கிரீமிலேயர் வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, January 16, 2022

Comments:0

கிரீமிலேயர் வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

கிரீமிலேயர் வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும்: ராமதாஸ்

சென்னை: கிரீமிலேயர் வரம்பை 15 லட்சமாக உயர்த்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாச் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து விட்டது. இது சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனாலும், இந்த விஷயத்தில் இறுதி வெற்றியை எட்டுவதற்கு வெகு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஓபிசி கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற வல்லுனர் குழு பரிந்துரைக்கு 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்கான முயற்சிகள் நடந்த போது, அதை எதிர்த்து தமிழகத்திலிருந்து தான் முதல் குரல் எழுப்பப்பட்டது. 2020&ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி அறிக்கை மூலம் அந்தக் குரலை எழுப்பியது நான் தான். அதன்பின் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பல்வேறு அமைப்புகள் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்ததால், வல்லுனர் குழு பரிந்துரை மீது முடிவெடுப்பதை மத்திய அரசு கிடப்பில் போட்டது. அதன்பின் 2 ஆண்டுகள் ஆகும் நிலையில், இப்போது வல்லுனர் குழு பரிந்துரையை மத்திய அரசு முழுமையாக நிராகரித்து விட்டது.

கிரீமிலேயர் வருவாயைக் கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற பி.பி.சர்மா குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காக சமூகநீதி அமைச்சகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அமைச்சரவைக் குறிப்பை சுமார் இரு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அமைச்சரவைச் செயலகம் அண்மையில் திருப்பி அனுப்பியுள்ளது. அதே நேரத்தில், கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிடும் முறையை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்ற முடிவில் அரசு உறுதியாக உள்ளது. கிரீமிலேயர் வருமான வரம்பை இப்போதுள்ள ரூ. 8 லட்சத்திலிருந்து உயர்த்துதல், கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிடும் முறையை மறு ஆய்வு செய்தல் ஆகியவை குறித்து விவாதித்து முடிவெடுக்கும்படியும், அதன்பின்னர் அந்த முடிவை அமைச்சரவை ஆய்வு செய்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் சமூகநீதித் துறையை மத்திய அமைச்சரவைச் செயலகம் அறிவுறுத்தியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிடுவதில் ஊதியத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று இப்போது தீர்மானித்துள்ள மத்திய அரசு, இந்த நிலையை மாற்றிக் கொள்ளக்கூடும் என்பது தான் அதற்கு பொருள். இப்போதைய முடிவே இறுதி முடிவாக இருக்க வேண்டும் என்பதே பா.ம.க.வின் நிலை. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ரூ.8 லட்சத்திற்கும் குறைவான ஆண்டு வருவாய் ஈட்டும் குடும்பத்தினருக்கு மட்டும் மத்திய அரசின் கல்வி - வேலைவாய்ப்புகளில் 27% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதற்கும் கூடுதலாக வருவாய் ஈட்டும் குடும்பங்கள் கிரீமிலேயர் என்று கருதப்பட்டு, அவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. கிரிமீலேயர் வரம்பை கணக்கிடும் போது, விவசாயம் மற்றும் ஊதியம் மூலம் கிடைக்கும் வருமானம் கணக்கில் கொள்ளப்படக்கூடாது; பிற ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானம் மட்டும் தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்று 1993-ஆம் ஆண்டு ஓபிசி இட ஒதுக்கீடு முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட போது மத்திய அரசு வெளியிட்ட அலுவலக குறிப்பாணையில் மிகத் தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. அதை சிதைப்பதற்கான எந்த முயற்சியையும் மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது.

கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயைக் கணக்கிடும் போது ஊதியத்தை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று 1993-ஆம் ஆண்டில் அப்போதைய நரசிம்மராவ் அரசு தீர்மானித்ததற்கு, சமூகநீதியை பின்னணியாகக் கொண்ட பல காரணங்கள் உள்ளன. அவற்றின் நோக்கங்களுக்கு எதிரான வகையில், ஊதியமும் கணக்கில் சேர்க்கப்பட்டால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் மாத வருமானம் ரூ.67,000 இருந்தால் அக்குடும்பத்தின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு விடும். இதைவிட மோசமான சமூக அநீதி எதுவும் இருக்க முடியாது. எனவே, கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிடும் முறையை மறு ஆய்வு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டு, 1993-ஆம் ஆண்டு குறிப்பாணையின்படி, ஊதியம் தவிர்த்த பிற ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் வருமானம் மட்டுமே கிரீமிலேயர் வரம்புக்கான வருவாயை கணக்கிட எடுத்துக் கொள்ளப்படும் என அறிவிக்க வேண்டும். மற்றொருபுறம், கிரீமிலேயர் வரம்பு உடனடியாக உயர்த்தப்பட வேண்டும். கிரீமிலேயர் வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தப்பட வேண்டும். கடந்த 2013ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட கிரீமிலேயர் வருமான வரம்பு, 4 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது. அடுத்து 2020-ஆண்டில் அடுத்த உயர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்பட்டிருந்தால், 2023-ஆம் ஆண்டில் அதற்கு அடுத்த உயர்வு அறிவிக்க வேண்டியிருக்கும். ஆனால், 2020-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்படாத நிலையில், அடுத்த ஆண்டுக்கான தவணையையும் சேர்த்து கிரீமிலேயர் வரம்பை ரூ.15 லட்சம் ஆக உயர்த்தி, சமூகநீதியைக் காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். *◦•●◉✿தின📡தரணி✿◉●•◦*

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews