அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, September 15, 2021

1 Comments

அரசுப் பணிகளில் பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு: வரவேற்பும் எதிர்ப்பும்!

சட்டமன்றத்தில் மனித வள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கையில், “நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ளப்படும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடு 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக உயர்த்தப்படும்” என அத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு பெண்களிடம் வரவேற்பும், ஆண்களிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.


இந்த அறிவிப்புக்கு அரசுப் பணிகளுக்கு தயாராகும் பெண்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆண்களுக்கு சமமான வேலைவாய்ப்பை பெண்களும் பெறுவார்கள், ஏராளமானோர் நிதிச் சுதந்திரம் அடைவார்கள். பெண்களுக்கு அதிகாரம் கிடைக்கும். குடும்பச் செலவுகள் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று ஆண்களின் சுமையையும் குறைக்க முடியும். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அதிகரித்திருப்பது ஆண்களுக்கும் பயன் தரக்கூடியது என்பது அவர்களின் வாதமாக உள்ளது. ஆண்கள் தரப்போ, “30 சதவிகித இடஒதுக்கீடு இருந்த போதே டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகளில் சுமார் 60% பணியிடங்களை பெண்களே பெறுகிறார்கள். காரணம் 30 சதவிகிதத்தோடு பொது பிரிவான 70 சதவிதத்திலும் அவர்களால் போட்டி போட முடியும். தற்போது அதனை 40 சதவிகிதமாக உயர்த்தியிருப்பதால் 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் அவர்களுக்கு தான் செல்லும்.” என்கின்றனர்.


“1989-ல் தி.மு.க., ஆட்சியில் பெண்களுக்கு வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைக்க வேண்டும் என அப்போதைய முதல்வர் கருணாநிதி 30 சதவிகித இடஒதுக்கீட்டை அறிவித்தார். அன்றைக்கு குழந்தைத் திருமணம், பெண்களுக்கு பள்ளி கல்வி, உயர் கல்வி மறுப்பு, வேலைவாய்ப்பில் பெரியளவில் ஆண், பெண் இடையே ஏற்றத்தாழ்வு இருந்தது. அதனால் அத்திட்டம் பெரிய அளவில் பாராட்டைப் பெற்றது. தொலை நோக்கு திட்டமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு ஸ்டாலின் அரசு அறிவித்திருப்பது வாக்கு அரசியலுக்காக செய்யப்படும் ஒன்றோ என்ற சந்தேகம் எழுகிறது.” என்கின்றனர்.


சமவாய்ப்பு ஏற்கனவே இருக்கிறது!


அரசுப் பணிக்கு தயாராகும் ஆண்கள் இது தொடர்பாக சமூக ஊடகங்களில் #JusticeForMenInTNPSC என்ற ஹாஷ்டேக் மூலம் தி.மு.க., அரசின் இந்த அறிவிப்பை விமர்சிக்கின்றனர். “2019 குரூப் 1 தேர்வில் 360 பணியிடங்களில் சுமார் 65 சதவீத இடங்களை பெண்களே நிரப்பினார்கள். குரூப் 2 மற்றும் 4 பணிகளுக்கான தேர்வுகளிலும் இது தான் நிலைமை.


ஏற்கனவே பெண்கள் சமவாய்ப்பு பெறும் நிலையில் தற்போது பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 10 சதவிகிதம் உயர்த்தி வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் இந்த முடிவை எந்த அடிப்படையில் எடுத்தார்கள்? டி.என்.பி.எஸ்.சி.,யிடம் கடந்த கால பணி நியமன தரவுகளை கேட்டுப் பெற்றிருந்தாலே இவ்விவரம் அமைச்சருக்கு தெரிந்திருக்கும்.


அதில் பெண்களுக்கு சமவாய்ப்பு இல்லை என காட்ட முடியுமா? ஓட்டரசியலுக்காகவும், விளம்பரத்துக்காகவும் இம்முடிவு எடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது.” என்கின்றனர். கட்சியிலும் அமல்படுத்தலாமே!


மேலும் சில ஆண்கள் இந்த அறிவிப்பு தொடர்பாக தங்கள் பதிவுகளில் கூறியிருப்பதாவது: “மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியமானது என்பதை உணர்ந்து இந்த இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


இந்த பாடம் எல்லாம் பொது மக்களுக்கு மட்டும் தானா? நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., சார்பில் 173 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் அதில் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை வெறும் 12. ஏன் இதிலும் 40% இடங்களை பெண்களுக்கு ஒதுக்கலாமே. உண்மையில் அரசியலில் தான் பெண்களுக்கு சம வாய்ப்பு கிடைப்பதில்லை.


ஆண்களால் ஏகப்பட்ட தடைக்கற்கள் போடப்படுகின்றன. 12 வேட்பாளர்களில் 6 பேர் வெற்றிப் பெற்றனர். அவர்களில் 2 பேர் தான் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பு எல்லாம் வழங்கப்படவில்லை. இவர்கள் பாலின சமத்துவம் பேசுவது எல்லாம் ஏமாற்று வேலை.” என்கின்றனர்.

1 comment:

  1. மகளிருக்கு இட ஒதுக்கீடு என்பது சட்டசபை தேர்தலிலும் ஏன் மக்களவை தேர்தலிலுமே இவர்கள் இல்லாமல்(ஆண்கள்) 100%ம் ஒதுக்கீடு செய்து திமுக அரசியல்வாதிகளின் கணக்குப்படி எத்தனை வருடங்கள் ஆண்கள் பெண்களை ஆதிக்கம் செய்தனரோ தமிழ்நாட்டை பெண்களிடமே ஒப்படைப்பு செய்யலாமே...

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews