இடையூறின்றி மாத ஊதியம்; 21 அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 08, 2021

Comments:0

இடையூறின்றி மாத ஊதியம்; 21 அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கோரிக்கை

இடையூறின்றி மாத ஊதியம்; புதுச்சேரியில் 21 அரசுக் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் கோரிக்கை: கிரண்பேடியால் 4 ஆண்டுகளாகத் தாமதம்

இடையூறின்றி ஊதிய தினத்தன்று மாத ஊதியத்தை வழங்குமாறு புதுச்சேரியில் 21 அரசு சொசைட்டி கல்லூரி ஊழியர்கள், பேராசிரியர்கள் கோருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை நிதி ஒப்புதல் பெறும் முறையை மாற்றி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒப்புதல் பெறவேண்டும் என்று அப்போதைய ஆளுநர் கிரண்பேடி அமல்படுத்திய நடைமுறை தொடர்வதால் மாத ஊதியம் சரியாகக் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். 1986 முதல் புதுவை அரசு, 13 உயர்கல்விக் குழுமங்களின் மூலம் பல உயர்கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருகிறது. இவ்வாறாக மொத்தம் 21 உயர் கல்வி நிறுவனங்கள், புதுவை, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் செயல்பட்டு வருகின்றன. இந்த உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்துக்கும் சார்புத் துறைகள் மூலம் முழுமையான நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உயர்கல்வி நிறுவனங்களில் சுமார் 1000 பேராசிரியர்களும், 4500 ஆசிரியரல்லாத ஊழியர்களும் பணியாற்றி வருகின்றனர்.


பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், பட்ட மேற்படிப்பு, கலை அறிவியல், வேளாண்மை, கல்வியியல் மற்றும் பல்கலைப் பாடப்பிரிவுகளில் தரம் வாய்ந்த உயர்கல்வியை இந்த உயர்கல்வி நிறுவனங்கள் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன. கடந்த 2016-17ஆம் நிதியாண்டு வரை இந்நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, மற்ற அரசு ஊழியர்களுக்கு இணையாக எந்தவிதப் பாரபட்சமும் இன்றி ஊதியம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் கடும் பாதிப்பில் உள்ளனர். இதுபற்றிப் புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லூரிகளின் கூட்டமைப்புத் தலைவர் முனைவர் டி.ராம்குமார் கூறும்போது, "கடந்த 4 ஆண்டுகளாக, அதாவது 2017-18ஆம் நிதியாண்டு முதல் ஊதியம் சரிவர வழங்கப்படுவது இல்லை. பெரும்பாலான நேரங்களில் மாதக்கணக்கில் ஊதியம் இழுத்தடிப்பு செய்யப்பட்டது. அப்போதைய துணைநிலை ஆளுநர், நிதித்துறையின் செயல்பாட்டில் கொண்டுவந்த கடுமையான கட்டுப்பாடுகளே இதற்குக் காரணம் என்று அரசுத் தரப்பில் குறிப்பிட்டனர்.

உதாரணமாக 2017ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட ஆண்டுக்கு ஒரு முறை ஒப்புதல் முறையை மாற்றி, மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஒப்புதல் வழங்கும் முறையை அமல்படுத்தியதன் மூலம், உரிய நேரத்தில் இந்த உயர் கல்வி நிறுவனங்களுக்கு நிதி கிடைப்பது தடுக்கப்பட்டது.

இதனால் உரிய முறையில் தங்களது குடும்பங்களைப் பராமரிக்க முடியாமலும், வங்கிக் கடன் உள்ளிட்ட மாதத்தவணைகளை உரிய நேரத்தில் கட்ட முடியாமலும் ஆசிரியர்களும் ஊழியர்களும் தவித்து வருகின்றனர். உதாரணமாகக் கடந்த மாத ஊதியம் இன்னும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இதுகுறித்து அப்போதைய துணைநிலை ஆளுநர், நிதித்துறைச் செயலர் ஆகியோரிடம் எடுத்துரைத்தோம். ஆனால், எந்தப் பலனும் இல்லை. எனவே 2017-க்குப் பின் கொண்டுவரப்பட்ட இந்தக் கடுமையான கட்டுப்பாடுகளைக் களைந்து, அதற்கு முன் இருந்தது போல் ஆண்டுக்கு ஒரு முறை ஒப்புதல் கொடுத்து இந்த 21 உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உரிய நிதியை ஒதுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இதுகுறித்துப் பொருளாளர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் தங்கு தடையற்ற மாத ஊதியத்தை மற்ற அரசு ஊழியர்களுக்குத் தருவதுபோல் கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்று ஆளுநர், முதல்வர், நிதித்துறைச் செயலரிடம் மனு தந்துள்ளோம். ஆண்டுக்கு ஒருமுறை ஒப்புதல் வழங்கும் முறையை நடைமுறைப்படுத்தவும் கோரியுள்ளோம். 2021-22 நிதிநிலை அறிக்கையில் இதைச் செயல்படுத்தவும் கோரியுள்ளோம்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews