ராணுவ கல்லுாரியில் இந்தாண்டு மாணவியருக்கும் அட்மிஷன் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 07, 2021

Comments:0

ராணுவ கல்லுாரியில் இந்தாண்டு மாணவியருக்கும் அட்மிஷன்

ராணுவ கல்லுாரியில் இந்தாண்டு மாணவியருக்கும் அட்மிஷன்

சென்னை:இந்திய ராணுவ கல்லுாரியில், இந்த ஆண்டு முதல் மாணவியரும் சேர்க்கப்படுகின்றனர். இதற்கான நுழைவு தேர்வுக்கு, 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், இந்திய தேசிய ராணுவ கல்லுாரி உள்ளது. இதில், 7ம் வகுப்பு படிக்கும் அல்லது 7ம் வகுப்பு முடித்துள்ள 11.5 வயது முதல் 13 வயது வரையான மாணவர்கள் மட்டுமே சேர முடியும். இதுவரை, ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வு மற்றும் கல்லுாரியில் மாணவியர் சேர அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாணவி வழக்கு தொடர்ந்தார்.

அவகாசம்

விசாரணையின் போது, தேசிய ராணுவ அகாடமியில் அடுத்த ஆண்டு நுழைவு தேர்வு எழுத, மாணவியருக்கு அனுமதி வழங்க உள்ளதாக மத்திய அரசு உறுதி அளித்தது. அடுத்த ஆண்டு கல்லுாரியில் சேருவோருக்கு, இந்த ஆண்டு டிசம்பரில் நடக்கும் நுழைவு தேர்வுக்கே, மாணவியர் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, ராணுவ கல்லுாரி படிப்பில் சேரும் நுழைவு தேர்வுக்கு, இந்த ஆண்டே மாணவியர் விண்ணப்பிக்கலாம் என தேசிய ராணுவ கல்லுாரி அறிவித்துள்ளது. வரும் 15ம் தேதிக்குள் இதற்கான விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும் என மாணவர்கள் மற்றும் மாணவியர் என இரு பாலருக்கும், அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ராணுவ கல்லுாரியின் விண்ணப்பங்களை பெறும் நிறுவனமாக, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயல்படுகிறது.

இணையதளம்

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிவிப்பு: அடுத்த ஆண்டு ஜூலையில், ராணுவ கல்லுாரி படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு டிச.,18ல் நடக்கிறது. தேர்வு எழுத உள்ளவர்கள், 2009 ஜூலை 2 முதல் 2011 ஜனவரி 1க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். தமிழக மாணவர்களுக்கு, சென்னையில் மையம் அமைக்கப்படும்.

ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு தொடர்பான மூன்று தாள்களுக்கு தேர்வு நடக்கும். ஆங்கிலம் தவிர்த்த இரண்டு தேர்வுகளும், ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே நடக்கும். தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ - மாணவியர், தபால் வழியே விண்ணப்பம் மற்றும் அதற்கான கையேட்டை, ராணுவ கல்லுாரியில் இருந்து பெற்று கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி.,யில் விண்ணப்பம் வழங்கப்படாது. வேறு நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பம் செல்லாது. ராணுவ கல்லுாரியின்,www.rimc.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்ப கட்டணமாக, 600 ரூபாய் செலுத்த வேண்டும்.

தமிழக மாணவ - மாணவியர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகலுடன், நவ., 15க்குள் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை அணுக வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews