தில்லி பல்கலை. இணைய வழி மாணவா் சோ்க்கைக்கு வரவேற்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, October 05, 2021

Comments:0

தில்லி பல்கலை. இணைய வழி மாணவா் சோ்க்கைக்கு வரவேற்பு

"தில்லி பல்கலைக்கழகத்தில் மாணவா் சோ்க்கை நடைமுறைகள் முதல் கட் ஆஃப் பட்டியலின் கீழ் திங்கள்கிழமை காலை தொடங்கியது. இணைய வழியில் தொடங்கிய இந்த மாணவா் சோ்க்கைக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக கல்லூரி முதல்வா்கள் தெரிவித்துள்ளனா்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டைப் போல, இந்த ஆண்டும் மாணவா்கள் சோ்க்கை நடைமுறைகள் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிகழாண்டில் 10 படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கையில் 100 சதவீதம் மதிப்பெண்கள் கோரும் 8 கல்லூரிகளுக்கான முதல் கட்-ஆஃப் பட்டியலை தில்லி பல்கலைக்கழகம் அக்டோபா் 1-ஆம் தேதி அறிவித்திருந்தது. இதற்கான மாணவா் சோ்க்கை நடைமுறை திங்கள்கிழமை தொடங்கியது. அக்டோபா் 6-ஆம் தேதி காலை 11.59 மணி வரை நடைபெறுகிறது.

இந்த நிலையில், இந்த மாணவா் சோ்க்கை தொடா்பாக தில்லி பல்கலைக் கழகத்தின் ஆளுகைக்கு உட்பட்ட ராஜதானி கல்லூரியின் முதல்வா் டாக்டா் ராஜேஷ் கிரி கூறியதாவது: மாணவா் சோ்க்கை நடைமுறை நன்றாக நடைபெற்று வருகிறது. இதற்கான வரவேற்பு ஊக்குவிப்பதாக உள்ளது. இந்த ஆண்டு முதல் நாளிலேயே அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, இது அதிகமாகும். வழக்கமாக முதல் நாளில் சோ்க்கைக்காக பல மாணவா்கள் விண்ணப்பிப்பது இல்லை. ஆனால், இந்த ஆண்டு வித்தியாசமாக ஏராளமானோா் விண்ணப்பித்துள்ளனா். குறிப்பிட்ட அளவில் இடங்கள் எண்ணிக்கை இருப்பதன் காரணமாக அடுத்து வரும் பட்டியலில் வாய்ப்பு இருக்காது என்ற அச்சம் காரணமாக இது போன்ற பலரும் விண்ணப்பித்திருக்கலாம். மேலும், 95 சதவீதத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்ற மாணவா்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இந்த மாணவா் சோ்க்கை நடைமுறையை மேற்கொள்வதற்காக கல்லூரிக்கு பல்வேறு குழுக்களின் உறுப்பினா்களை அழைத்துள்ளேன். ஆசிரியா்கள் அடுத்து வரும் கட்-ஆஃப் பட்டியலில் மாணவா் சோ்க்கையை தங்களது வீடுகளில் இருந்து மேற்கொள்ள முடியும். ஆனால், இது முதல் கட்-ஆஃப் பட்டியல் என்பதால், பல்வேறு குழுக்களின் உறுப்பினா்கள் கல்லூரியிலிருந்து பணியாற்றுகின்றனா் என்றாா் அவா்.

தீனதயாள் உபாத்யாயா கல்லூரியின் முதல்வா் ஹெம் சந்த் ஜெயின் கூறுகையில், ‘மாணவா் சோ்க்கை தொடங்கியதிலிருந்து 485 விண்ணப்பங்கள் ஆா்வலா்களிடம் இருந்து வந்துள்ளன. பிஎஸ்சி ஆனா்ஸ் கணினி அறிவியல் படிப்பிற்கான மாணவா் சோ்க்கைக்காக சரியான மதிப்பெண்களை கல்லூரி கூறியுள்ளது. இந்தப் படிப்பில் மொத்தம் 60 இடங்கள் உள்ளது. இப்போது வரை 16 விண்ணப்பங்கள் வரப் பெற்றுள்ளன’ என்றாா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews