பள்ளிகளில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை அமைக்க உதவி: நாடாளுமன்றக் குழுவிடம் இஸ்ரோ சம்மதம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 03, 2021

Comments:0

பள்ளிகளில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை அமைக்க உதவி: நாடாளுமன்றக் குழுவிடம் இஸ்ரோ சம்மதம்

கரோனா வைரஸ் பரவலால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில், நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையை அமைக்கத் தேவையான தொழில்நுட்ப உதவிகளை வழங்க, கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் இஸ்ரோ சம்மதம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு நேரடியாகச் செல்வதில் தடை ஏற்பட்டது. ஆன்லைன் மூலமும், யூடியூப் மூலமும்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

கடந்த ஓராண்டாக கற்றலில் ஏற்பட்ட இடைவெளியைச் சமன் செய்யும் நோக்கில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உதவியுடன் வகுப்பறை அமைக்க உதவி செய்யக் கோரி இஸ்ரோவிடம், கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டிருந்தது.

கல்விக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம், நிலைக்குழுத் தலைவர் எம்.பி. வினய் சகாஸ்ரபுத்தே தலைமையில் நேற்று நடந்தபோது இந்த விவகாரம் குறித்துப் பேசப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, தெலங்கானா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கல்வித்துறைச் செயலாளர்கள் பங்கேற்றனர். இஸ்ரோ சார்பிலும் விஞ்ஞானிகள் பங்கேற்று, நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் சாட்டிலைட் டிவி வகுப்பறை அமைப்பது தொடர்பான செயல்திட்டத்தையும், விரிவான விளக்கத்தையும் அளித்தனர்.

இந்தக் கூட்டம் குறித்து நிலைக்குழு வட்டாரங்கள் கூறுகையில், 'இஸ்ரோ அமைப்பிலிருந்து விஞ்ஞானிகள் நிலைக்குழுக் கூட்டத்தில் பங்கேற்று, செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறையால் மாணவர்களுக்கு விளையும் பயன், செயல்பாடு ஆகியவை குறித்து விரிவாக விளக்கினர். மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சக அதிகாரிகள், தூர்தர்ஷன் தொலைக்காட்சியைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்றனர்.

மாநில அரசுகள் எங்கள் உதவிகளைப் பயன்படுத்த விருப்பமாக இருந்தால் செயற்கைக்கோள் உரிமையை வழங்கி, பள்ளிக்கூடங்களில் செயற்கைக்கோள் வகுப்பறையை அமைத்து தொழில்நுட்ப உதவிகள் வழங்க இஸ்ரோ தயாராக இருக்கிறது எனத் தெரிவித்தனர். உத்தரப் பிரதேசம், பிஹார் மாநில அரசுகள் 10 முதல் 12-ம் வகுப்புகளை விரைவில் தொடங்க இருப்பதாக இந்தக் கூட்டத்தில் தெரிவித்தனர். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்துவருவதாகவும் தெரிவித்தனர்.

செயற்கைக்கோள் தொலைக்காட்சி வகுப்பறை உருவாகும்பட்சத்தில் மாணவர்கள் நேரடியாகப் பள்ளிக்கு வரமுடியாவிட்டாலும், கல்வி கற்க முடியும். கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் ஸ்மார்ட்போன், இணையதள வசதியின்றி பாடங்களைத் தொலைக்காட்சி மூலமே கற்க முடியும்.

இதற்கிடையே லடாக், ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விளையாட்டு அரங்குகள் ஆகியவற்றைப் பார்வையிட அடுத்த வாரம் 5 நாட்கள் பயணமாக 30 பேர் கொண்ட நாடாளுமன்றக் குழு செல்கிறது. இந்தக் குழுவில் கல்வி, மகளிர், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுப் பிரிவுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் செல்கிறார்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews