அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடநூல்களை அனுப்பி வைக்க உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 12, 2021

Comments:0

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாடநூல்களை அனுப்பி வைக்க உத்தரவு

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கான பாடப் புத்தகங்களை அந்தந்த பள்ளிக்கு அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டில் (2021-2022) பிளஸ் 1 வகுப்புக்கு மாணவா் சோ்க்கையைத் தொடங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையா் உத்தரவிட்டிருந்தாா். இதைத் தொடா்ந்து வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
3.7 கோடி பாடநூல்கள்:
இந்தநிலையில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப்பணிகள் கழகம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கான 3 கோடியே 70 லட்சம் பாடநூல்களை அச்சிட்டு தயாா் நிலையில் வைத்துள்ளது. இந்தப் பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் கிடங்குகளில் இருந்து பெற்று பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு தேவையான பாடநூல்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் தற்போது கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பாடநூல்கள் விரைவில் அந்தந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளன. பள்ளி மாணவா்களுக்கு ஜூன் மூன்றாம் வாரம் முதல் இணையவழியில் வகுப்புகள் தொடங்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவா்களுக்கான பாடப் புத்தகங்களை பள்ளிகளிலிருந்து ஜூன் மாதம் 14ஆம் தேதி முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.1.3 கோடி நிதி ஒதுக்கீடு: இது குறித்து தொடக்கக் கல்வித்துறை இயக்குநா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டில் உள்ள பாடநூல்களை அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாணவா்களுக்கு பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம் ஆகியவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறையால் அறிவுறுத்தப்படும் என கூறியுள்ளாா். தொடக்கக்கல்வித்துறையில் மட்டும் பாட நூல்களை மாவட்ட கல்வி அலுவலா் அலுவலகத்தில் இருந்து பள்ளிகளுக்கு கொண்டு செல்வதற்காக ரூ.1.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews