikkalvi.blogspot.com இந்த அரசாணை ரத்து செய்யப்படும் எனச் சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியும் அளிக்கப்பட்டது. பானை புதிது, சோறு பழையது

கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கூறியுள்ளபடி, அரசுப் பள்ளி நிர்வாகத்தில் மக்கள், பெற்றோர்களின் பங்கேற்பை உறுதிசெய்ய 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழு செயல்பட வேண்டும். கரோனா காலத்தில் வகுப்பறையில் இயல்பான கற்றல் கிடைக்காததால், மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக ‘இல்லம் தேடிக் கல்வித் திட்ட’த்தைத் தமிழக அரசு அறிவித்தது. இப்படி வெவ்வேறு நோக்கங்களுக்காகக் கொண்டுவரப்பட்டவற்றை ஒருங்கிணைத்து, ஆசிரியர் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறையாகத் தமிழக அரசு செயல்படுத்த எடுத்த முடிவு விமர்சனத்தையும் போராட்டங்களையும் உருவாக்கியது.

பள்ளிக் கல்வித் துறை சார்பாக ஜூன் 23-ல் வெளியிடப்பட்ட அரசாணையில், தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைக் கல்வி வரை காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை எட்டு மாத காலத்துக்குத் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழு சார்பாக நியமனம் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250, உயர்நிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.335, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.400 என அரசு சம்பளம் நிர்ணயித்திருந்தது. இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அரசாணை ஆசிரியர்கள் மத்தியிலும் கல்வியாளர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் வேலைக்காகக் காத்திருப்பவர்கள் மூன்று நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.kaninikkalvi.blogspot.com நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

பள்ளி மேலாண்மைக் குழு சார்பில் ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஆணையின் அடிப்படையில், புதிய வழிகாட்டு முறைகளை ஜூலை ஒன்றாம் தேதி அரசு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், இந்தப் பிரச்சினை சார்ந்து பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன: கேள்விகள்...

ஒன்று, அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைப் பூர்த்திசெய்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதித் தகுதிபெற்றவர்களின் எண்ணிக்கை தேவைக்கு அதிகமாக இருப்பதால், மீண்டும் ஒரு போட்டித் தேர்வு அடிப்படையில் பணி நியமனம்செய்வது என்கிற நடைமுறை சரிதானா? இந்த முறையைக் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டுவந்தபோது எதிர்த்த திமுக, தற்போது அதே நடைமுறையைப் பின்பற்ற முனைப்புக் காட்டுவது நியாயம்தானா?

இரண்டு, பள்ளி மேலாண்மைக் குழுக்களே ஆசிரியர்களைத் தற்காலிக அடிப்படையில் நியமிக்கலாம் என்கின்ற உத்தரவை வழங்கும் அளவுக்கு அரசு சென்றது ஏன்? பெற்றோர், ஆசிரியர், உள்ளாட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய, இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழு ஆசிரியர்களை நியமிப்பார்கள் எனில், இதற்காக உருவாக்கப்பட்ட அரசு நிர்வாக அமைப்புகள் எதற்காக உள்ளன என்கிற கேள்வி இயல்பாக எழுகிறது. மூன்று, இந்தக் கல்வி ஆண்டில் சுமார் 13,331 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டிய தேவை இருக்கும் நிலையில், அது குறித்து முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளைக் கல்வித் துறை மேற்கொள்ளாமல், எட்டு மாத காலத்துக்கு மட்டும் தற்காலிக ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு அவசரஅவசரமாக முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏன் உருவானது?

நான்கு, கல்வித் தகுதி, வேலை நேரம் என அனைத்தும் ஒரே மாதிரி இருந்தும் மிகக் குறைந்த ஊதியத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்தப் பேராசிரியர்கள் – அதிக ஊதியத்துடன் நிரந்தரப் பேராசிரியர்கள் என இரண்டு படிநிலையைக் கல்லூரிகளில் உருவாக்கப்பட்டுள்ள மோசமான சூழலில், அதேபோன்றதொரு நிலையை அரசுப் பள்ளி ஆசிரியர் நியமனத்திலும் உருவாக்குவது எந்த விதத்தில் சரி?

ஐந்து, அமைப்புசாரா தொழிலாளர்களுக்குக் குறைந்தபட்சக் கூலி மாதம் ரூ.21,000 நிர்ணயிக்கக் கோரி திமுக தலைமையிலான தொழிற்சங்கம் முதற்கொண்டு அனைத்துத் தொழிற்சங்கங்களும் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கும் சூழலில், அதைவிட மிகக் குறைவாக, அந்தப் பணத்தை வைத்து எந்த வகையிலும் குடும்பத் தேவையைப் பூர்த்திசெய்வதற்கு வாய்ப்பு இல்லாத அளவுக்குத் தற்காலிக ஆசிரியர்களுக்குத் தமிழ்நாடு அரசு ஊதியத்தை நிர்ணயிக்கலாமா? பேசாப் பொருளைப் பேசுக

மனிதவளக் குறியீடுகளில் தமிழகம் பல சாதனைகளைப் புரிந்துள்ளது. ஆனால், இன்றைக்கு மத்திய அரசின் நிதிக் கொள்கைகளின் காரணமாக மாநில அரசுகள் கடும் நிதிச் சுமையில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கின்றன.kaninikkalvi.blogspot.com எனவே, நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்காக மத்திய அரசு வகுக்கும், வரையறுக்கும் கொள்கைகளை அமலாக்க வேண்டிய நிலைக்குத் தமிழக அரசும் செல்கிறது.

இந்தப் புள்ளியில் தமிழ்நாடு அரசும், அறிவுத் துறையினரும் எந்தத் தளத்திலிருந்து செயலாற்ற வேண்டும் என யோசிக்க வேண்டி உள்ளது. நவீன தாராளமயமாக்கல் கொள்கையின் தாக்கங்களை மக்கள் மன்றத்தில் வெளிப்படையாகப் பேச வேண்டும். தென்னிந்திய மக்களின் நலனை முன்னிறுத்தும் பொருளாதாரக் கொள்கைக்கான தேவை வளர்த்தெடுக்கப்பட வேண்டும். தமிழக அரசு பொருளாதாரத் தளத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் சிக்கல்களையும் குறித்து மக்களோடு உரையாடுவதும், மக்களின் உரிமைப் போராட்டங்களும் இணைந்த பயணமே சமூகநீதியை நிலைநாட்டுவதற்கான தேவைகளாக உள்ளன.

- ஜி.செல்வா, தொடர்புக்கு: selvacpim@gmail.com

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews