தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, May 13, 2022

Comments:0

தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை?

மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடுத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே 12 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. முஸ்லிம் மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிந்து, தேர்வு எழுத வந்தனர். தேர்வுமைய கண்காணிப்பாளர் சரஸ்வதி, அந்த மாணவிகளை தேர்வு அறைக்குள் செல்ல விடாமல் தடுத்துள்ளார். ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்றும், அதை அகற்றி விட்டு சீருடையில் தேர்வு எழுதும்படியும் கூறி உள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 6 முஸ்லிம் மாணவிகளும், தாங்கள் அணிந்து வந்த ஹிஜாப்பை அகற்றி விட்டு, சீருடையில் தேர்வு எழுதினர் என்ற தகவலை அறிந்து மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் சமூக ஆர்வலர்கள் அரசு மேல்நிலைப் பள்ளி முன்பு போராட்டம் நடத்தி உள்ளனர். பா.ஜ.க. ஆட்சி நடத்தும் கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு, அம்மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகின்றது. அத்தகைய இந்துத்துவ சனாதன சக்திகளால் துணிச்சல் பெற்றுள்ள ஒருசிலர், தமிழ்நாட்டில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான மனநிலையுடன் செயல்பட்டு, மதவெறியைத் தூண்ட முயற்சிப்பதைத்தான் உளுந்தூர்பேட்டை நிகழ்வு காட்டுகின்றது.

இந்தியாவிலேயே மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் தமிழ்நாட்டு மண்ணில், மதவெறியைத் தூண்ட முயற்சிப்போரை, முளையிலேயே இனம் கண்டு கிள்ளி எறிய வேண்டும்.

உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முஸ்லிம் மாணவர்களை ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக் கூடாது என்று உத்தரவிட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர் மீது, கல்வித் துறை விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews