அரசுக் கல்லூரிகளில் உள்ள உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதைத் தள்ளிப்போடுவதற்குக் கடந்த ஆட்சிக் காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட அணுகுமுறையையே புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசும் பின்பற்றப்போகிறது என்பதற்கான சமிக்ஞைகள் தெளிவாகவே தெரிய ஆரம்பித்திருக்கின்றன. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அரசுக் கல்லூரிகளில் நியமிக்கப்பட்ட கெளரவ விரிவுரையாளர்கள், உதவிப் பேராசிரியருக்கான கல்வித் தகுதிகளைப் பெற்றிருந்தும்கூட அவர்களது பணி இன்னும் நிரந்தரமாக்கப்படாத சூழலில், மேலும் புதிதாக கெளரவ விரிவுரையாளர்களை நியமிக்கத் திட்டமிட்டிருப்பது தமிழ்நாட்டின் உயர் கல்வித் துறையைச் சூழ்ந்துள்ள இருள் மேகங்கள் விலக வழியே இல்லையோ என்ற கேள்வியை எழுப்புகிறது.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரை நடைமுறைக்கு வந்த பிறகு, கெளரவ விரிவுரையாளர்களின் ஊதியம் அதிகபட்சம் ரூ.50,000 ஆக இருக்கலாம் என்று 2019 ஜனவரியிலேயே பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நிர்ணயித்துள்ளபோதிலும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், முந்தைய அதிமுக அரசு அவசர அவசரமாக அவர்களின் ஊதியத்தைக் கடந்த பிப்ரவரியில் ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தியது. சென்னை உயர் நீதிமன்றம் சிறப்புக் கவனம் எடுத்துக்கொண்டதன் காரணமாக, அரசு சட்டக் கல்லூரிகளின் கெளரவ விரிவுரையாளர்களுக்கு மட்டும் 2019 பிப்ரவரியிலிருந்து ரூ.30 ஆயிரம் ஊதியமாக வழங்கப்பட்டுவருகிறது. அலுவலக உதவியாளரைக் காட்டிலும் கெளரவ விரிவுரையாளர்களுக்குக் குறைவாக ஊதியம் கொடுக்கும் முரண்பாட்டை நீதிமன்றம் தனது உத்தரவில் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உதவிப் பேராசிரியர் பணியிடத்துக்கு யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியைப் பெற்றுள்ளவர்களையே கெளரவ விரிவுரையாளர்களாக நியமிக்க வேண்டும். ஆனால், கடந்த கால நியமனங்களில் இந்த விதிமுறை முழுமையாகப் பின்பற்றப்படாத காரணத்தால், சில விரிவுரையாளர்களுக்குப் பணிமூப்பு இருந்தாலும் பணிவரன்முறைக்கு வாய்ப்பில்லாத சூழல் உருவாகியுள்ளது. நிரந்தரப் பணியிடங்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், அவற்றுடன் 20% அதிகமாக கெளரவ விரிவுரையாளர்களை நியமிப்பதற்கு மட்டுமே யுஜிசி அனுமதிக்கிறது. ஆனால், அரசு புதிதாகத் தொடங்கியிருக்கும் கலைக் கல்லூரிகளிலும் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளிலும் கெளரவ விரிவுரையாளர்களே பெரும் எண்ணிக்கையில் அமர்த்தப்பட்டுள்ளனர். பணிமூப்பைக் கணக்கில் கொள்ளும்போது, பல்கலைக்கழகங்களின் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றியதும் கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் நெடுநாளாக முன்வைக்கப்பட்டுவருகிறது. அனைத்துக்கும் மேலாக, பணி நிரந்தரத்துக்கு வாய்ப்புள்ளது என்ற காரணத்தின் பெயரில் கௌரவ விரிவுரையாளராக நியமிப்பதற்கும்கூட லஞ்சம் பெறப்படுகிறது என்ற பேச்சுகளும் உள்ளன.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்வதை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு, கல்லூரி அளவிலும் கலை, அறிவியல் துறைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் முன்வந்து படிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்குத் தகுதியான பேராசிரியர்களை நியாயமான ஊதியத்துடன் நியமிக்க வேண்டியது முதல் தேவை. உயர் கல்வித் துறைக்கான செலவினங்களும் மனித வள மேம்பாட்டுக்கான முதலீடாகவே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்வதை ஊக்குவிக்கும் தமிழ்நாடு அரசு, கல்லூரி அளவிலும் கலை, அறிவியல் துறைகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் முன்வந்து படிப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். அதற்குத் தகுதியான பேராசிரியர்களை நியாயமான ஊதியத்துடன் நியமிக்க வேண்டியது முதல் தேவை. உயர் கல்வித் துறைக்கான செலவினங்களும் மனித வள மேம்பாட்டுக்கான முதலீடாகவே கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.